Skip to main content

யோகா எப்போது செய்ய வேண்டும்... எப்படிச் செய்ய வேண்டும்?

Published on 21/03/2020 | Edited on 21/03/2020


யோகா என்ற சொல்லின் அர்த்தம் இணைதல் சேர்தல் ஒருமுகப்படுதல். ஓன்று சேர்க்கப்படும் ஆற்றலை எப்படி பயன் படுத்துவது என்று யோகா நமக்கு சொல்லி தருகிறது. உடல் பயிற்சி வேறு யோகா வேறு. வெளிப்புற உடலமைப்பை அழகு படுத்தாமல் உடலுக்கு உள் உள்ள உறுப்புகளின்  பலத்தை செழுமைப் படுத்துவதே யோகா. மனத் தூய்மையும் முன்னிலை படுத்தப்படுகிறது. முறையாக தேர்ந்த பயிற்சியாளர் இல்லாமல் செய்தால் ஆபத்தான பின் விளைவுகள் வரும்.

பயிற்சிக்கு முன் கவனிக்க வேண்டிய சில விசயங்கள்:

அதிகாலை நான்கு மணிக்கு முன்பே எழுந்து மென்மையுடன் தளர்வான நடைப் பயிற்சி மேற் கொள்ள வேண்டும். உடல் சுத்தம் செய்யும் சில கடமைகளை முடித்து பயிற்சிகள் ஆரம்பிக்கலாம். 5 ல்  இருந்து 7 மணிக்குள் பயிற்சி முடிக்கப் பட வேண்டும். பயிற்சி செய்யும் இடம் மிக சுத்தமாக காற்றோட்டமாக இருக்க வேண்டும். வெறும் தரையில் செய்யக் கூடாது. துணி விரித்து கொள்ளலாம். வெறும் வயிறோடு தான் பயிற்சி செய்ய வேண்டும். இயன்ற வரை மாலை இரவு வேலைகளில் பயிற்சி செய்யாமல் இருப்பது நலம். நேரம் கிடைக்க வில்லையெனில் உணவு முடிந்து 6 மணி நேரம் கழித்தே பயிற்சி செய்ய வேண்டும். 

மற்ற உடல் பயிற்சி ஆர்வம் உள்ளவர்கள் ''ஒருநாள் யோகா மறுநாள் மற்ற பயிற்சிகள் என மாறி மாறி'' செய்யலாம். உடலில் ஏதாவது பாதிப்புகள் உள்ளவர்கள் யோகா பயிற்சி யாளரிடம் தனது உடல் பிரச்சினைகளைப் பற்றி முன்னரே கூறி விட்டால் நல்லது. மனதை ஒருமுகப் படுத்துதல் முக்கியம். பேசக் கூடாது, பயிற்சியில் உடல் பாகங்களை மடக்கி நிமிர்த்தி வளைக்கும் போது மூச்சு வெளி விட வேண்டும். உடல் பாகங்களை தளர விடும் போது மூச்சை உள்ளிழுக்க வேண்டும். ஆசனப் பயிற்சிகள் ஆரம்பிக்கும் போது பத்மாசனம் ஆரம்பித்து மூச்சு சுத்தம் செய்ய வேண்டும். பயிற்சி முடிக்கும் போது சாந்தி ஆசனம் செய்ய வேண்டும்.