பாம்பணையில் படுத்தபடியும், பாம்பையே தரித்தபடியும் ஈசனும், பெருமாளும் உலகைப் பரிபாலிக்கின்றனர். அதேசமயம் கிராமப்புற மக்களுக்கு எல்லையைக் காக்க அய்யனார், கருப்பன், முனியப்பரின் துணையும்; மழைபொழிந்து பஞ்சம் தீர்க்க மாரியம்மன், பாஞ்சாலியம்மன், துரோபதையம்மன் அருளும் வேண்டும். அவர்கள் வழிபடும் தெய்வம், அவர்கள் அன்றாட வாழ்வோடு இணைந்தவர்களாக- மனதுக்கு நெருங்கியவர்களாக இருப்பது மரபு. அப்படி விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், சேலம் ஆகிய நான்கு மாவட்ட மக்களுக்கு எல்லை தெய்வமாகவும் இஷ்ட தெய்வமாகவும் விளங்குபவர்தான் வீரபயங்கரம் அய்யனார்.
நாற்பத்தெட்டு ஏக்கர் பரப்பளவில் காடுகள் சூழ்ந்த பகுதியில், இயற்கையெழிலுடன் அமைந்துள்ளது வீரபயங்கரம் அய்யனார் கோவில். நுழைவாயிலின் இருபுறமும் 40 அடி உயரமுள்ள வாமுனி, செம்முனி சிலைகள் கையில் நீண்ட கத்தியோடு கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன. உள்ளே இருபுறமும் ஆயிரக்கணக்கான சிப்பாய்கள், யானைகள், குதிரைகள், பதுமைகள் சூழ, குதிரையில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் அய்யனார், கருப்பையா, முனியப்பரின் தோற்றங்கள் பார்ப்போரை பயபக்திகொள்ளச் செய்கின்றன.
தலவிருட்சமான திருவாட்சி மரத்தடியிலுள்ள துர்க்கையையும் கருப்பையனையும் வணங்கி, நடுநாயகமாக அமைந்துள்ள சப்த கன்னிமார்களை வணங்கி, நிறைவாக அய்யனாரை வணங்கவேண்டும். அய்யனாரை பெரியய்யா என்றும், கருப்பையனை சின்னய்யா என்றும் பக்தர்கள் அழைக்கின்றனர். முனியப்பர் சிலையருகே ஒரே கல்லினால் செய்யப்பட்ட கற்குதிரைமீது அமர்ந்திருக்கும் சின்னய்யாவின் தோற்றம் பார்ப்போரை திகைப்பில் ஆழ்த்தக் கூடியதாகும். தவிரவும் இங்கு பக்தர்கள் நேர்த்திக் கடனாகச் செலுத்திய வாகனங்களும் பெருவாரியாகக் காணப்படுகின்றன.
ஊருக்குப் பெயர் வந்த கதை!
