மார்ச் 8 உலக பெண்கள் தினமாக கொண்டாடப்படுகிது. பெண்களின் சுயமரியாதைக்கு கல்வி மிகவும் முக்கியம். அதுதான் தற்சார்பைத் தரும், சுயமரியாதையைத் தரும். இக்காலத்தில் பெண்கள் விண்வெளி வரை சென்றுவிட்டனர். ஆனால், 16 ஆம் நூறாண்டில் உலகம் முழுவதும் ஜனநாயகம் என்றால் என்ன என்ற கேள்வி எழக்கூட இல்லாத காலகட்டத்தில் ஒரு பெண் சட்டம் பயின்று அந்த துறையில் முனைவர் பட்டம் வாங்கியிருக்கிறார் என்றால் நம்பவா முடிகிறது, முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணியும் இவர் தான்.
ஜூலியானா மோரல் என்னும் அந்த ஸ்பானிஷ் பெண், பார்சிலோனாவில் பிறந்தவர். தனக்கு இரண்டு வயது இருக்கும் போதே தன் தாயாரை இழந்தவர். தந்தையின் கவனத்தில் வளர்க்கப்பட்ட பெண்ணாக இருந்தாலும் கல்வியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இவருக்கு நான்கு வயது இருக்கும் போதே லத்தீன், கிரேக்கம், ஹீப்ரூ மொழி போன்ற மொழிகளை நன்கு கற்றவர். வீட்டிலே கல்வி கற்கும் வசதியிருந்ததால் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்றார், ஜூலியானா. தனது எட்டாம் வயதில் தந்தையுடன் லியானுக்கு சென்றார். அங்கு சென்றும் கல்வியைப் பாதியிலேயே விடவில்லை, மீண்டும் கற்க ஆரம்பித்தார். தினசரி பேச்சு , ஆராய்ச்சி, நெறிமுறைகள், இசை போன்றவற்றில் ஒன்பது மணி நேரம் செலவு செய்தார். தன் 12 ஆவது வயதிலேயே மக்கள் முன் தன் ஆராய்ச்சிக் கட்டுரைகளை தனித்துவமாக வெளியிட்டார். பின்னர் அவர் இயற்பியல், மெட்டா பிசிக்ஸ் மற்றும் சட்டமும் பயின்றார்.
தந்தையின் அறிவுரைக்கு இணங்க, கானான் மற்றும் சிவில் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற நினைத்தார். மேல் படிப்பிற்காக தந்தையுடன் அவிஞ்ஞான் என்னும் ஊருக்கு சென்றார். 1608 ஆண்டு தன் ஆராய்ச்சி கட்டுரையை பலதரப்பு மக்களுக்கு முன்னும், இளவரசி டி'கொண்டே முன்னும் வெளியிட்டார். அதன் பின் முப்பது வருடங்கள் கான்வென்ட்டில் பிரியராசஸ் என்னும் பெரும் பதவியில் இருந்துகொண்டு, மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் கல்வி கற்றுத்தரும் ஆசிரியராக விளங்கினார். 1653 ஆம் ஆண்டு நோயின் காரணமாக மறைந்தார். இவரை பற்றி லோப் டி வேகா என்னும் கவிஞர் புகழ்ந்து எழுதுகையில்," அவள் ஒரு ஏஞ்சல், பொதுமக்களுக்காக அறிவியலை கற்றுத்தந்தவள்" என்கிறார். இவரின் கதையை அறியும் போதே பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரு இன்ஸபிரேஷனாக இருக்கிறார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.