Skip to main content

முலாம் பழத்தில் நிறைந்துள்ள முத்தான நற்பலன்கள்!

Published on 07/04/2020 | Edited on 07/04/2020

முலாம் பழத்தில் உடலுக்கு தேவையான ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. மூல நோய் உள்ளவர்களுக்கு முலாம் பழம் ஒரு வரப்பிரசாதம். வெயில் காலத்தில் உடலில் ஏற்படும் பல வகையான தோல் பாதிப்புகளை தீர்ப்பதில் முலாம் பழம் முக்கிய இடத்தினை வகிக்கிறது. இந்த பழத்தின் சதை பகுதியுடன் சிறிதளவு தேன் கலந்து உண்டு வர வாய்ப்புண் மற்றும் தொண்டைப்புண் குணமடையும். பித்தத்தை நீக்கும் ஆற்றல் முலாம் பழத்திற்கு மற்ற பழங்களை விட அதிகம் உள்ளது. அஜீரணத்தை குறைத்து பசியை ஏற்படுத்தும் ஆற்றல் இதற்கு அதிகம் உண்டு.

  j



இது சிறுநீர் பெருக்கியாகவும் செயல்படும். இது, சிறுநீர் தாரைகளில் ஏற்படும் எரிச்சலை கட்டுப்படுத்துகிறது. தோல் நீக்கிய முலாம் பழத்துடன் சிறிதளவு பனங்கற்கண்டு, சிறிதளவு குங்குமப் பூ சேர்த்து மில்க் ஷேக்காக காலை உணவிற்கு பயன்படுத்தலாம்.  முலாம் பழத்தின் சதை பகுதியோடு சிறிதளவு சீரகப்பொடியை சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி குடித்தால் உடலுக்கு குளிர்ச்சி கிடைப்பதுடன் உடலுக்கு புது உற்சாகமும் கிடைக்கும். இதில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. 

 

Next Story

எதிப்பான் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த 6 டன் மாம்பழங்கள் பறிமுதல்

Published on 14/05/2023 | Edited on 14/05/2023

 

Seizure of 6 tons of mangoes ripened by Ethipan chemical

 

சேலத்தில், எதிப்பான் ரசாயனத்தை தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 6 டன் மாம்பழங்களை உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள சில மாம்பழக் கிடங்குகளில், ரசாயன திரவத்தை தெளித்து மாம்பழங்கள் செயற்கையாக பழுக்க வைக்கப்படுவதாக சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, உணவுப்பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையில், உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் சிவலிங்கம், புஷ்பராஜ் ஆகியோர் சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள ஏடிஎஸ் பழக்கிடங்கு, கேஎஸ்கே பழக்கிடங்குகளில் திடீர் சோதனை நடத்தினர். இவை தவிர மேலும் 3 கடைகளிலும் சோதனை நடந்தது.

 

Seizure of 6 tons of mangoes ripened by Ethipan chemical

 

இரண்டு கிடங்குகளிலும், மாம்பழங்களை விரைவாக பழுக்க வைப்பதற்காக எதிப்பான் எனும் ரசாயனம் தெளிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இரண்டு கிடங்குகளில் இருந்தும் 6 டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றை சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான நுண்ணுயிர் உரத்தயாரிப்புக் கிடங்கிற்குக் கொண்டு சென்று அழித்தனர். ரசாயன முறையில் செயற்கையாக பழங்களை பழுக்க வைத்த மாம்பழக்கிடங்கு உரிமையாளர்கள் மீது மாவட்ட வருவாய் அலுவலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என உணவுப்பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

 

ரசாயனம் மூலம் பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுவது தெரிந்தால் உணவுப்பாதுகாப்புத்துறை சட்டங்களின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உண்பதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என்றும், அவ்வாறான பழங்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

 

 

 

 

Next Story

கயத்தாறில் பழச்சாறு அருந்திய மகள் மரணம்; தாய் கவலைக்கிடம்

Published on 19/08/2022 | Edited on 19/08/2022

 

fruit mixer

 

கயத்தாறு பகுதியில் பழச்சாறு அருந்திய மாணவி உயிரிழந்த நிலையில் தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது  மனைவி சாந்தி, மகள் லட்சுமி பிரியா. கயத்தாறு பகுதியில் உள்ள பழக்கடையில் பழச்சாறு வாங்கியுள்ளனர். வீட்டிற்கு சென்று வாங்கி வந்த பழச்சாற்றை அருந்திய சிறிது நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் இருவரையும் கயத்தாரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர். 

 

இரண்டு நாள் சிகிச்சை பெற்றும் குணமாகாததால்  மாணவி லட்சுமி பிரியா மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் சென்னைக்கு கொண்டு செல்லும் போதே மாணவி உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் கயத்தாறு காவல் நிலையத்தை முற்றுகை செய்தனர். அவர்களுக்கு பதில் அளித்த போலீசார் 'மாணவி மரணம் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் உறுதி அளித்தனர். இதனை அடுத்து உறவினர்கள் அங்கு இருந்து களைந்து சென்றனர். மாணவியின் தாயாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.