நாடி ஜோதிடம் பற்றிய புரிதல் சிலருக்கே இருந்தாலும் அது குறித்த ஆவல் பலருக்கு இங்கே இருக்கிறது. நாடி ஜோதிடம் உண்மையா? அதில் சொல்லப்படும் விஷயங்கள் வாழ்க்கையில் நடக்கிறதா? பல்வேறு உதாரணங்களுடன் பிரபல நாடி ஜோதிடர் துரை சுப்புரத்தினம் விளக்குகிறார்.
“மூன்று தலைமுறைகள் தாண்டி நான்காவது தலைமுறையாக எங்கள் குடும்பம் நாடி ஜோதிடத்தில் ஈடுபட்டு வருகிறோம். இதுவரை ஒரு சின்ன விளம்பரம் கூட செய்ததில்லை. எங்களிடம் நாடி ஜோதிடம் பார்ப்பவர்கள் எங்களைப் பற்றி வெளியில் சொல்வது தான் எங்களுக்கான விளம்பரம். அருள்சிவ ஆறுமுகம், சதாசிவம் ஆகியோர் தான் எங்களுடைய குரு. ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொன்றைக் கற்றுக்கொள்கிறோம். 30 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். இப்படி ஒரு நீண்ட பாரம்பரியம் எங்களுடையது.
2016 ஆம் ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த ஒரு பெண் எங்களிடம் நாடி ஜோதிடம் பார்க்க வந்தார். அவருடைய கணவர் ஜப்பானில் ஒரு பத்திரிகையாளர். அந்த நேரத்தில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டிருந்தார். அவருடைய ரேகையை எங்களிடம் கொடுத்தார். அதை வைத்து அவர் குறித்த சரியான விவரங்களை நாம் ஓலைச்சுவடி மூலம் அவரிடம் கூறியபோது அந்தப் பெண் அதிர்ச்சியடைந்தார். ஒரு வருடத்திற்கு முன் கடத்தப்பட்ட அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார் என்பதையும் கூறினோம். அவர் இறந்துவிட்டார் என்று நினைத்திருந்த அவருடைய மனைவிக்கு அது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
ஜப்பான் அரசாங்கமும் அவரைக் கைவிட்டுவிட்ட நிலையில் தான் நம்மிடம் வந்தார். ஒவ்வொரு நாளும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் இருந்தாலும் அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்கிற செய்தியை அறிந்து அவருடைய மனைவி நெகிழ்ந்தார். அவருக்கு நாம் சில பரிகாரங்களைப் பரிந்துரைத்தோம். நானே அவரைப் பல கோயில்களுக்கு அழைத்துச் சென்றேன். அதன் பிறகு ஜப்பான் தூதரகத்திடமிருந்தும் அவருடைய கணவர் உயிரோடு இருக்கிறார் என்கிற செய்தி கிடைத்தது.
ஆறு மாதங்கள் கழித்து அந்தப் பெண் எனக்கு வாட்ஸ்அப்பில் ஒரு புகைப்படத்தை அனுப்பினார். அதில் காவிநிறத் துணியில் ஒருவரின் முகம் மூடப்பட்டு அருகில் இருவர் துப்பாக்கியுடன் நிற்பது போன்று இருந்தது. இது அவருடைய கணவர் கொலை செய்யப்படுவதற்கான அறிகுறி என்று அழுதார் அந்தப் பெண். அப்போதும் அவர் உயிருடன் தான் இருக்கிறார் என்பதை நாம் உறுதிப்படுத்தினோம். நம்பிக்கையற்ற நிலையில் அவர் இருந்தாலும் நம்முடைய வார்த்தைகள் அவருக்குத் தெம்பூட்டின.
அதன் பிறகு முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மூலம் ஜப்பான் பிரதமரிடம் பேசி அவரது கணவரை விடுவிக்க ஒரு வாய்ப்பு வந்தது. அந்த முயற்சியை மேற்கொள்ளலாமா என்று அந்தப் பெண் கேட்டார். தீவிரவாதிகளிடம் வீடியோ மூலம் தானே வேண்டுகோள் விடுக்கலாமா என்றும் கேட்டார். இந்த இரண்டு முயற்சிகளுமே அவருடைய கணவரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று ஓலை கூறியது. அமைதியாக இருக்கும்படி அவரிடம் கூறினேன். எதிர்பாராத நேரத்தில் அவர் வருவார் என்று கூறினேன்.
2018 அக்டோபர் மாதத்தில் அவரால் இங்கு வர முடியாத சூழ்நிலையில், நானும் என்னுடைய மகனும் அவருக்காக கோயிலுக்கு சென்று பூஜை செய்தோம். இரண்டே மாதங்களில் தீவிரவாதிகள் அவருடைய கணவரை துருக்கியில் கொண்டுவந்து விட்டுச் சென்றனர். இந்தச் செய்தியை அவர் உடனே என்னிடம் பகிர்ந்தார். அவரின் கணவருடைய பெயர் ஜும்பே யசூதா. இப்போதும் அவர் குறித்த தகவல்கள் அனைத்தும் கூகுளில் கிடைக்கும். அவர் மீண்டு வந்ததும் அவருடைய மனைவி மீண்டும் இங்கு வந்து அனைத்து கோயில்களுக்கும் சென்று, அன்னதானங்கள் செய்து தன் நன்றியைத் தெரிவித்தார். அவருடன் நானும் வீடியோ காலில் பேசினேன். பாஸ்போர்ட் கிடைத்தவுடன் விரைவில் இங்கு வருவதாகக் கூறினார். இப்போது கணவனும் மனைவியும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.”