பிரசவம் பார்க்கும் சரியான முறை குறித்து டாக்டர். அருணாச்சலம் விளக்குகிறார்
குழந்தை பிறப்பு என்பது ஒரு நோய் கிடையாது. அது ஒரு சாதாரண நடைமுறை. அந்தக் காலத்தில் பிரசவம் பார்ப்பதில் கைதேர்ந்தவர்கள் இருந்தார்கள். அவர்கள் படித்தவர்களாக இல்லாவிட்டாலும், பல பிரசவங்களைக் கையாண்ட அனுபவம் அவர்களிடம் இருந்தது. நவீன மருத்துவம் வளர்ந்த பிறகு, ஒவ்வொரு வாரமும் கரு எந்த அளவுக்கு வளர்கிறது என்பது கண்காணிக்கப்படுகிறது. சில நேரங்களில் கருவின் தலை பெரிதாக இருந்தால் அறுவை சிகிச்சை செய்துதான் குழந்தையை வெளியே எடுப்பார்கள்.
பிரசவம் நல்லபடியாக அமைய வேண்டும் என்பது மட்டும்தான் அறுவை சிகிச்சை செய்வதற்கான நோக்கம். தனியார் மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பது இப்போது குறைந்துவிட்டது. அரசு மருத்துவமனைகளில் தான் இப்போது அதிகம் பிரசவம் பார்க்கப்படுகிறது. அங்கு நல்ல முறையிலேயே வைத்தியம் பார்க்கப்படுகிறது. அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களுக்காக குழந்தைகளுக்குத் தேவையான பொருட்கள் அடங்கிய பரிசுப் பெட்டகம் வழங்கப்படுகிறது. கர்ப்ப காலத்தில் பெண்கள் இறக்கும் சம்பவங்கள் கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் குறைவாகவே நடைபெறுகின்றன.
பெண்களைக் காக்கவும், மகிழ்ச்சியாக வைத்திருக்கவும் அனைவரும் முயற்சி செய்வதற்கு முக்கியமான காரணம், இந்த பிரசவ நேரம் என்பது அவர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு மறுபிறவி போன்றது என்பதால் தான். பிறந்த குழந்தைகளின் இறப்பு சதவீதமும் தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளது. விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்திருந்தாலும், மருத்துவர்கள் எவ்வளவு பயிற்சி பெற்றிருந்தாலும், மருத்துவ கட்டமைப்பு எந்த அளவுக்கு முன்னேறியிருந்தாலும், தாய் மற்றும் குழந்தையின் இழப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது.
தாய் மற்றும் குழந்தையின் இறப்பைத் தவிர்க்கவே மருத்துவமனைகள் பயன்படுகின்றன. கர்ப்ப காலத்தில் மருத்துவர்களை நிச்சயம் தவிர்க்கக் கூடாது. செலுத்த வேண்டிய தடுப்பூசிகளை சரியான நேரத்தில் செலுத்திக்கொள்ள வேண்டும். பல ஆண்களுக்கு இதன் முக்கியத்துவம் புரிவதில்லை. பெண்களின் கர்ப்பகால வேதனைகள் அவர்களுக்குத் தெரிவதில்லை. மருத்துவரின் உதவி இல்லாமல் வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் விபரீதத்தை நிச்சயம் அனைவரும் தவிர்க்க வேண்டும். அனைத்து விஷயங்களிலும் முன்னேறிய நாம், மருத்துவ விஷயத்தில் பின்னோக்கி செல்வது தவறு. நவீன மருத்துவர்களின் கைப்பிடித்து நாம் செல்வதுதான் நம் நாட்டின் வளர்ச்சிக்கான பாதையாக இருக்க முடியும்.