Skip to main content

எரி என்னும் சிறுசொல்லுக்குப் பற்பல பயன்பாடுகளா ? - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 36

Published on 24/04/2019 | Edited on 07/05/2019

உயிரெழுத்தில் தொடங்கும் சொற்கள் யாவும் மொழிக்கு உயிர்போன்ற சொற்கள். அவற்றில் பல சொற்கள் ஓரெழுத்து ஈரெழுத்துச் சொற்களாகவே தோன்றி நிற்கும். ஒரு சொல்லானது ஒன்றோ இரண்டோ எழுத்துகளால் ஆகி வழங்குகிறது என்றால் அச்சொல் நூற்றுக்கணக்கான பிற சொற்களுக்கு வேர்ச்சொல்லாகும். அவ்வொரு சொல்லின் வழியாக நாம் பல புதுச்சொற்களை உருவாக்கி வழங்கலாம். இத்தொடரில் அத்தகைய ஆணிவேர்ச்சொற்களை உரிய இடைவெளிவிட்டு வழங்கிவிடவேண்டும் என்பதும் என்னவா. 
 

soller uzhavu


எரி என்ற ஈரெழுத்துச் சொல்லை எடுத்துக்கொள்வோம். எ என்னும் உயிரெழுத்தில் தொடங்கும் சொற்களில் இது இன்றியமையாதது. எரி என்பதற்குத் “தீக்கொழுந்திற்குள் ஒன்றையிடு, தீயினைத் தொடர்ந்து கொழுந்துவிடச் செய்” ஆகிய ஏவற்பொருள்கள் உள்ளன. எரிதல், எரிவு, எரிகை, எரிப்பு எனவும் தொழிற்பெயராகும். எரிந்தான் என்றால் தன்வினையாகும். எரித்தான் என்றால் பிறவினையாகும்.
 

தீயில் எறிந்தது - தீயில் எரிந்தது என்ற தொடர்களை நோக்குங்கள். தீயில் எறிதல் என்றால் தீயில் வீசுதல். தீயில் எரிதல் என்றால் தீக்கொழுந்தினால் தானும் தீப்பற்றி எரிந்து போதல்.
 

எறி என்று வல்லின றகரத்தைப் பயன்படுத்தினால் குண்டெறிதல், வட்டெறிதல், பந்தெறிதல் ஆகிய வீசுவினைகளைக் குறிப்பதாகும். எரி என்று இடையின ரகரத்தைப் பயன்படுத்துவதுதான் தீயோடு தொடர்புடைய எரியும் வினைப்பொருள் தரும். இவ்வேறுபாட்டினை மறந்தவர்கள் “பந்தை எரிந்தான், தீயிலிட்டு எறித்தான்” என்று பிழையாக எழுதுவார்கள்.

 

soller uzhavu


எரி என்பது ‘எரிப்பாயாக’ என்னும் ஏவல் பொருள் தரும் வினைவேர்தான். “குப்பையை எரி, பழைய தாள்களை எரி” என்று கட்டளையிடலாம். எரி என்பது நெருப்பு, தீ என்னும் பொருளில் முதல்நிலைத் தொழிற்பெயரும் ஆகும். அடி, உதை, குத்து, சொல் என்பன ஏவல்பொருள் தரும் வினைவேராக இருந்தபடியே அந்த வினைக்குரிய பெயர்ச்சொல்லும் ஆகின்றனவே, அவ்வாறே எரி என்ற சொல்லும் வினையும் பெயருமாம். ஏவல்வினையே பெயராகவும் பயில்வதைத்தான் முதல்நிலைத் தொழிற்பெயர் என்கிறார்கள்.
 

வேள்வித்தீயினை ‘எரி’ என்றிருக்கிறார்கள். எரியூட்டுவதற்கு, தீத்தள்ளுவதற்கு ஏதேனும் கம்பு, தடி போன்ற பொருள் பயன்படுத்தப்பட்டாலும் அதனை ‘எரி’ என்றார்கள். நரகத்திற்குத் தமிழில்  ‘எரி’ என்று பெயர். ஏழுவகை நரகங்களில் ஒன்றுக்கு ‘எரிபரல்வட்டம்’ என்று பெயராம். அங்கே தீத்தழல் அணையாது எரிந்துகொண்டிருக்கும் என்பதால் அப்பெயர் வழங்கப்பட்டிருக்க வேண்டும். வானிலிருந்து விண்கல்லொன்று புவிக்கோளத்தின் வளி மண்டலத்தில் விழும்போது அது தானாகவே தீப்பிடித்து எரிந்தபடி விழும். அவ்வாறு விழுவனவற்றை எரிநட்சத்திரங்கள், எரிகற்கள் என்கிறோம். சுருக்கமாக எரி என்பதும் உண்டு. வானிலிருந்து எரி விழுந்தது.
 

