Skip to main content

"பொறுத்தது போதும்"- பொங்கி எழுந்த கலைஞரும் சிவாஜியும் !

Published on 25/02/2019 | Edited on 25/02/2019

நூற்றாண்டு காலத் தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்புச் சாயல் இல்லாமல் திரைப்பிரபலங்கள் தோன்றியதில்லை. நடிகர்களில் தலைசிறந்தவர் சிவாஜி; நடிப்பில் , தமிழ் மொழி உச்சரிப்பில்  பல்கலைக்கழகம் அவர்.இன்றைய நடிகர்களை ஏதேனும் ஒரு வகையில் பாதித்தவர். தமிழ்ச்சினிமாவில் அவர் ஏற்றுநடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என சொல்லிட முடியும். தேசியமும் தெய்வீகமும் தனது விழிகள் என வாழ்ந்த நடிகர் திலகத்துக்கும், பகுத்தறிவாளரான கலைஞருக்குமான நட்பு என்பது மிகவும் ஆழமானது;ஆத்மார்த்தமானது. நடிகர் திலகத்தின் நடிப்பின் மூலமும் உச்சரிப்பின் மூலமும் தனது புரட்சிகரமான கருத்துக்களை வார்த்தெடுத்தவர் கலைஞர். சிவாஜியின் நடிப்பால் கலைஞரின் வசனங்கள் உயிர்பெறுகிறதா? கலைஞரின் வசனங்களால் சிவாஜியின் நடிப்பு போற்றப்படுகிறதா?என விவாதிக்கப்படுகிற அளவுக்கு இருவரின் கலைத்துறை பயணமும் ஒரே நேர்கோட்டில் பயணித்தன.சிவாஜியின் உதவியாளராக அவருக்கு அருகிலேயே இருந்து பணி செய்கிற பாக்கியம் எனக்கு கிடைத்திருந்ததால், ஓய்வில் வீட்டில் இருக்கும் போதெல்லாம் பழைய நினைவுகளை எங்களோடு பகிர்ந்து கொள்வார். அந்த நினைவுகளெல்லாம் மிக பசுமையானவை. அதில் கலைஞரைப் பற்றிய அவரது நினைவுகள் மிக ஆழமானவையாக இருக்கும்.கலைஞரின் வசனங்களையும் அதில் தெறிக்கும் கருத்துகளையும் அடிக்கடி எங்களிடம் பகிர்ந்து கொள்வார் நடிகர் திலகம். அப்படி ஒரு முறை பகிர்ந்துகொண்ட போது, "மனோகரா' படத்தைப் பற்றி சிலாகித்துப் பேசினார்.

kalaingnar and sivaji

அப்போது, மனோகரா படம் முழுவதும் ஆவேசமாக நான் நடித்திருந்தாலும், கலைஞரின் சரித்திர வசனங்களை பேசியிருந்தாலும் இறுதிக் காட்சியில், "பொறுத்தது போதும் பொங்கி எழு' என்ற ஒரே ஒரு வசனம் பேசி மொத்த கைத்தட்டலையும் கண்ணம்மா தட்டிச்சென்றார்.அந்த காட்சியை காணும்போதெல்லாம் ஒரு பெண்ணாக நானிருந்து அந்த காட்சியில் நடித்திருக்கக்கூடாதா என ஏங்கியிருக்கிறேன்.அந்தளவுக்கு உணர்ச்சிமிக்க வசனம் அது! இதுதான் கலைஞரின் பேனாவின் வலிமை! எனக்கு மட்டுமல்ல ;என்னோடு நடிக்கும் மற்ற நடிகர்-நடிகைகளுக்கும் கலைஞரின் வசனங்கள் பாராட்டுதல்களை அள்ளித் தரும்!'' என்று பெருமையாக மெய்சிலிர்த்தார் நடிகர் திலகம். இதனை பத்திரிகை பேட்டிகளிலும் பல முறை அவர் சொன்னதுண்டு.இதில் ஒரு வியப்பு என்னவெனில், திரைப்படமாக "மனோகரா' வருவதற்கு முன்பு மேடை நாடகமாக போடப்பட்டது. அதில் கண்ணம்மா வேடத்தில் சிவாஜிதான் நடித்திருப்பார். மேடை நாடகத்திற்கான வசனத்தை கலைஞர் எழுதியிருக்கவில்லை. அதனால், "பொறுத்தது போதும் பொங்கி எழு' என்கிற வசனமும் அதில் இல்லை. சினிமாவாக மனோகரா எடுக்கப்பட்ட போதுதான் கலைஞரின் பேனா, அந்த உணர்ச்சிகரமான வசனத்தை எழுதியது. அந்த வார்த்தைகள் மீது நடிகர் திலகத்துக்கு ஒரு மயக்கம் இருந்தது!கலைஞரை எப்போதும் செல்லமாக, முனா கானா என்றுதான் அழைப்பார் சிவாஜி. நீண்ட வருடங்களுக்குப் பிறகு 1989-ல் முதலமைச்சராகிறார் கலைஞர். அவரை சந்திக்க கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்றார் சிவாஜி. அப்போது அவருடன் நானும் சென்றிருந்தேன். கோபாலபுரத்தில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் இருந்தனர்.அவர்களைப்பார்த்து, "முனா கானா இருக்கிறாரா?' என சொல்லிக்கொண்டே விறுவிறு என மாடிப்படி ஏறிச் சென்றார் சிவாஜி. சிவாஜி வந்துகொண்டிருக்கிறார் என கலைஞருக்கு தகவல் போய்ச்சேருவதற்குள் கலைஞரின் அறைக்குள் சென்றார்.

