மருத்துவரிடம் அடிக்கடி செல்ல வேண்டிய நிலைக்கு நம்முடைய வாழ்வியல் நம்மை ஆக்கிவிட்டாலும், எம்.பி.பி.எஸ் மருத்துவரிடம் செல்வதா அல்லது நம்முடைய பிரச்சனைக்கு ஏற்ற சிறப்பு நிபுணரிடம் செல்வதா என்கிற சந்தேகம் நம்மில் பலருக்கும் உண்டு. அந்த சந்தேகத்துக்கு பிரபல டாக்டர் அருணாச்சலம் விடையளிக்கிறார்.
குடும்ப நல மருத்துவத்திற்காக தனித்துறையே இருந்தாலும் தற்போது எம்.பி.பி.எஸ் மருத்துவர்கள் தான் குடும்ப நல மருத்துவர்களாக செயல்பட்டு வருகின்றனர். அலோபதி மருத்துவம் உலக அளவில் செயல்பட்டு வரக்கூடிய ஒன்று. கொரோனா காலத்தில் மக்களைப் பெருமளவு காப்பாற்றியது நவீன மருத்துவம் தான். எம்.பி.பி.எஸ் மருத்துவருக்கு எல்லாவற்றையும் பற்றிய மேலோட்டமான புரிதல் உண்டு, நிபுணருக்கு ஆழமான புரிதல் இருக்கும்.
ஆழமான பிரச்சனைகளை, தான் கையாளாமல் நிபுணரிடம் அனுப்ப வேண்டியது எம்.பி.பி.எஸ் மருத்துவரின் கடமை. ஒரு பிரச்சனையை எந்த அளவுக்குத் தன்னால் சரி செய்ய முடியும் என்கிற புரிதல் ஒரு எம்.பி.பி.எஸ் டாக்டருக்கு அவசியம். தங்களிடம் எவ்வளவு செலவாகும், நிபுணரிடம் சென்றால் எவ்வளவு செலவாகும் என்பது குறித்தும் மக்களுக்கு விளக்க வேண்டியது மருத்துவர்களின் கடமை. ஒரு குடும்ப நல மருத்துவரால் ஒட்டுமொத்த குடும்பத்தையே பாதுகாக்க முடியும். அதே நேரத்தில் அந்த மருத்துவர் ஒரு தவறு செய்தால் ஒட்டுமொத்த குடும்பமும் அதனால் பாதிக்கப்படும்.