காதுகளை சுகாதாரமாக எப்படி பாதுகாப்பது மற்றும் காது தொற்று நோயிலிருந்து எப்படி பாதுகாத்துக்கொள்வது என்பதைப் பற்றி சில குறிப்புகளை காது, மூக்கு, தொண்டை நிபுணர் பிரபல டாக்டர் கிங்ஸ்டன் நம்மிடையே பகிர்ந்துள்ளார்.
முதலில் காது குடைவதைச் செய்யக் கூடாது. பென்சில், ஹேர் பின், குச்சி, சாவி போன்றவற்றை காதுக்குள் விடுவதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக காட்டன் பட்ஸ் வைத்து காதிலுள்ள செருமென் என்ற காது மெழுகை எடுக்கக் கூடாது. இன்றைக்குப் பெரும்பாலானோர் செய்கிற தவறே இதுதான். காட்டன் பட்ஸ் காதை சுத்தப்படுத்துகிறோம் என்று காதிலுள்ள மெழுகை காதுக்குள் மீண்டும் திணித்துவிடுகின்றனர். அதனால் எந்த மருத்துவர்களும் காதை சுத்தப்படுத்த காட்டன் பட்ஸ் பயன்படுத்துங்கள் என்று சொல்லமாட்டார்கள்.
காட்டன் பட்ஸ் பயன்படுத்துவதன் மூலம் சில நேரங்கள் காதிலுள்ள ஜவ்வு சேதமடைந்து கேட்கும் திறனை இழக்கும் சூழல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதனால் எப்போதுமே காட்டன் பட்ஸ் பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள். காட்டன் பட்ஸ் பயன்படுத்தும்போது சில நேரம் காதிலுள்ள மென்மையான தோலை சேதப்படுத்தி பூஞ்சை தொற்றுகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அடுத்ததாகக் காதுகளை எப்போதும் உலர் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஈரப்பதமாக வைத்திருப்பது நல்லதல்ல. குளித்த பிறகு காதுகளை மேலோட்டமாக உலர் நிலையில் வைத்திருப்பது அவசியமானது. காதுக்குள் தண்ணீர் சென்றுவிட்டால் காதை பிடித்து மேலும் கீழுமாகப் பிடித்து அசைத்தால் தண்ணீர் தானாக வந்துவிடும். காதுகளை உலர் நிலையில் வைத்திருப்பதன் மூலம் பூஞ்சை தொற்றுகளைத் தவிர்க்க முடியும்.
இரண்டு காதுகளுக்கும் இயற்கையாகவே தானாகச் சுத்தம் செய்யக்கூடிய வகையில்தான் உருவாகியிருக்கிறது. காதுகளில் உருவாகும் காது மெழுகுகள் காதுகளைப் பாதுகாக்க உருவானதுதான். சில பூச்சிகள் காதுக்குள் போகாமல் இருக்க அது உதவுகிறது. நாளாக நாளாகத் தூங்கும்போது அல்லது குளிக்கும்போது அந்த காது மெழுகுகள் தானாக வெளியே வந்துவிடும். அதனால் அந்த காது மெழுகை தொடர்ச்சியாக சுத்தம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிலருக்கு மட்டும் அந்த காது மெழுகுகள் காதில் அதிகமாக சுரந்து அடைப்பு ஆகிவிடும். அப்படியாகி விட்டால் மருத்துவர்களை அணுகி சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளலாம். அதைவிட்டுவிட்டு காதுகளை சுத்தம் செய்யும் முயற்சிகளில் ஈடுபடக்கூடாது.
அதே போல் பாடல்கள் கேட்பதற்கு இயர் பட்ஸ்கள், இயர் போன்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிடுங்கள் இல்லையென்றால் செவித் திறன் குறைய வாய்ப்புள்ளது. பாடல்களைக் கண்டிப்பாக கேட்க வேண்டும் என்றால் என்றால் ஸ்பீக்கர் அல்லது ஹெட் ஃபோன்களை தொடர்ந்து பயன்படுத்தாமல் இடைவெளிவிட்டுப் பயன்படுத்தலாம். இப்படி செய்வதன் மூலம் காதுக்குள் காற்றோட்டம் அதிகமாகும். அதனால் காதுகளும் உலர் நிலையில் இருக்கும் அதனால் காதுகள் பாதுகாப்பாக இருக்கும் என்றார்.