திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வாழ்விடமாகவும் கொண்ட மதன் எஸ். ராஜா தன் முதல் நூலான ‘கசடு’ என்ற கவிதைத் தொகுப்பை சாதாரண அச்சில் மட்டுமல்லாது, தமிழ் இலக்கிய உலகில் முதல்முறையாக அதே மேடையில் பார்வைத்திறன் குறைந்தவர்களும் படித்துக் களியுறும் வகையில் பிரெய்லி வடிவிலும் தன் புத்தகத்தை வெளிட்டார்.
டிசம்பர் 4ஆம் தேதியன்று மைலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் பேராசிரியர் மு. முத்துவேலு, முனைவர் தமிழ் மணவாளன், முனைவர் நெல்லை பி. சுப்பையா, நாவலாசிரியர் கரன் கார்க்கி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையும் வாழ்த்துரையும் ஆற்றினார்கள். விழாவில் பல நண்பர்களும் இலக்கிய, பத்திரிகை ஆளுமைகளும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
இந்த வெளியீட்டு விழாவின் முக்கிய அம்சமாக முனைவர் உ. மகேந்திரன், பிரெய்லி வடிவில் புத்தகம் வெளியிட்டது குறித்து, “இப்படிப்பட்ட முயற்சிகள் எங்களைப் போன்ற மனிதர்களுக்கு எத்தனை உற்சாகத்தைக் கொடுக்கிறது. இனிவரும் இலக்கியப் படைப்புகள் எங்களைப் போன்ற மனிதர்களுக்கும் இந்த மாதிரியான வாசிப்பு அனுபவங்கள் கிடைப்பதற்கான வழிவகுக்கும்” என மிகவும் உணர்ச்சிபூர்வமாக உரையாற்றியதும், அவர் மனைவி ஆசிரியர் மு. சோபனா பிரெய்லி வடிவிலான புத்தகத்திலிருந்து சில கவிதைகளைப் படித்தும் மகிழ்ந்தார்.