'நக்கீரன் நலம்' யூ-டியூப் சேனலுக்கு மருத்துவர் அருணாச்சலம் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "ஒரு நோயாளி திடீரென்று என்னிடம் வந்தார். கையில் இரண்டு, மூன்று ஏற்கனவே மருத்துவம் பார்த்த சீட்டுகளை வைத்திருந்தார். மேலும், எனக்கு அக்குள்ல மட்டும் அரிப்பு இருக்கிறது எனத் தெரிவித்தார். அவர் முஸ்லிம் என்பதால், அவரிடம் வெளிநாடுகளில் உள்ள உங்கள் உறவினர்கள் வாசனை திரவியத்தை வாங்கிக் கொடுத்தார்களா என்று கேட்டேன்.
அவர் உடனே ஆமா சார் என்றார். நான் உடனே அந்த வாசனை திரவியத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். அரிப்பு சரியாகிவிடும் என்றேன். கரோனா காலத்தில் கையில் வெந்தது போன்ற நிலையில் வந்தார்கள். காரணம் ஹேண்ட் சானிடைசர். சமீபத்தில் என்னிடம் வந்த நோயாளி ஒருவர், இரண்டு வருடம் ஆகிவிட்டது சார். இது போயிருக்கும்னு நினைத்து நான் இறால் குழம்பு நேற்று வைத்து சாப்பிட்டேன். குழம்பு தான் சாப்பிட்டேன் என்றார் நோயாளி.
ஆனால், அந்த நோயாளி என்னிடம் வரும் போது மூச்சுத்திணறல் இருந்தது. ஒவ்வாமை அந்த அளவுக்கு மோசமான பாதிப்பை தரும். இது என்ன செய்யும் என்று அலட்சியமாக இருக்காமல், எனக்கு எது ஒத்துக்காது என்று தெரிகிறதோ, அதை உபயோகப்படுத்தாமல் இருப்பது தான் நல்லது. ஒவ்வாமையில் இருந்து ஒவ்வொருவருக்கும் தீர்வு கிடைக்கும். மருத்துவர்கிட்ட தீர்வே கிடையாது. எது நமது உடலுக்கு ஒத்துக் கொள்ளாது எனத் தெரிந்துக் கொண்டு, அதை உபயோகப்படுத்துவதில் இருந்து தவிர்க்காவிட்டால், இந்த ஒவ்வாமையில் இருந்து முழுமையான தீர்வு கிடைக்காது.
இன்னும் கொஞ்சம் அட்வான்ஸா என்ன பண்றாங்கனா, ஓடிப் போய் அலர்ஜி டெஸ்ட் எடுத்துக்கிட்டு வருகிறார்கள். அதில் சிமெண்ட், மண் என அனைத்தும் இருக்கும். அது எல்லாம் அவசியமா? என்கிறதை விட, 3,000 ரூபாயை விஞ்ஞானத்தில் வீணாக்குவது எனக்கு உடன்பாடு கிடையாது. நமக்கு எது ஒத்துக்கொள்ளவில்லை என்பதை நாமே கண்டுபிடித்துக் கொள்வது மிகவும் நல்லது. எல்லாவற்றிற்கும் டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள், அதை செய்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.