இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுரேஷ் ராவ் அவர்களை நக்கீரன் நலம் யூடியூப் சார்பாக சந்தித்தோம். இதயம் சம்பந்தப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் விளக்கமளித்தார். அந்த வகையில், ஹார்ட் அட்டாக் அறிகுறிகள் குறித்தும், அப்படி ஹார்ட் அட்டாக் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி குறித்தும் கேட்டோம். அவர் அளித்த பயனுள்ள தகவல்கள் பின்வருமாறு..
இதயப்பகுதி இறுகியது போன்ற உணர்வு தான் முதல் அறிகுறி. லேசான வலி எடுக்க ஆரம்பிக்கும்போதே அருகில் இருக்கும் மருத்துவமனைக்குச் சென்று முதலுதவி செய்துவிட வேண்டும். மருத்துவமனை அருகில் இல்லாதபட்சத்தில் நீண்ட தூரம் போக வேண்டிய சூழல் ஏற்பட்டால் நோயாளியை முழு ஓய்வு எடுக்கும் நிலைக்கு ஆட்படுத்த வேண்டும். எந்த வேலையுமே செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
லேசான பதற்றம் கூட இதய அடைப்பின் ஆரம்பக்கட்டத்தில் இருப்பவருக்கு அதன் தீவிரத்தன்மையை அடைய வைக்கும். அதனால் லேசான டென்சன் கூட இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முதலுதவி என்பது வலி ஏற்படுகிறவர்களை தைரியப்படுத்துதல் தான். அவரிடம், “தைரியமாக இருங்க, பதட்டப்படாதிங்க” என்கிற நிலையில் பேச வேண்டும்.
சார்பிட்ரேட் என்கிற மாத்திரை உள்ளது, அதை நாக்கின் அடியில் வைத்துக்கொள்ள வேண்டும். அவசரத்திற்காக மாத்திரை வைத்துக்கொள்பவர்கள் இதையும் வைத்துக்கொண்டால் லேசான வலி ஏற்படும் போது பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த மாத்திரையால் லேசான இதய அடைப்பு ஏற்படும்போது இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சற்றே சீராகச் செல்ல வைக்க இயலும்.
இரத்த அழுத்தத்தின் அளவைப் பரிசோதித்து, அது அதிகரித்து இருப்பின் இரத்த அழுத்தம் குறைய மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் சிறந்தது, அருகில் இருக்கும் மருத்துவரையோ மருத்துவமனையையோ அணுகுவது தான்.