தீப்பற்றித் தழலாகும் நேரடி வினைக்கு மட்டுமின்றி அத்தகைய உணர்வினைத் தருவனவற்றுக்கும் எரி என்ற சொற்பயன்பாடு கருதப்பட்டது. ஒருவர்மீது கொள்ளும் பொறாமையால் மனங்குமைவதைக் குறிப்பிட “அவன் வயிறு எரிகிறது” என்று குறிப்பிட்டார்கள். பொறாமையால் பொங்குபவனை “உனக்கு ஏனப்பா எரியுது ?” என்று கேட்கிறோம். “வயிறெரிஞ்சு சொல்றேன்… நீ இதுக்கு நல்லா படத்தான் போறே…” என்கிறார்கள். உண்டது செரிக்காமல் இரைப்பைப் புழுக்கத்தை உணர்வதையும் “வயிறு எரியுது” என்று சொல்கிறோம். உடலுக்குள் ஏதேனும் காற்றுப் பிடிப்பு ஏற்பட்டாலும் அதனை “நெஞ்சு எரியறாப்பல இருக்குது…” என்பார்கள்.

 

soller uzhavu



யாரேனும் நமக்குச் சலிப்பையோ அலுப்பையோ தந்துவிட்டால் “ஒரே எரிச்சலா இருக்கு…” என்கிறோம். “முதலாளிக்கு என்னாச்சோ தெரியல… எரிஞ்சு விழறார்…” என்றும் சொல்கிறோம். சினத்தினால் கடுஞ்சொல் கூறுவதை எரிந்து விழுதல் என்று கூறலாம். மிளகாயைத் தின்றால் அது காரச்சுவையை உணர்த்தும். “ஆ… நாக்கு எரியுது… தண்ணீர் கொடுங்க…” என்று கேட்கிறார்கள். காரச்சுவையுணர்ச்சி எரிவதைப்போல் உணரப்படுகிறது.  
 

சில பூச்சிகள், வண்டு வகைகள், செடி கொடிகள் இருக்கின்றன. அவை நம் உடல்மீது பட்டுவிட்டால் பட்ட இடத்தில் தாளாமை ஏற்படும். ”எதுவோ பட்டுருச்சு… தோல் எரிச்சலா இருக்குது…” என்கிறோம். தோலில் தீப்பட்டு எரிவதுபோல் இருப்பதைத்தான் அவ்வாறு கூறுகிறோம். நமைச்சல், குடைச்சல், எரிச்சல் என்று உடல்படும் பாடுகளிலும் எரி வந்துவிடுகிறது. விரியன் பாம்புகளில் எரிவிரியன் என்றே ஒருவகை இருக்கிறதாம். அந்தப் பாம்பு பட்டாலோ தீண்டினாலோ உடலெல்லாம் தீப்பட்டதுபோல் எரியுமாம்.
 

எரி என்பதை முன்னொட்டாகக்கொண்டு எண்ணற்ற வினைத்தொகைகளை உருவாக்கலாம். எரிகாடு, எரிவனம், எரிகரை போன்றவை சுடுகாட்டைக் குறிப்பவை. எரிகதிர் நல்ல வெளிச்சமும் வெப்பமும் தரும் சூரியனைக் குறிக்கிறது. முற்காலத்தில் மாலைப்பொழுதினை எரிபொழுது என்று வழங்கியிருக்கின்றனர். மாலை ஆனதும் இரவுப் பொழுதுக்குத்  தீவத்தியினாலோ அகல்விளக்கினாலோ எரியூட்ட வேண்டும். அதற்குரிய பொழுது என்பதால் மாலைப்பொழுதினை ‘எரிபொழுது’ என்றனர்.    
   

இரண்டெழுத்துகளால் ஆகிய சிறுசொல் ஒன்றினால் மொழிக்கு விளையும் பொருள்நலம் என்ன என்பதற்கு ‘எரி’ என்னும் இச்சொல்லே எடுத்துக்காட்டு. 

 

முந்தைய பகுதி:


தமிழ்த் துணையெழுத்துகளின் பெயர்கள் தெரியுமா ? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 35
 

அடுத்த பகுதி:


பெண்ணின் கூந்தலை அள்ளி முடிக்க ஐந்து வகைகள் உள்ளன - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 37