சமூக வலைத்தளங்கள் செய்தி மற்றும் தொலைக்காட்சிகளில் நேற்று ஒரு வீடியோ பரவலாக வைரல் ஆகியது. ஒரு துடுக்கான இளைஞன் ஊரடங்குக்கு எதிராக போலீசை எதிர்த்து வாக்குவாதம் செய்கிறார். உடல் மொழி, முகத்தில் காட்டும் பாவனைகள் பேச்சு போன்ற அவரது ஆக்ரோஷமான கோப உணர்வு வெளிப்பாடுகள் நமக்குள்ளும் கடத்தப்படுகிறது. அதைப் பார்ப்பவர்கள் தானும் அவராகவே மாறும்படியான உணர்ச்சிகரமான நிகழ்வு. அந்த இளைஞனுக்கே நாம் கொஞ்சம் அதிகமாகத்தான் பண்ணுகிறோம் என்று மனதுக்குள் இருந்திருக்கும். அது அவர் முகத்தில் தெரிந்தது . சில சினிமா முன்னணி கதாநாயகி , நாயகர்கள் வில்லன் நடிகர்களின் ஒட்டு மொத்த அங்க அசைவுகளை அப்படியே அவர் பிரதிபலித்தார். சினிமா எந்த அளவுக்கு இன்றைய இளைய சமுதாயத்தை பாதித்து உள்ளது என்பதையே அவர் நடவடிக்கைகள் வெளிப்படுத்தின. ஆனால், சினிமாவும் வாழ்க்கையும் வேறு வேறு உலகம். அது ஒரு மாயை என்பதை அதற்கு பின் நடந்த சட்டப்பூர்வமான காவல்துறை நடவடிக்கைகள் அவருக்கு மட்டுமல்ல, பலருக்கும் உணர்த்தியது . அவர் உதை வாங்கியது வருத்தமான சம்பவம் தான். ஆனால் சட்டங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் . இந்த ஊரடங்கு மக்கள் பாதுகாப்புக்காக மட்டுமே. சினிமா இயக்குனர்களின் கற்பனை வளமோ அல்லது நடிகர்களோ, கதாநாயகிகளின் தோழிகளோ அவரை வந்து காப்பாற்ற இயலவில்லை.
மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரசின் சமூக பரவல் மற்றும் பாதிப்புகளை பல வகைகளிலும் எடுத்துச் சொல்லி, மக்கள் நலனுக்காக, உயிர் காக்கும் ஒட்டு மொத்த அரசு இயந்திரங்களின் செயல் பாட்டையும் கேலி கிண்டல் செய்வது போல இருந்தது அந்த வாலிபரின் கோபம். இதில் ரொம்ப ஹைலைட் ''சட்டம் போட்ட முதலமைச்சர இங்க வரச்சொல்'' என்ற அந்த வார்த்தைகள் தான். முதலமைச்சர் மட்டுமல்ல சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் அனைத்து அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள், நர்சுகள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என அனைவருமே ஒன்றுபட்டு கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் சட்டத்தை மதித்து தேசம் காக்க போராடும் வேளையில் ஒத்துழைப்பு கொடுப்பதே இந்தியக் குடிமக்களாகிய நம் கடமை. சில சிரமங்கள் அனைவருக்குமே உண்டு உண்மைதான். ஆனால் உயிர் வாழ்வது அதைவிட மிக முக்கியம் அல்லவா. ஊரடங்குக்கு கட்டுப்பட்டு ஒத்துழைத்து நம் சந்ததிகளை காப்போம் . ஒழியட்டும் கொரோனா வைரஸ்.