sivaji with kalaingnar

திடீரென சிவாஜியை பார்த்த மாத்திரத்தில் ஆச்சரியப்பட்டவராய், "அடடே வாங்க நடிகர் திலகம்' என சொல்லி சிவாஜியைக் கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டார் கலைஞர். மிக பிஸியான அந்த அலுவல் நேரத்திலும், நட்பு சார்ந்து பல விசயங்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர். கோபாலபுரத்திலிருந்து சிவாஜி புறப்பட்டபோது, கீழே கார் வரை வந்து அனுப்பிவைத்தார் கலைஞர்.சரித்திர கதாநாயகர்கள், விடுதலைப் போராட்ட தலைவர்கள் எல்லாம் எப்படி இருப்பார்கள்? என எதிர்கால தலைமுறையினர் கேள்வி கேட்டால், அதற்கு சிவாஜிதான் பதிலாக இருப்பார் என கலைஞர் சொல்வதாக மனம்திறந்து பேசுவார் சிவாஜி. கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மாள், தனக்கும் தாய் தான் என்று அடிக்கடி குறிப்பிடுவார். இதனை வெறும் வாய் வார்த்தையளவில் மட்டும் அவர் குறிப்பிடவில்லை. தனது சுயசரிதையில் அழுத்தமாக அதனைப் பதிவுசெய்திருப்பார் நடிகர் திலகம்.அதனால்தான் சிவாஜி, தனது புதல்வர்களிடம், கலைஞரை பெரியப்பா என்று அழைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியவர். அந்த அளவுக்கு கலைஞருடன் நட்பையும் தாண்டி, குடும்ப உறவினராகவும் இருந்தார் சிவாஜி.தி.மு.க.விலிருந்து சிவாஜி விலகிய பிறகு அரசியல்ரீதியாக கலைஞருக்கும் சிவாஜிக்கும் கருத்து வேறுபாடுகள் உருவாகியிருந்தாலும் அவர்களின் நட்பில், உறவில் எந்த விரிசலும் எப்போதும் ஏற்பட்டதில்லை.

தமிழ்த் திரையுலகம் சார்பில் 1998 நவம்பரில் கலைஞருக்கு பவளவிழா எடுக்கப்பட்டது. நேரு உள்விளை யாட்டரங்கில் நடந்த விழாவில் தமிழ்த்திரை உலகமே திரண்டிருந்தது. விழாவுக்கு தலைமையேற்றிருந்தவர் சிவாஜி. விழாவில் பேசிய நடிகர் திலகம், ""தாயே! தமிழே! உன் தலைமகனை, என் அருமை நண்பனை, இந்த நாட்டின் சிறந்த அறிவாளியைப் பற்றி என்ன பேசுவது? எதைப் பேசுவது? உங்களைப் பற்றி (கலைஞரை) பேசினால் அதில் நானும் கலந்திருப்பேனே! அது, என்னையே நான் புகழ்ந்து கொள்வது போலாகாதா? உங்களால் தமிழ் இன்னும் வளர வேண்டும். இன்னும் நிறைய நீங்கள் எழுத வேண்டும். வயதானாலும் உங்கள் வசனத்தை நான் பேசி நடிக்க வேண்டும். நண்பா, என்னுடைய ஆயுளில் இரண்டாண்டுகளை எடுத்துக்கொண்டு நீ இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து தமிழகத்துக்கு சேவை செய்ய வேண்டும்!'' என்று உருக்கமாகப் பேசியது இப்போது நினைத்தாலும் மெய்சிலிர்க்க வைக்கும்.
 

Next Story

'நீங்கள் எல்லோரும் கலைஞரின் பேரன்கள் தான்' - தயாநிதி மாறனை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
'You are all grandsons of the artist'- Udayanidhi campaign supporting Dayanidhi Maran

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி எழும்பூர் டாணா தெரு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''தயாநிதி மாறனை உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற வாக்கு கேட்பதற்கு இங்கே வந்தேன். ஆனால் இங்கு வந்து பார்த்த பிறகு தான் தெரிகிறது என்னைவிட அதிக ஆர்வத்தோடு, எழுச்சியோடு அவரை வெற்றி பெறச் செய்வதில் நீங்கள் முனைப்போடு இருக்கிறீர்கள் என்பது. நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டு. கடந்த 2019 தேர்தலில் தயாநிதிமாறனை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். அதற்கு நான் பலமுறை  நன்றி தெரிவித்திருக்கிறேன். நான் இந்த பகுதிக்கு வருவது இது முதல் தடவையோ, இரண்டாவது தடவையோ அல்ல. இந்த மூன்று வருடத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட முறை குறையாமல் இங்கே வந்திருக்கிறேன்  கொரோனா காலத்திலும் சரி, மழை வெள்ள காலத்திலும் சரி அனைத்து பிரச்சனையின் போதும் இங்கே வந்திருக்கிறேன்.

அந்த உரிமையோடு கேட்கிறேன் குறைந்தது 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தயாநிதிமாறனை வெற்றி பெற வைக்க வேண்டும். எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் டெபாசிட் பெறக்கூடாது. நான் கலைஞர் பேரன் சொன்னதை கண்டிப்பாக செய்வேன். நீங்களும் நிறைவேற்ற வேண்டும். வேட்பாளரும் கலைஞர் பேரன் தான். கலைஞர் பேரனுக்கு கலைஞர் பேரன் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். இங்கு இருக்கும் அத்தனை பேரும் கலைஞரின் பேரன்கள் தான். நீங்கள் அத்தனை பேரும் பெரியாரின் பேரன்கள் தான், நீங்கள் அத்தனை பேரும் அண்ணாவின் பேரன்கள் தான். நாம் அனைவரும் கொள்கை பேரன்கள், லட்சிய பேரன்கள்'' என்றார்.

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.