குறட்டையால் பாதிக்கப்படுகிற குழந்தைகளை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால் என்ன நடக்கும், குறட்டையால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்படும் போது, மயக்கமருந்து நிபுணர்களின் அவசியம் குறித்து மயக்கவியல் நிபுணர் டாக்டர் கல்பனா நமக்கு விளக்குகிறார்.
குறட்டை பிரச்சனையால் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இரவில் குறட்டை விடுகிற குழந்தைகளுக்கு பல பிரச்சனைகள் இருக்க வாய்ப்பிருக்கிறது. அதை சரியாக கவனிக்க வேண்டும்.
ஒரு குழந்தை தூங்கும் போது குறட்டை விடுகிறாள் அவளுக்கு எதாவது மருந்து கொடுங்கள் என்று மருத்துவரை அணுகியிருக்கிறார். குழந்தையை நேரில் பார்க்காமல் மருந்து கொடுக்க இயலாது. நேரில் அழைத்து வாருங்கள் என்று வரச்சொல்லி பரிசோதித்தால் மூக்கின் உட்புறத்தில் இயல்பான அளவை விட அதிகமாக சதை வளர்ந்திருக்கிறது. குழந்தைகளுக்கு அரிதாக வரக்கூடிய பிரச்சனையாகும்.
13 வயது குழந்தை பல நாட்களாக வாயில் தான் மூச்சு விட்டு இருந்திருக்கிறாள். யாருமே இதை கவனிக்காமல் இருந்திருக்கிறார்கள். பிறகு அறுவை சிகிச்சையின் மூலம் தான் இதை சரி செய்ய முடியும் என்றும், அதற்கு முன் மயக்கமருந்து கொடுப்பதற்கு நிபுணரை அணுகினர். மயக்க மருந்து நிபுணர்கள் பரிசோதித்து அறுவை சிகிச்சையின் போது வலி ஏற்படாமல் இருப்பதற்கும், இதய துடிப்பின் அளவினை பரிசோதித்தும் மயக்க மருந்து அளவு எடுத்து கொடுப்பார்கள்.
இந்த குழந்தைக்கு முழு மயக்க மருந்து தேவைப்பட்டது. குழந்தையை முழுமையான மயக்க நிலைக்கு கொண்டு போய் அறுவை சிகிச்சை செய்தனர், இரண்டு மூக்கு துவாரத்திலும் சதை வளர்ந்திருந்தது. அதை நீக்கி அறுவை சிகிச்சை செய்தனர். சில நாட்களுக்குப் பிறகு தன்னால் மூக்கின் வழியாக சுவாசிக்க முடிகிறது என்று மகிழ்ச்சியோடு அந்த குழந்தை சொன்னது.
சில சமயம் குறட்டைக்கு உடற்பருமன் காரணமாக சொல்லப்படும். ஆனால் சில குழந்தைகள் ஒல்லியாக இருப்பார்கள், அவர்களும் குறட்டை விடுவார்கள், தூங்கும் போது சுவாசிக்க உகந்தவாறு படுத்து இருக்க வேண்டும், அப்போது குறட்டையிலிருந்து விடுதலை அடையலாம். எல்லா விதமான குறட்டைக்கும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை ஏற்படாது. ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டு குறட்டையின் தன்மை தீவிரம் அடைந்த பிறகு மருத்துவரை அணுகும் போது நோயின் தன்மையைப் பொறுத்து அறுவை சிகிச்சை தேவையா அல்லது வெறும் மருந்து மாத்திரையால் குணப்படுத்தி விடலாமா என்பது பரிசீலிக்கப்படும்.