சீனாவிலிருந்து பரவத்தொடங்கிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரஸ் சுமார் இரண்டு லட்சம் பேரைப் பாதித்துள்ளது. மேலும், இந்த வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9000 ஐ நெருங்கியுள்ளது. மனிதர்களின் மூலம் பரவக்கூடிய இந்த வைரஸ் மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வைரசைக் கண்டு அச்சப்படுவதைத் தவிர்த்து, சற்று கவனமுடன் செயல்பட்டாலே இதிலிருந்து நம்மையும், நமது அன்புக்குரியவர்களையும் பாதுகாத்துக்கொள்ளலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
அப்படி, கரோனாவிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள மிகமுக்கியமான ஒன்று நமது தனிப்பட்ட சுகாதாரம். அதிலும் கைகளைத் தூய்மையாக வைத்துக்கொள்வது அவசியம் என அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், கைகளைச் சுத்தம் செய்வது என்பதில் கவனிக்கவேண்டிய சில விஷயங்களை முன்வைக்கின்றனர் மருத்துவர்கள். மேலும், கைகளை எப்படிக் கழுவ வேண்டும் என்பது குறித்தும் சில முக்கிய காரணிகளை முன்வைக்கின்றனர். அதன்படி கைகளைக் குறைந்தபட்சம் 20 வினாடிகளுக்கு மேல் நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அந்த 20 வினாடிகளில் நாம் பின்பற்றவேண்டிய முக்கியமான ஏழு வழிமுறைகளை விளக்குகிறது இப்பதிவு.
கை கழுவும் முறை;
1) கைகளைத் தண்ணீரில் நன்கு நனைத்த பிறகு கை முழுவதையும் கழுவுமளவு, போதுமான அளவு சோப்பு அல்லது ஹேண்ட் வாஷை எடுத்துக் கொள்ளுங்கள்.
2) முதலில் இரு உள்ளங்கைகளையும் சுத்தம் செய்ய வேண்டும். இரு கைகளின் விரல்கள் ஒன்றிணைத்தபடி உள்ளங்கைகளை சேர்த்து நன்கு தேய்க்க வேண்டும்.
3) அடுத்ததாக இரு கைகளின் புறங்கைகளையும் நன்றாகத் தேய்க்க வேண்டும். வலது புறங்கையை இடது உள்ளங்கையைக் கொண்டும், பின்னர் இடது புறங்கையை வலது உள்ளங்கை கொண்டும் நன்கு தேய்த்தல் வேண்டும்.
4) உள்ளங்கை மற்றும் புறங்கை இரண்டையும் நன்கு தேய்த்த பிறகு, இரு கைகளின் விரல்களுக்கு இடையேயானப் பகுதிகளை சுத்தம் செய்ய வேண்டும். விரல்களின் பக்கவாட்டு பகுதியில் சோப்பு நன்கு படும்படி இரு கைகளின் விரல்களையும் ஒன்றோடொன்று சேர்த்துத் தேய்க்க வேண்டும்.
5) அடுத்தபடியாக இரு கைகளின் விரல் நுனிகளைச் சுத்தப்படுத்தும் விதமாக இரு கைகளின் நுனிப் பகுதிகளையும் நன்கு தேய்க்க வேண்டும்.
6) இறுதியாக இரு கைகளின் கட்டைவிரல் பகுதியையும் நன்கு சுத்தப்படுத்த வேண்டும். ஒரு கையின் கட்டைவிரலை மற்றொரு கையின் விரல்களால் தேய்த்துச் சுத்தப்படுத்த வேண்டும்.
7) அதனையடுத்து கைகளைத் தண்ணீர் விட்டு சுத்தமாகக் கழுவிய பின்னர், நன்கு உலர்ந்த சுத்தமான துணியையோ அல்லது திசு பேப்பரையோ (Tissue Paper) கொண்டு கைகளை உலர்த்த வேண்டும்.