நக்கீரன் நலம் வாயிலாக மன நலம் சம்பந்தப்பட்ட பல்வேறு விஷயங்களை மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் நம்மிடையே பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இன்றைய தலைமுறைகள் நட்பு, காதல், பெஸ்டி, சூழ்நிலைக்கேற்ப பழகுவது போன்றவற்றைப் பற்றி தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
நட்பிற்கு அடிப்படை என்பது நட்பு வைத்துக்கொள்பவர்களை முதலில் பிடித்திருக்க வேண்டும். அவர்களிடம் இருக்கும் ஏதோ ஒரு பண்பினால் ஈர்க்கப்பட்டிருக்க வேண்டும். சிலர் தேவைகளுக்குக்காக நண்பர்களை உருவாக்கிக்கொள்வார்கள். உதாரணத்திற்கு அரசியல் பேச வேண்டும் என்றால் அரசியலைப் பற்றித் தெரிந்தவர்களிடம் நட்பு வைத்துக்கொள்வார்கள். சிலர் வெறும் ஜாலியாக பேசுவதற்கு மட்டும் நட்பை உருவாக்கிக்கொள்வார்கள். ஆனால், காதலுக்கு இதெல்லாம் தேவையில்லை. ஏனென்றால் காதலை எமொஷ்னலாக கருத முடியும். அது ஒரு நரம்பியல் மாற்றம் என்றும் பயாலஜிக்கல் டிரைவ் என்றும் சொல்லலாம். காதல் என்பது சிக்கலான ஒன்று. அதில் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சிகள் வெளிப்படும். அப்செசிவ் கம்பல்சிவ் கோளாறு(OCD) பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் காதலர்கள் பிரிந்து சென்றால் அந்த வலியிலிருந்து வெளிவர முடியாமல் தவிப்பார்கள். மேலும் காதலித்தவர்களை அச்சுறுத்தும் செயல்களைச் செய்வார்கள். இதெல்லாம் நட்பில் வெளிப்படாது.
ஒருவரைப் பிடிக்காமலேயே அவரை காதலிக்க முடியும். காதல் வந்துவிட்டால் முடிவெடுக்கும் திறன், பயம், மன அழுத்தம் குறையும். ஆனால் பிறகு வர வாய்ப்பிருக்கிறது. நண்பர்களாகவும் இருந்துகொண்டு அவர்களிடம் ஆதாயம் தேடுபவர்களால் கடைசி வரை நண்பர்களாக இருக்க முடியாது. அதில் குறிப்பிட்டவர்கள் தொடர்ந்து உடலுறவு வைத்துக்கொள்கிறார்கள். இந்த மாதிரி பழகி வருபவர்களின் உறவுகள் 50 சதவிகிதம் தோல்வியில் முடிந்துள்ளது. அவர்களால் நட்பா? காதலா? என்று தீர்மானிக்க முடியாமல் கடைசியில் குழம்பி நிற்பார்கள். இப்போது இருக்கும் இளைய தலைமுறைகள் இதுபோல அதிகமாகக் குழப்பிய நிலையில் இருக்கிறார்கள். நட்பும் இல்லாமல் காதலும் இல்லாமல் எதிர்ச்சியாக நடப்பதுதான் இந்த பெஸ்டி வகை உறவுகள். இப்படிப் பழகுபவர்கள் அவர்களுக்கான எல்லையை உருவாக்கி அதிலிருந்து வெளிவர முடியும். ஒரு வேளை அதில் உடலுறவைத் தேடினால் அவர்கள் எமோஷனலாக உடைய வாய்ப்புள்ளது.
பெஸ்டியாக பழகி வருவபவர்களுக்கு ஒரு கட்டத்தில் தங்களது பழக்கம் உடலுறவில் முடியும் என்று தோன்றினால் அவர்கள் எதற்காகப் பழகினார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்கள் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்களா? என்று அவர்களுக்கே தெரியாது. தங்களுக்கான எமோஷ்னலை புரிந்துகொண்டு நடந்தால் மன அளவில் இந்த பெஸ்டி உறவில் பாதிப்பில்லாமல் வெளிவர முடியும். சிலர் சூழ்நிலைக்கேற்ப குறிப்பிட்ட நேரத்தில் பழகி உடலுறவு வைத்துக்கொள்வார்கள் இது ஆபாசப் படம் பார்ப்பதுபோலத்தான். இதில் கடைசியாக பெண்களை இந்த சமூகம் குறை சொல்லும்.
பெண்களுக்கு உண்மையான பாலியல் சுதந்திரத்தை இந்த சமூகம் கொடுக்கவில்லை. சில பெண்கள் 5,6 நபர்களிடம் உடலுறவு செய்து கொள்வதை பாலியல் சுதந்திரம் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் மனைவியே தன்னுடைய கணவனிடம் பாலியல் ரீதியான தேவைகளைச் சொல்ல முடியாத சூழலில் அடிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். தனிப்பட்ட நபரின் பாலியல் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதுதான் பாலியல் சுதந்திரம். இது குறித்த புரிதல் இப்போது இருக்கும் இளைய தலைமுறைகளுக்கு இல்லை. பெண்கள் படுக்கையறையைக் கூட இந்த சமூகம் இன்றைக்கு தீர்மானித்து வருகிறது. சீனாவில் முசுவோ என்ற பெண்வழிச் சமூகம் இருக்கிறது. அங்கு பாலியல் துன்புறுத்தல்கள் கிடையாது. அங்கு பெண்கள்தான் குழந்தைகளை வளர்த்து குடும்ப முடிவுகளை எடுக்கிறார்கள். அதுபோல இங்கு மாறினால்தான் பெண்களுக்கான பாலியல் சுதந்திரத்தைப் பற்றிப் பேச முடியும் என்றார்.