Skip to main content

குழந்தைகளுக்கு தைராய்டு வரக் காரணம் என்ன? - ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்கம்

Published on 30/07/2024 | Edited on 30/07/2024
Nutrionist Kirthika tharan explained about antibiotics

ஆன்டிபயாடிக்ஸ் மூலம் குடல் நுண்ணுயிர்களுக்கு விளையும் பாதிப்பை பற்றி ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்குகிறார்.

தோலுக்கும் குடல் நுண்ணுயிர்களுக்கும் சூரிய ஒளி மிகவும் முக்கியம். ஆனால், நாம் அதை பெறாமல் தடுக்கிறோம். இன்று சிறிய குழந்தைகள் கூட ஆன்டிபயாடிக்ஸ் எடுத்துக்கொள்கிறார்கள். இந்த ஆன்டிபயாடிக் மருந்துகள் நல்ல பாக்டீரியாவையும் சேர்த்து கொல்லும்.

இந்த ஆன்டிபயாடிக்ஸ் ஒரு அளவுக்கு மேல் எடுத்துக்கொள்ளும்போது, நோய் எதிர்ப்பு சக்தியே இல்லாத அளவுக்கு ஆகிவிடும். உதாரணமாக வெளியில் இருந்து வரும் ஒரு நுண்ணுயிர் நல்லதாக இருந்தால் உடல் ஏற்றுக்கொள்ளும். ஆனால், அது கெட்டதாக இருந்தால், நம் உடலில் இருக்கும் நல்ல நுண்ணுயிர்கள் அதனுடன் சண்டையிடும். அதன் விளைவாக ஜுரம் மற்றும் உடல் சூடு அதிகரிக்கும். ஆனால், ஜுரம் வந்தால் உடனே டாக்டரிடம் சென்று மாத்திரை சாப்பிடுவோம். இதனால் கூட  நம் குடல் நுண்ணுயிர்கள் பாதிக்கப்படும். எனவே, மருந்தகம் சென்று தானாக மருந்து எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஆன்டிபயாடிக் தேவையா, அல்லது ப்ரீபயாடிக்ஸ், புரோபயாடிக்ஸ் தேவையா, எது எடுத்தால் உடலுக்கு நல்லது என்று ஆழ்ந்த விழிப்புணர்வுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். 

வீட்டில் செய்யும் உணவு இரண்டு நாட்களில் அல்லது ஒரு வாரத்தில் கெட்டுவிடும். ஆனால், பாக்கெட் உணவு, பதப்படுத்தப்பட்ட ஸ்நாக்ஸ் மற்றும் இன்ஸ்டன்ட் உணவுகள் மாதக்கணக்கில் கெட்டுப் போகாமல் இருக்கிறது.  ஏனென்றால், அதில் தேவையில்லாத கெமிக்கல் மற்றும் அனுமதிக்கப்பட்ட பிரிசர்வேட்டிவ்ஸ் சேர்க்கப்பட்டிருக்கும். இதை நாமே குழந்தைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து வருகிறோம். இப்படி தொடர்ந்து சாப்பிடுவதனால் கூட குடல் நுண்ணுயிர்கள் பாதிக்கப்படும். அந்த காலத்தில் தைராய்டு என்றால் என்ன என்று தெரியாமல் இருந்தது. இன்று 19 வயது குழந்தைக்கு கூட தைராய்டு பிரச்சனை மற்றும் பிசிஓடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.

மகிழ்ச்சியை கொடுக்கக்கூடிய செரோடோனின் ஹார்மோன்ஸ், ஸ்ட்ரெஸ் ஹார்மோன் கார்ட்டிசால், டோபமைன் போன்ற ஹார்மோன்கள் எல்லாம் 95% வயிற்றில் தான் சுரக்கின்றன. அப்பொழுது வயிற்றில் இருக்கும் நுண்ணுயிர்களும் ஆரோக்கியமாக இருந்தால் தான் இந்த ஹார்மோன்ஸ்களும் நன்றாக வேலை செய்யும். இப்படி சரியான ஆரோக்கியமான உணவு முறை இல்லையென்றால் நுண்ணுயிர்கள் மட்டுமல்லாமல் ஹார்மோன் சமநிலையையும் பாதிக்கும். எனவே, ஹார்மோன் சமநிலையின்மை இல்லை என்றாலே குடல் நுண்ணுயிர் சரியான அளவில் இல்லை என்று தான் அர்த்தம். இந்த நுண்ணுயிர்களை சரிப்படுத்தினாலே பெரும்பாலான ஹார்மோன் சமநிலையின்மையும்  சரியாகும்.