Skip to main content

இந்த சிலையை எங்கே வைக்கப் போகிறீர்கள்?

Published on 08/02/2019 | Edited on 09/02/2019

வாழ்க்கையைக் கடமைக்கு என்று கழிப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். இவர்களுக்கு எதிலுமே சுவாரசியம் இருக்காது. ஒரு ஒழுங்குமுறை இருக்காது. நேர நிர்வாகம் இருக்காது.சாப்பிடுவதையும் கடமைக்கு என்று நினைப்பார்கள். விழாக்கள் கொண்டாடுவதையும் கடமைக்கு என்று நினைப்பார்கள். திருமணம் செய்து கொள்வதையும் கடமைக்கு என்றே எண்ணுவார்கள். இப்படி தங்கள் வாழ்வின் எந்தவொரு செயலையுமே கடமைக்கு என்றே கருதுவார்கள். இவர்களால் நிச்சயமாக எதனையுமே சாதிக்க முடியாது.  காலம்  பொன் போன்றதுகடமை கண் போன்றது என்பார்கள்.சிற்பி ஒருவர் சிலை ஒன்றை செதுக்கிக் கொண்டிருந்தார். அந்த வழியே வந்த வழிப்போக்கர் ஒருவர் சிலை செதுக்கும் அழகைப் பார்த்து ரசித்தார்.
 

statue working image

அப்போது அருகில் அதேபோன்ற சிலை ஒன்றும் இருப்பதைப் பார்த்தார். சந்தேகத்துடன், ‘‘யாராவது ஒரே மாதிரி இரண்டு சிலைகள் செதுக்க சொன்னார்களா?’’ என்று சிற்பியிடம் கேட்டார்.‘‘இல்லையே’’ என்றார் சிற்பி.‘‘அப்புறம் எதற்காக ஒரே மாதிரி இரண்டு சிலைகள் செதுக்கிக் கொண்டிருக்கிறீர்கள்?’’ என்று கேட்டார் வழிப்போக்கர்.‘‘அந்த சிலையில் சின்ன குறை ஏற்பட்டுவிட்டது. அதனால்தான் வேறொரு சிலையை செதுக்குகிறேன்’’ என்றார் சிற்பி.‘குறை எங்கே இருக்கிறது?’ என்று அந்த சிலையைக் கூர்ந்து பார்த்தார் வழிப்போக்கர். அவர் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை.‘‘இதில் எந்தக் குறையும் இருப்பதுபோலத் தெரியவில்லையே!’’ என்றார் வழிப்போக்கர் சந்தேகத்துடன்.‘‘அதன் மூக்கு பகுதியை நன்றாக உற்றுப் பாருங்கள். ஒரு சிறு கீறல் விழுந்திருப்பது தெரியும். அதனால்தான் இந்த சிலையை வடிக்கிறேன்’’ என்றார் சிற்பி.நன்றாக உற்றுப் பார்த்த பிறகுதான் அதில் மிக மெல்லிய கீறல் ஒன்று இருப்பது தெரிந்தது.இந்த சிலையை எங்கே வைக்கப் போகிறீர்கள்?’’ ‘‘அதோ தெரிகிறதே அந்த மேடையில்தான்’’ என்று சுட்டிக் காட்டினார் சிற்பி.மேடையைப் பார்த்த வழிப்போக்கர், ‘‘அது எவ்வளவு உயரம் இருக்கும்?’’ என்று கேட்டார். இருபது அடி உயரம் என்றார் சிற்பி. அவ்வளவு உயரத்தில் வைக்கும்போது கீறல் இருப்பது யாருக்கும் தெரியாதே. பிறகு ஏன் கஷ்டப்பட்டு இன்னொரு சிலையை வடிக்கிறீர்கள்? என் மனசாட்சிக்குத் தெரியும். இவ்வளவு அழகான சிலையைக் குறையோடு நிர்மாணிக்க எனக்கு விருப்பமில்லை’’ என்றார் சிற்பி.

அதாவது, கடமைக்காக எதனையும் செய்யக் கூடாது. கடமையை உண்மையாக, மனப்பூர்வமாக நினைத்து ரசித்து செய்ய வேண்டும். எதிலும் ஒரு முழுமை இருக்க வேண்டும்.ஒரு நிறைவு இருக்க வேண்டும்.ஆழ்ந்த ஈடுபாட்டுடன் ஒரு செயலைச் செய்கிறபோது இவை உங்களுக்குத் தானாகவே வந்துவிடும்.ஒரு செயல் பணம் தருகிறதா, புகழ் தருகிறதா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அது நமக்கு மனநிறைவைத் தருகிறதா என்பதில் மட்டுமே கவனமாக இருக்க வேண்டும்.சிரத்தையுடன் எதிலும் ஈடுபட வேண்டும். அதில் ஒழுங்கும், நேர்த்தியும் அவசியம் இருக்க வேண்டும். கடமையை கடமைக்காகச் செய்யக் கூடாது. மனநிறைவோடு செய்ய வேண்டும்.