Skip to main content

கர்நாடக இசையில் இவ்வளவு விசயங்கள் இருக்கிறதா? - விளக்குகிறார் ஹோத்ரா

Published on 22/10/2022 | Edited on 22/10/2022

 

Are there so many things in Carnatic music?- Explains Hotra!



'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு கர்நாடக இசையில் பயிற்சி பெற்றவரும், பரத நாட்டிய கலைஞருமான ஹோத்ரா சிறப்பு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "கர்நாடக இசையில் ஐந்து ஸ்தாயி இருக்கிறது. அதில் மத்திய ஸ்தாயி, தார ஸ்தாயி, மந்திர ஸ்தாயி, அதித்தார ஸ்தாயி, அனுமந்திர ஸ்தாயி ஆகியவை அடங்கும். இவையெல்லாம் வீணை மற்றும் மற்ற வாத்தியங்களில் வாசிக்க முடியுமே தவிர, நிரூபணம் செய்ய முடியாது. நவராக மாளிகை வர்ணத்தில் மட்டும் தான் அனுமந்திர ஸ்தாயி, அதித்தார ஸ்தாயி  உள்ளது. 

 

நாங்கள் படிக்கும்போது ஒரு வருடத்திற்கு 60 ராகங்கள் படிக்க வேண்டும்; 60 ராக லட்சணங்களைக் குறித்து படிக்க வேண்டும்; 60 கீர்த்தனைகள் குறித்து கட்டாயம் படிக்க வேண்டும். ஒரு வருடத்திற்கு தியாகராஜர், சங்கீத மும்மூர்த்திகள், தேவாரம் நால்வர் உள்ளிட்ட 60 இசை மேதைகளின் வாழ்க்கை வரலாறை நாங்கள் படிக்க வேண்டும். அவ்வளவு விசயங்களை சங்கீதத்தில் கற்றுக்கொண்டு வந்திருக்கிறோம். கல்லூரியில் படிக்கக் கூடிய மாணவ, மாணவிகள் தனியார் இசைப் பள்ளியில் படிக்கக் கூடிய மாணவ, மாணவிகளுக்கு ஒரு செமஸ்டருக்கு ஐந்து ராகம் மட்டுமே கொடுக்கிறார்கள்.

 

அதுவும், எந்தெந்த ராகங்கள் என்பது குறித்து நாமே தேர்ந்தெடுக்கும் வகையில் உள்ளது. இந்த அளவுக்கு ஏன் பாடக் குறைப்பு ஏற்பட்டது?, நாங்களே குறைவாக தான் படித்தோம் என்று வேதனைப்படுகிறோம். லட்சக்கணக்கான ராகங்கள் வெளியே வந்திருக்கிறது. அவ்வளவு ராகங்கள் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. மற்றொன்று பேராசிரியர்கள், ஆசிரியர்கள் தங்களது சிஷ்யர்களுக்கு கற்றுக் கொடுப்பதேயில்லை. தங்களுக்கு தெரிந்த நுணுக்கங்களை சிஷ்யர்களுக்கு ஏன் கற்றுக் கொடுக்கவில்லை? அதனால்தான் கர்நாடக இசை அழிந்து வருகின்றது என்று சொல்கிறேன். 

 

கலை கலையாக மதிக்கப்படாமல் தொழிலாக மாற்றப்படுகிறது. அந்த காலத்தில் கர்நாடக இசை என்றால் பயந்து கொள்வார்கள். இன்றைய காலக்கட்டத்தில் கர்நாடக இசையை அனைவரும் படிக்கிறார்கள். எனினும், இந்த காலக்கட்டத்தில் ஒரு ராகம் பாடினால் பாஸ் என்கிறார்கள். அதனால் தான் கர்நாடக இசையின் தரம் குறைந்து கொண்டே வருகிறது. தேய்ந்து கொண்டே வருகிறது. இசை வித்வான்கள் எல்லாம் ஏன் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்? ஏன் கலைஞர்கள் எல்லாம் தூங்கிக் கொண்டிருக்கின்றனர்?

 

எத்தனை பி.ஏ.மியூசிக் முடித்தவர்களும் எம்.ஏ. மியூசிக் முடித்தவர்களும் கல்லூரிகளுக்குச் சென்று இசைப் படிப்பு படிப்பவர்களும் கச்சேரி நடத்துகிறார்கள். கச்சேரி நடத்த தைரியம் இருக்கா? இன்றைக்கு தேவாரம் என்றால் என்னவென்றே தெரியவில்லை." இவ்வாறு ஹோத்ரா தெரிவித்துள்ளார்.