16 ஆவது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று சென்னையில் நடந்த 17 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 10 ரன்களில் வெளியேற பின் வந்த படிக்கல், பட்லருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். படிக்கல் 38 ரன்களில் வெளியேற தொடர்ந்து வந்த ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.
தொடர்ந்து அஸ்வின், பட்லருக்கு கைக்கொடுத்து அவருக்கு இணையாக ஆட ராஜஸ்தான் அணியின் ரன்கள் வேகமாக உயர்ந்தது. இறுதியில் ஹெட்மயர் அதிரடி காட்ட ராஜஸ்தான் அணி போதுமான ரன்னை இலக்காக நிர்ணயித்தது. 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்களை இழந்து 175 ரன்களை எடுத்தது. சிறப்பாக ஆடிய பட்லர் 52 ரன்களை எடுத்திருந்தார். சென்னை அணியில் ஆகாஷ் சிங், துஷார் தேஷ்பாண்டே, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
176 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய சென்னை அணியின் ருதுராஜ் 8 ரன்களில் வெளியேற டெவோன் கான்வே நிலையாக ஆடி ரன்களை சேர்த்தவண்ணம் இருந்தார். அஜிங்கியா அதிரடியாக ஆடி 31 ரன்களைக் குவித்து வெளியேறினார். பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியில் கேப்டன் தோனியும் ஜடேஜாவும் இணைந்து அணியை மீட்டனர். இறுதி 2 ஓவர்களில் 40 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹோல்டர் வீசிய 19 ஆவது ஓவரில் ஜடேஜா 19 ரன்களை விளாச இறுதி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது.
சந்தீப் சர்மா வீசிய அந்த ஓவரில் 2 மற்றும் 3 ஆம் பந்துகளை தோனி சிக்ஸர்களாக்க இறுதிப் பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டன. அவுட்சைட் ஆஃப்-ல் யார்க்கராக வீசப்பட்ட அந்த பந்தை தோனி மிட்-விக்கெட் திசையில் அடிக்க சிங்கிள் மட்டுமே கிடைத்தது. ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் சீசன் துவங்கப்பட்ட 2008 ஆம் ஆண்டில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதிய 3 போட்டிகளிலும் ராஜஸ்தான் அணி வென்றது. அதன் பின் சேப்பாக்கத்தில் நடந்த போட்டிகளில் ராஜஸ்தான் அணி இதுவரை சென்னையை வீழ்த்தியது இல்லை. சுமார், 15 வருடங்கள் கழித்து ராஜஸ்தான் அணி வென்றுள்ளது. இடைப்பட்ட வருடங்களில் நடந்த 6 போட்டிகளில் சென்னை அணியே வென்றுள்ளது.
சுழலுக்கு ஏற்ற சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளிலும் சுழல் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் நேற்றைய போட்டியிலும் சென்னை அணியில் சுழல் பந்துவீச்சாளர்கள் 10 ஓவர்களை வீசி 84 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர். ராஜஸ்தான் அணியிலும் சுழல் பந்துவீச்சாளர்கள் 12 ஓவர்களை வீசி 95 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.