பயம் என்பது நமது உயிர் மாதிரி. கூடவே ஒட்டிக் கொண்டிருக்கும். உயிர் உடம்பைவிட்டுப் போகிறவரை அது கூடவே இருந்து கொண்டிருக்கும். பயத்திற்கு முக்கிய காரணம் பாதுகாப்பின்மைதான். பிறரால் எப்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதுதான் அச்சத்தை உள்ளுக்குள் விதைக்கிறது. 2005ஆம் ஆண்டு அமெரிக்காவில் பதின்மூன்று முதல் பதினைந்து வயதுள்ளவர்களிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பயம் எப்போது, எப்படி, எதற்காக, ஏன் வந்தது என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் பயம் வருவதற்கு சில வகையான காரணங்களே முக்கியமாக விளங்குகிறது என்று தெரியவந்தது. இறப்பு, தனிமை, முயற்சியில் தோல்வி, வன்முறை, போர், எதிர்காலம் பற்றிய கவலை போன்றவை பயத்திற்கான முக்கிய காரணங்களாகத் தெரியவந்தது. சுருக்கமாகச் சொன்னால் ஒருவிதமான பாதுகாப்பின்மையே பயத்திற்குக் காரணமாக விளங்குகிறது என்பது உறுதியாகக் கண்டறியப்பட்டது. பொதுவாக பயம் ஒரு எல்லையைத் தாண்டுகிறபோது அங்கே அறிவு செயலிழந்து விடுகிறது. அத்தகைய நேரங்களில் அது பாதுகாப்பு அரணாக இல்லாமல் அடிமைத் தளைக்குள் நம்மைக் கொண்டுபோய் விட்டுவிடுகிறது.
இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. கடுமையான விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், வங்கிகளில் பணமின்மை, அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு என்று அந்த தேசம் மிகவும் சிரமத் திசையில் தள்ளாடிக் கொண்டிருந்தது. ‘இனிமேல் நம் நாடு அவ்வளவுதான்’ என்று பலரும் தலையில் கையை வைத்துக் கொண்டு மூலையில் அமர்ந்து ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிட்டனர். இனிமேல் அமெரிக்காவை எந்தக் கொம்பனாலும் காப்பாற்றவே முடியாது என்ற அவநம்பிக்கை தாராளமாக பெருகி வழிந்தது. அப்போது அந்நாட்டின் அதிபராக இருந்தவர் ஹோவர். இவர் மிகப் பெரிய பொருளாதார வல்லுநர் வேறு. இவராலேயே அமெரிக்க பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த முடியாமல் போனதால் மக்கள் நம்பிக்கை இழந்து போயினர்.இதுபோன்ற ஒரு இக்கட்டான சமயத்தில் அமெரிக்க அதிபராக ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட் பதவியேற்றார். ஹோவராலேயே முடியாததை இவர் சாதித்துவிடுவாரா என்று பலரும் ஐயம் கொண்டனர். ரூஸ்வெல்ட் பதவியேற்றதும் முதன்முதலாகத் தனது மக்களுக்கு அவர் உரையாற்றினார். அப்போது, ‘நாம் அனைவரும் பயப்பட வேண்டியது ஒன்றே ஒன்றுக்கு மட்டுமே. அது என்ன தெரியுமா? பயம். அந்த இனம் புரியாத, ஆதாரமற்ற, உண்மையற்ற பயம்தான் நம்மை முன்னேற விடாமல் கீழே இழுத்துக் கொண்டே இருக்கிறது’ என்றார்.
இவ்வாறு மக்களை உசுப்பேற்றிய அவர், தன்னையும் மாற்றிக் கொண்டார். இரண்டாம் உலகப் போரின் தாக்கங்களையும் சமாளித்து அமெரிக்காவை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் சென்றார். மிகப் பெரிய வல்லரசு நாடாக அமெரிக்காவைத் திகழச் செய்தார். இன்றும் அமெரிக்கா அப்படியே திகழ்ந்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் பயத்தைக் கண்டு பயப்படக்கூடாது. அதனை எதிர்க்கும் தைரியத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும். பயம் வந்தால் முதலில் பரபரப்பின்றி நிதானமாக அதற்கான காரணம் என்னவென்பதை யோசியுங்கள். அது உண்மையானதா, கற்பனையானதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். பயத்திற்கான காரணம் உண்மையானதாக இருந்தால் அதனை ஒதுக்கித் தள்ளிவிடாமல் ஏற்றுக் கொள்ளுங்கள். உண்மையை எக்காரணம் கொண்டும் புறக்கணிக்கக்கூடாது. அது ஆபத்தைத் தோற்றுவித்துவிடும். எனினும், அதற்காகப் பயத்தில் மூழ்கி அமிழ்ந்துவிடக்கூடாது. பயத்திலேயே செயலிழந்து போவதும் புத்திசாலித்தனமானதாக இருக்காது. பயப்படுகிற அளவிற்கான காரணம் என்பதைக் கவனமாக கண்டறிந்து அதனை அறிவுபூர்வமாக அணுகி தீர்த்து வைக்க வேண்டும்.ஒருவேளை உங்கள் பயத்திற்கான காரணம் வெறும் கற்பனையாக இருந்தால் அதனை உடனடியாகப் புறக்கணிக்க வேண்டும். உங்கள் மனதில் அதிக நேரம் தங்கி இருக்க அனுமதிக்கவே கூடாது. அவ்வாறு அதனை சிறிது நேரம் உள்ளுக்குள் அமர்ந்திருக்க செய்தால் அது பின்னர் உண்மை என்றே நம் மனம் நம்ப ஆரம்பித்து விடும். அப்புறம் பயம் உங்களை விட்டு எந்நிலையிலும் விலகவே விலகாது. தோல்வியைக் கண்டு பயம் எழுகிறது என்றால் அதனையும் உங்களால் எளிதில் சமாளிக்க முடியும். எந்தவொரு வெற்றியும் தோல்வி இல்லாமல் கிடைத்ததே இல்லை என்ற உண்மையை மனதிற்குள் உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டும்.