சிவபெருமானின் மாமனான தட்சன் மாபெரும் யாகம் ஒன்றை நடத்தினான். சகல தேவர்களையும் முனிவர்களையும் யாகத்துக்கு அழைத்த தட்சன் தன் மருமகனான ஈசனைப் புறக்கணித்தான். சிவன் தடுத்தும் கேளாமல் போய் அவமானப்பட்டாள் தாட்சாயணி. இதனால் வெகுண்டெழுந்த சிவன் தன்னுடைய சடையிலொன்றை பூமியிலடிக்க, அதிலிருந்து ஆவேசத் தோற்றத்துடன் கிளம்பிவந்தார் வீரபத்திரர். சிவனின் கட்டளைப்படி பூதகணங்களோடும் தாட்சாயிணி அனுப்பிய காளியோடும் சென்று தட்சனையும் யாகத்தையும் அழித்து முடித்தார் வீரபத்திரர். அத்தகைய பயங்கர தோற்றமுடைய, எவரும் பயந்து நடுங்கக்கூடிய வீரபத்திரர் வாழ்ந்த ஊர் இதுவென்கிறார்கள். அவரின் பெயரிலேயே வீரபயங்கரன் என்று வழங்கப்பட்டு காலப்போக்கில் மருவி வீரபயங்கரம் என்றானதாம். இந்த ஊருக்கு அருகே 101 வயதுவரை வாழ்ந்து மறைந்தவர் அடிகளாசிரியர் என்னும் தமிழ்ப்புலவர். ஜனாதிபதி விருதுபெற்ற இவர், இவ்வூரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அய்யனார் குடிவந்தது தனிக்கதை. ஒருசமயம் அண்ணன்- தம்பிகளான ஏழு அய்யனார்கள் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து கிளம்பி வந்தனர். அப்படி வரும்போது மூத்தவரான அய்யனாருக்கு இந்த ஊர் பிடித்துப்போக, இங்கு ஏற்கெனவே
குடிகொண்டிருந்த வீரபத்திரரிடம் இடம் கேட்டார். வீரபத்திரரும், "இந்த இடம் உமக்குப் பிடித்துவிட்டது. நானும்
தவம்செய்ய வடக்கே செல்லவிருக்கிறேன். எனவே இங்கேயே தங்கி மக்களைக் காத்து அவர்கள் துயர்துடைக்க வேண்டும்'' என கேட்டுக்கொண்டார். இவருக்கு அடுத்த சகோதரர்கள், இதே நேர்கோட்டில் சித்தேரி, எஸ். நாரையூர், அரசங்குடி, சிறுபாக்கம், பொயனப்பாடி, சிறுநெசலூரில் ஆண்டவர், அய்யனார் எனும் பெயரில் கோவில்கொண்டு அருள்புரிந்து வருகின்றனர்.
இஸ்லாமியர்களின் முதல் மரியாதை!
வீரபயங்கரம் கணக்குப்பிள்ளை குடும்பத்தைச் சேர்ந்தவர் அருணாசலம் பிள்ளை. அவர் அய்யனாரின் பெருமை குறித்துக் கூறும்போது, "அய்யனாரால்தான் எங்கள் ஊருக்கே பெருமை. ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையில் நடைபெறும் அய்யனார் ஊர்வலம் இப்பகுதியில் பிரசித்த மானது. அதன் சிறப்பே இங்குள்ள முஸ்லிம் மக்கள் சாமிக்கு முதல் மரியாதை செய்வதுதான். இதனால் இப்பகுதியில் மதம் கடந்த சகோதரத்துவம் நிலவுகிறது. இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தூரமுள்ள கூகையூருக்கு அய்யனார் செல்லும் ஊர்வலத்தில், முஸ்லிம் அன்பர்கள் பலரும் சாமியை தோளில் சுமந்துவருவார்கள். அங்குள்ள முஸ்லிம் தர்காவில் சாமியை இறக்கி வைத்து, அவர்களது மரியாதையை ஏற்றுக்கொண்டு அய்யனார் வீரபயங்கரம் திரும்புவார். இந்த ஊர்வலத்தின்போது அய்யனார், பக்தர்களின் தோள்களி லேயே சுமந்து செல்லப்படுவார். மின்சார விளக்குகளை உபயோகிக்காமல் தீப்பந்தங்களையே பயன்படுத்துவர். இப்பகுதியில் பலர் விவசாயத்தையே நம்பியுள்ளவர்கள். மழை பொய்த்துப் போகும் சமயங்களில், அய்யனாருக்கு பூஜை போட்டு கூகையூர் வரை ஊர்வலம் சென்று திரும்பி வருவதற்குள் மழை பொழிந்துவிடும். இப்படி மழை பொழிந்துள்ளதை பலமுறை அனுபவத்திலே கண்டுள்ளோம்'' என்கிறார்.
