'நக்கீரன் 360' யூ-டியூப் சேனலுக்கு மருத்துவர் அருணாச்சலம் தொடர்ச்சியாக நேர்காணல் அளித்து வருகிறார். அப்போது அவர் கூறியதாவது, சர்க்கரை வியாதி நம் உடலில் பாதிக்காத உறுப்பே கிடையாது. சர்க்கரை வியாதி 140 அல்லது 180- க்கு மேல் சென்றால், ரத்தக் குழாயில் இருந்து சர்க்கரை உடனான பரிமாற்றம் நடைபெறாது. பொதுவாக சர்க்கரை வியாதிக்கு என்ன அறிகுறிகளுடன் வருவார்கள் என்றால்., கால், கைகள் இழுக்கிறது. வலி இருக்கிறது; மரத்துப் போன உணர்வும் இருப்பதாக நோயாளிகள் கூறுவர். அடிக்கடி பசி, சாப்பிடு சாப்பிடு என்று தூண்டுகிற எண்ணமோ (அல்லது) பிறப்பு உறுப்புகளில் வெடிப்போ சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.
நன்றாக உணவருந்தி, உடல் பருமனாக உள்ள 30- வயதுக்கு மேற்பட்டோர், உடல் வேகமாக மெலிந்தால், அது சர்க்கரை வியாதிக்கான அறிகுறிகளாக இருக்கலாம். உடல் பருமனாக இருப்பவர்கள் சாப்பாட்டைக் குறைத்துக் கொண்டு உடல் எடையைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவில்லை என்றால், உடல் எடையை சர்க்கரை வியாதி குறைத்துவிடும். சர்க்கரை வியாதி நமக்கு வராமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால், தாங்கள் செய்கின்ற வேலைக்கு தகுந்தாற்போல் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஜிம்முக்கு போக வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது தவிர, நாள்தோறும் அனைவரும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, சைக்கிளிங், விளையாட்டு போன்றவற்றில் ஏதாவது ஒன்றை அதிகபட்சம் ஒரு மணி நேரம் செய்தால் போதும், சர்க்கரை வியாதி வருவதைத் தடுக்கலாம்.
அளவுக்கு அதிகமான உணவே சர்க்கரை வியாதிக்கான காரணம். ஆய்வில், இந்தியாவைப் பொறுத்தவரை மூன்று மடங்கிற்கு அதிகமாக நாம் மாவுச்சத்தை உட்கொள்கிறோம். செல்போனுக்கு எப்படி சார்ஜிங் அவசியமோ, அதேபோல் ஒருவருக்கு தூக்கம் அவசியம். ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை உறங்கினால் மட்டுமே, அடுத்த 14 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை உங்கள் வாழ்க்கையை வாழ முடியும். மூன்று மாதங்கள் உறங்காத ஆண்களுக்கும், ஆறு மாதம் உறங்காத பெண்களுக்கும் சர்க்கரை வியாதி வருவதற்கான வாய்ப்பு உள்ளது. மனக்கவலை, வேலைப் பளு உள்ளிட்ட காரணத்தினால் உறங்காமல் இருந்தால், நோய் தான்.
இன்றைக்கு சர்க்கரை வியாதி அதிகமாக வருவதற்கு காரணம், நாம் ஏற்றுக்கொண்ட உணவு முறைகள் தான். ஓய்வில்லாமல் உழைப்பது, ஓய்வில்லாமல் பொழுதைப்போக்குவது, கொஞ்சம் கூட உடல் அசைவில்லாமல் ஒவ்வொரு நாளையும் கடந்து செல்வது. உடல் பருமனான குழந்தைக்கு உணவைக் குறைத்துக் கொடுக்கலாம். அது எப்படி என்றால், காய்கறிகளை அந்தக் குழந்தைக்கு அதிகமாகக் கொடுக்க வேண்டும். உடல் பருமன் உள்ள குழந்தை நன்றாக சாப்பிடுகிறது என்றால் நன்றாக விளையாட விட வேண்டும். 18- வயதிற்கு மேல் அல்லது 22- வயதிற்கு மேல் உள்ள 160 செ.மீ. இருப்பவர்கள் 55 கிலோ முதல் 65 கிலோ வரை உடல் எடை இருத்தல் சரியானது.
அந்தந்த காலங்களில் விற்பனையாகும் பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி சாப்பிடுவது நமது உடலுக்கு மிகவும் நல்லது. அன்லிமிடெட் மீல்ஸ் சாப்பிடுவது கேடு. சாம்பார் சாதத்துடனும், மோர் சாதத்துடனும், வெஜிடேபிள்ஸ் சாலட்டை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. குஸ்கா அல்லது பிரியாணி சாப்பிடுபவர்கள், அந்த உணவில் பாதியை சாப்பிட்டு, மற்ற பாதியை சில மணி நேரங்கள் கழித்து சாப்பிடுவது நல்லது. இவை பின்பற்றினால் சர்க்கரை வியாதியும் வராது; உடல் பருமனும் வராது.
சிகரெட்டில் அதிகளவு டாக்சின் இருக்கிறது. நமது குடலில் விளைவை ஏற்படுத்தி, அதில் ஒரு போதையைத் தருவது நிக்கோட்டின் தான். 40 முதல் 45 வயது வரை உள்ளவர்களில் சிகரெட் குடிப்பவர்களுக்கு எந்தவித காரணமுமின்றி மாரடைப்பு ஏற்படுகிறது. அதேபோல், நுரையீரலில் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது". இவ்வாறு மருத்துவர் தெரிவித்தார்.