எலான் மஸ்க். இன்று மிக அதிகமாக விவாதிக்கப்படும் தொழிலதிபர். பலருக்கு ஆதர்சமாகவும் பலரது விமர்சனத்திற்கு உரியவராகவும் இருக்கிறார். ஸ்பேஸ் - எக்ஸ், டெஸ்லா என இவரது முயற்சிகள் பெரிய வெற்றியையும் பாராட்டையும் பெற்றவை. ஆனால், சமீபத்திய செயல்பாடான ட்விட்டர் மட்டும் நெகட்டிவ் ரிவ்யூசையும் பெற்று வருகிறது. அதிரடியான நடவடிக்கை, அசால்ட்டான பதில்கள் என பலருக்கு ஹீரோவாக ஒரு ராக்ஸ்டார் பிசினஸ் மேனாக இருக்கிறார் எலான் மஸ்க். இதற்கு முன்பு இருந்த ராக்ஸ்டார் பிசினஸ் மேன் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆப்பிள் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான இவர், மனித வாழ்வியலில், தொழில்நுட்பத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். இளைஞர்களுக்கு ஹீரோவாகவும் இன்ஸ்பிரேஷனாகவும் இருப்பவர்.
புற்று நோயால் மரணமடைந்த ஸ்டீவின் வார்த்தைகள் இன்றும் பலருக்கு மோட்டிவேஷன். ஆப்பிள் நிறுவன ஊழியர்களுடன் அவர் நடத்தும் சந்திப்புகளும் அதில் அவர் பேசுவதும் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் நிகழ்வுகளில் அவர் பேசுவதும் மிகப் பிரபலம். அப்படி ஒரு நிகழ்வில், ஸ்டீவ் ஜாப்ஸின் முடிவால் கைவிடப்பட்ட 'ஓப்பன் டாக்ஸ்' எனும் மென்பொருள் பாகம் குறித்த கேள்வி எழுந்தது. பல ஆண்டுகள் அந்த ப்ராஜெக்டில் உழைத்த ஒருவர் "ஓப்பன் டாக்ஸ்-இன் நிலை என்ன?" என்று கொஞ்சம் ஆதங்கத்துடன் கேட்டார். தனது வழக்கமான புன்னகையுடன் கூலாக பதில் அளித்த ஸ்டீவ், "எனக்குத் தெரியும், பல பேர் பல ஆண்டுகள் உழைத்த ப்ராஜக்ட் அது. வருத்தம் இருக்கும். என் முடிவால் பலர் நிறுவனத்தை விட்டு வெளியேறினர்.
அவர்கள் வெளியே போய் தூற்றிக்கொண்டு இருக்கின்றனர். எல்லாம் தெரியும். ஆனால் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். வாழ்க்கையில் நாம் சில இடங்களில் ஸ்ட்ராங்காக 'நோ' சொல்ல வேண்டும். வெற்றி பெறாது, சரியாக வராது என்று தெரிந்தும் ஒரு செயலில் இறங்கிவிட்டோம் என்பதற்காக மட்டுமே அதைத் தொடர்ந்து செய்யக்கூடாது. அத்தனை பேரின் உழைப்பும் கோடிக்கணக்கான பணமும் இன்னும் அதிகமாக வீணாகியிருக்கும். அதனால்தான் நிறுத்தினேன். அதில் உழைத்தவர்களுக்காக நான் வருந்துகிறேன். அதே நேரம் அவர்கள் மகிழும் வகையில் புதிய தயாரிப்புகள் நிகழும்.
வாழ்க்கையில் தவறுகள் நடக்கும். ஏன்... தப்பு செய்துதான் நாம் பல நல்ல முடிவுகளை எடுப்போம். பின்னர் தவறுகள் சரி செய்யப்படும். இப்படித்தான் வெற்றி கிடைக்கும். அதுனால, 'நோ' சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லி ஆகணும். இல்லைன்னா, தோற்று நிற்போம்" என்று கூறினார். உண்மைதானே?