பிள்ளைகளோடு சென்று கோவையில் தங்கிவிட்டவர் சுசீலா. பலவருடங்களுக்குப்பின் அய்யனாரை தரிசிக்க வாய்ப்பு கிடைத்த அவர் கூறுகையில், "இங்குள்ள தெய்வங்களையும் அய்யனாரையும் பதினெட்டு வருஷங்களுக்கப்புறமா பார்க்கிறதை நினைச்சாலே உடம்பு சிலிர்க்குது. என் சொந்த ஊரான தலைவாசல் வந்ததுமே, நேரா கோவிலுக்குக் கிளம்பிவந்துட்டேன். இன்னைக்கு
சாயங்காலம் வரை இந்த சந்நிதியிலதான் இருக்கப்போறேன். இங்கேயிருக்கிற சாமிங்ககிட்ட கேட்டது கிடைக்கும்; நினைச்சது நடக்கும்'' என பூரிப்போடு சொல்கிறார். வாழப்பாடி சடையன், தனக்கு அய்யனார் மறுவாழ்வு தந்த அற்புதத்தை உருக்கமாகக் கூறினார்.
"சில வருஷங்களுக்கு முன்னால் எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துச்சு. அதிலிருந்து தப்பிச்சிட்டாலும், அதுக்கப்புறம் நான் ரொம்ப கவனமா இருக்கணும்னு டாக்டர்கள் அறிவுறுத்தினாங்க. நான் "அய்யனாரே சரணம்'னு இங்கவந்து 48 நாட்கள் தங்கினேன். 48 நாட்கள் முடிஞ்சப்ப நான் என்னை புதுசா பிறவி எடுத்துவந்த மனுஷன்போல உணர்ந்தேன். அதுக்கப்புறம் சராசரி மனிதர்கள்போல எல்லா வேலைகளும் செய்யறேன். வருஷம் தவறினாலும் இந்தக் கோவிலுக்கு வர்றது மட்டும் தவறாது'' என்கிறார்.
இதுமட்டுமின்றி வீரபயங்கரம் அய்யனார் மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும் குணப்படுத்தும் சக்திமிகுந்தவர் எனும் நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. இக்கோவிலில் சில நாட்கள் தங்கி பூரணநலத்துடன் திரும்பியும் செல்கின்றனர். அதுபோன்று இங்குள்ள சப்தகன்னிமார் கோவிலுக்கு முன்புள்ள தூண்களிலும் சூலங்களிலும் சிறிய தூளிகட்டி வேண்டிக்கொள்பவர்களுக்கு விரைவில் பிள்ளைப்பேறு கிடைக்கிறது. தூளிகளை மட்டுமின்றி, தங்கள் பல்வேறு குறைகளையும் நிவர்த்திக்கச் சொல்லி சீட்டு எழுதிக்கட்டும் பழக்கமும் நடைமுறையில் உள்ளது. இங்கு சின்னையா எனும் கருப்பையாவுக்கு மட்டுமே பலிபூஜை நடைபெறுகிறது. மற்ற தெய்வங்களுக்கு சைவ முறையில் பொங்கல் வைத்துப் படைக்கின்றனர். "பல ஆண்டுகளாக குடும்பப் பகை காரணமாக பேச்சோ உறவோயின்றி இருக்கும் குடும்பங்கள் காலப்போக்கில் உறவைப் புதுப்பித்துக்கொள்ள எண்ணும்போது அய்யனாரிடம் வந்தே முறையிடுகின்றனர்.
அத்தகைய குடும்பங்கள் இக்கோவிலுக்கு வந்து பொங்கலிட்டுப் படைத்து, ஒருவர் வீட்டு உணவை மற்றவருக்குப் பரிமாறி, அய்யனார் சாட்சியாக தங்கள் முரண்பாடுகளைத் தீர்த்துக்கொள்வார்கள். இந்த வகையில் அய்யனார் பகையழிக்கும் தெய்வமாகவும் திகழ்கிறார். இதற்கு முரண்பாடு தீர்த்தல் எனும் பெயரே வழக்கத்திலுள்ளது'' என்கிறார்கள் அய்யனார் பக்தர்களான தென்செட்டியேந்தல் ஊராட்சித் தலைவரான செந்திலும் சின்னசேலம் ஜெய்கணேஷும்.
-எஸ்.பி. சேகர்