பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இளம் வயதிலேயே ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு உயிரிழப்பதைப் பார்க்க முடிகிறது. இது எதனால் ஏற்படுகிறது இதன் காரணம் என்னவென்று தெரிந்துகொள்ள இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.சுரேஷ் ராவ் அவர்களை ‘நக்கீரன் நலம்’ யூடியூப் சார்பாக சந்தித்தோம். அவரிடம் மேற்குறிப்பிட்டவை பற்றிய கேள்விகளை முன் வைத்தபோது அவர் அளித்த விளக்கம் பின்வருமாறு.
இளம் வயதினருக்கு ஹார்ட் அட்டாக் வர முதற்காரணம் வாழ்வியல் முறை பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றம்தான். உணவு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறிப்பாக ஃபாஸ்ட் புட் என்றழைக்கப்படும் துரித உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்வது. அதனால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும், சர்க்கரை அளவு அதிகரிக்கும். இப்ப கிடைக்கிற பல வகையான உணவுகளில் சர்க்கரை அளவு அதிகமாகவே காணப்படுகிறது.
அடுத்தபடியாக பொலியூசன். அதாவது மாசு நிறைந்த வாழ்விடம், உங்களுக்குள் ஏற்படுத்துகிற சுவாசப் பிரச்சனைகள் மற்றும் புகை பிடித்தல் பழக்கமுள்ளவர்களும் சுவாசிப்பதில் ஏற்படுகிற சிக்கலுக்கு உள்ளாகி இதயம் பாதிப்புக்குள்ளாக வேண்டியது வரும்.
முன்பெல்லாம் சுற்றுச்சூழல் நன்றாக இருந்தது. நேரத்திற்கு எழுந்தோம். நேரத்திற்கு தூங்கினோம். மன அழுத்தமற்ற வாழ்க்கையை வாழ்ந்தோம். இப்பொழுதெல்லாம் அப்படியில்லை. மிகுந்த மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை வாழ்கிறோம். தாமதமாக தூங்கி தாமதமாக எழுந்திருக்கிற வாழ்க்கை முறை மற்றும் வேகமாக வேலைக்கு ஓடுறோம், சாப்பிட்றோம். இதெல்லாம் ஹார்ட் அட்டாக் சிறு வயதிலேயே வருவதற்கு ஒரு காரணமாக அமைகிறது.