மனிதனின் வாழ்க்கையில் தூக்கம் எவ்வளவு அவசியமானது என்பதையே இந்த இயந்திர உலகில் நாம் மறந்துவிட்டோம். தூக்கத்தின் முக்கியத்துவம் குறித்தும் நம்முடைய உடலின் அமைப்பு குறித்தும் பல தகவல்களை நமக்கு ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா வழங்குகிறார்.
காலையில் நாம் எழுந்து இரவு உறங்குவது முதல் பல்வேறு காலநிலை மாற்றங்கள் வரை உலகம் ஒரு குறிப்பிட்ட ரிதமில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதுபோல் நம்முடைய உடலிலும் நேரத்தை அட்ஜஸ்ட் செய்யும் ஒரு கடிகாரம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நாம் உண்பது, உறங்குவது உள்ளிட்ட அனைத்தும் இதன்படியே நடக்கிறது. 24 மணி நேரமும் இயங்கும் கடிகாரம் இது. நம்முடைய கண்ணில் இருக்கும் சென்சார் வழியாகத்தான் உடலின் ரிதம் மாற்றியமைக்கப்படுகிறது.
தூக்கம் என்பதையே இப்போது நாம் மறந்துவிட்டோம். அதிகாலை நேரங்களிலேயே மாரடைப்பு அதிகம் ஏற்படுகிறது என்கிற செய்தியை நாம் படித்திருப்போம். காலை 6 மணி முதல் 8 மணி வரை இது அதிகம் ஏற்படுகிறது. காலை வேளையில் நம்முடைய மூளை சுறுசுறுப்பாக இயங்கும். மதிய நேரங்களில் மந்தமாகிவிடும். மாலை 4 மணி முதல் 6 மணி வரை உடற்பயிற்சி செய்ய சரியான நேரம். மாலை 6 முதல் 8 மணிக்குள் உங்களுடைய இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு இருக்கும் நேரம் நாம் தூங்குவதற்கான நேரம்.
இரவு 9 மணிக்கு மெலடோனின் ஹார்மோன் சுரக்க ஆரம்பிக்கும்; அது தூக்கத்திற்கான ஹார்மோன்; நல்ல தூக்கத்தினால் நினைவுத்திறன் அதிகரிக்கும்; ஹார்மோன் சுரப்பு சரியாக இருக்கும்; உடல் பாகங்களுக்கு நல்லது; உங்களுடைய உணர்வுகள் சரியாக இயங்கும். சரியான தூக்கம் இல்லாவிட்டால் இவை அனைத்துமே பாதிக்கப்படும். இரவு நேரத்தில் உடல் தூக்கத்திற்குத் தயாராகும். உணவுக்குத் தயாராகாது. எனவே கடினமான உணவுகளை இரவில் உண்பதைத் தவிர்க்க வேண்டும். இரவு நேரத்தில் மொபைல் பார்த்துக் கொண்டிருந்தால் தூக்கம் கடுமையாக பாதிக்கும்.
இரவு 9 மணிக்குத் தூங்கி காலையில் 5 மணிக்கு விழிப்பது தான் நல்லது என்று அறிவியல் கூறுகிறது. முன்னோர்கள் செய்தது அனைத்தையுமே நாம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அறிவியல் ரீதியாக வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே சிறந்தது. நம்முடைய உடல் எவ்வாறு இயங்க வேண்டும் என்பதில் நாம் தலையிடவே முடியாது. அவ்வாறு தலையிட்டு அதன் நடைமுறைகளை மாற்றினால் கடுமையான விளைவுகள் ஏற்படும். தூக்கமின்மையால் பல்வேறு நோய்கள் ஏற்படும் வாய்ப்புண்டு.