உடற்பயிற்சி மீதான அதீத மோகத்தால் பல்வேறு பாதிப்புகளுக்கு பலர் ஆளாகி வருவதை நாம் பார்க்கிறோம். உடற்பயிற்சி என்பது எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து நம் கேள்விக்கு டாக்டர். அருணாச்சலம் விரிவான விளக்கத்தை அளிக்கிறார்.
அதிகாலையில் எழுந்து வாக்கிங் செல்பவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகரித்துள்ளது. உடற்பயிற்சிக்கு அதிகாலை நேரம் தான் சரியானது என்று பலர் நம்புகின்றனர். ஆனால் தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு அவற்றைச் செய்வதால் பயனில்லை. ஏனெனில் அதிகாலை நேரம் தான் நாம் நன்றாக உறங்கும் நேரம். குறைந்தது 7 மணி நேரமாவது தூக்கம் அனைவருக்கும் வேண்டும். சரியான அளவு தூக்கம் இல்லாமல் உடற்பயிற்சி செய்யக்கூடாது. அப்படிச் செய்ய வேண்டும் என்று எந்த மருத்துவமும் சொல்லவில்லை.
உடல் உழைப்பு இல்லாமல், உட்கார்ந்த இடத்தில் சம்பாதிக்கும் நிலைக்கு இன்று நாம் வந்துவிட்டோம். நம்முடைய உடல் கடிகாரம் அதனுடைய இயல்பிலேயே இயங்க வேண்டும். தூக்கம் கெட்டுப்போனால் எந்தெந்த வியாதிகள் வரக்கூடாது என்று நினைக்கிறீர்களோ அவை அத்தனையும் வந்துவிடும். உடற்பயிற்சி கூடங்களில் இழக்கும் சக்தியை தண்ணீர் குடிப்பதன் மூலம் ஈடுசெய்ய வேண்டும். உடலில் வேர்வை தங்குவதைத் தடுக்க வேண்டும். உடலில் கிருமிகள் ஏற்படுவதற்கு இன்று பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன.
வயிற்றில் தான் அதிகம் கிருமிகள் ஏற்படும். விவசாயிகள் பலருக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே இருக்கும். ஆனால் நகர வாழ்க்கை வாழ்பவர்களுக்கு சிறிய அளவில் கிருமிகள் உள்ளே சென்றாலும் அதனுடைய பாதிப்பு பெரிய அளவில் இருக்கும். கிருமிகளின் தாக்கத்தினால் தான் வெளிநாடுகளிலிருந்து இங்கு வருபவர்களுக்குப் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. காய்கறிகளையும் பழங்களையும் உணவில் அதிக அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, மிளகு போன்ற நம்முடைய பாரம்பரிய உணவு முறையையும் தொடர்ந்து பின்பற்றி வர வேண்டும்.