இன்றைய தலைமுறை இணையம் இல்லாமல் இருக்க முடியாது. உலகம் ஓடிக்கொண்டிருக்கும் வேகத்தில் நாமும் சரி, நம் குழந்தைகளும் சரி ஈடுகொடுக்க வேண்டுமென்றால் அதற்கு இணையம் அவசியம். இதில் மாற்றுக்கருத்து இருக்காது. குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் அவர்களின் அறிவை வளர்க்க நாம்தான் உதவி செய்ய வேண்டும். "நீங்க என்ன வேணும்னாலும் சொல்லுவீங்க, குழந்தை பாக்கக் கூடாதத பாத்துருச்சுனா, தப்பா எதாவது வந்துருச்சுனா, இந்த வயசுலேயே பேஸ்புக் பாக்க ஆரம்பிச்சா என்ன பண்றது" என்று கேட்பவர்களுக்கு, "நாங்க இருக்கோம்" என்று கூகுள் கொண்டுவந்ததுதான் கிடில் (kidle.com). இது பலநாட்களுக்கு முன்பிருந்தே இருந்தாலும், இந்தியாவில் இதை பரவலாக பயன்படுத்தப்படுவது இல்லை.
நீங்கள் இதில் தலைகீழாக நின்று தேடினாலும் ஆபாசம் சார்ந்த எதுவும் (sexual contents) பார்க்க முடியாது. பேஸ்புக், ட்விட்டர் போன்ற எந்தவிதமான சமூக ஊடங்களுக்கும், கூகிள், யூடூயூப் போன்ற பிரபலமான பக்கங்களுக்கும் இந்த வலைத்தளத்திலிருந்து செல்ல முடியாது. இதனால் குழந்தைகள் தங்களுக்கு தேவை இல்லாதவற்றை பார்க்க இயலாது. இதில்வரும் விவரங்கள் யாவும் குழந்தைகளுக்கு புரியும் வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. கடினமான ஆங்கில வார்த்தைகள் இதில் இல்லாமலும், மிகநீளமாக, பத்தி பத்தியாக இல்லாமல் குழந்தைகள் படிக்கும் அளவிற்கு சுருக்கமாகவும் இதில் தரவுகள் தரப்பட்டுள்ளன. இதனால் குழந்தைகள் தேவையில்லாத, அதிகளவு கருத்துக்களை தவிர்த்துவிடுகின்றனர்.
குழந்தைகளை தைரியமாக இதில் உலாவ விடலாம் அவர்களுக்கு வேண்டியதை அவர்கள் கற்றுக்கொள்வார்கள். நீங்கள் அருகிலிருக்க வேண்டிய அவசியம் இதில் இல்லை என்றாலும், அவர்களுக்கு அருகில் நீங்கள் இருக்கும்போதுதான் குழந்தைகள் முழுமையாக கற்றுக்கொள்ள முடியும், அவர்களின் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள முடியும்.