கிரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையும், கொழுப்பு கட்டுக்குள் வரும், முகம் பலபலவென்று ஆகும் எனச் சொல்லப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்ற கேள்வியை பிரபல ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரணிடம் கேட்டோம். அதற்கு அவரளித்த விளக்கம் பின்வருமாறு...
கிரீன் டீக்கும், கருப்பு டீக்கும் உள்ள வித்தியாசம் இரண்டுமே ஈரப்பதம் போகுமளவிற்கு உலர்த்தப்படும் ஆனால் கிரீன் டீயின் பிராசஸ் அளவை விட கருப்பு டீக்கான பிராசசிங் அதிகம். அத்தோடு கிரீன் டீயில் ஆன்டி ஆக்சிடெண்ட் என்பது அழியாமல் இருப்பதால் தான் கிரீன் டீ நல்லது என்று சொல்லப்படுகிறது.
ஹெர்ப் என்று சொல்லப்படுகிற வகையைச் சார்ந்த எந்த விதமான இலையைப் பயன்படுத்தி கொதிக்கவைத்த சூடான நீரோடு கலந்து குடித்தாலும் நன்மைதான். அது கிரீன் டீக்கும் பொறுந்தும். ஆனால் கிரீன் டீ குடித்தால் கொழுப்பு குறையும், உடல் எடை குறையும், உடல் பளபளவென்றாகும் என்று சொல்வதெல்லாம் உண்மையல்ல, அது நிரூபிக்கப்படவில்லை.
வெறும் தண்ணீர் குடிப்பதை விட இது போன்ற க்ரீன் டீ ஒரு சின்ன மாற்றம் தரக்கூடியது தான். நிறமிகள் என்று சொல்லப்படுபவை இந்த இலைகள், பூக்களில் இருக்க கூடியவை. இவற்றைப் பயன்படுத்தி டீ போன்று குடிப்பதால் வயது முதிர்ச்சியை ஏற்படுத்தும் உடற்கூறுகளை ஓரளவுக்கு கட்டுப்படுத்தும் சக்தி கொண்டது. தேயிலையை பாலில் கலந்து குடிப்பதை விட, வெறும் தேயிலையை நீரில் கொதிக்கவிட்டு குடிப்பதால் புத்துணர்ச்சி கிடைக்கும். அப்படித்தான் கிரீன் டீயையும் பார்க்க வேண்டும்.