அருந்தவ முனிவர்களும் முத்தமிழ் அறிஞர்களும், விண்ணில் உலவும் மதியையும் மண்ணில் தவழ்ந்தோடும் நதிகளையும் பெண்களின் பெயரிலேயே அழைத்தனர். இப்போதுவரை மட்டுமல்ல; எப்போதும் அப்பெயர்கள் நிலைத்திருக்கும். தவரிஷிகளின் கமண்டலம் கவிழ்ந்து அதிலிருந்து ஓடிய நீர் நதிகளாகின என்பது புராண வரலாறு. இப்படி உருவான நதிக்கரைகளில்தான் பல முனிவர்கள் ஆசிரமம் அமைத்து, தங்கள் தர்மபத்தினிகளோடு தவவாழ்வு வாழ்ந்து இறைவனருள் பெற்றனர்.
முனிவர்களுள் முக்கியமானவராகக் கருதப்படும் அகத்தியரின் கமண்டலத்தைக் கவிழ்த்திடுமாறு விநாயகர் காகத்திடம் சொல்ல, அதன்படி காகம் கவிழ்த்த கமண்டல நீர் காவேரியானது. அதுபோல, நடுநாட்டுப் பகுதியில் ஓடும் நீவா, மணிமுத்தாறு நதிகளுக்கும் வரலாறு உண்டு.
சதுர்யுகத்திற்கு முற்பட்ட காலத்தில் இப்பகுதியில் மாதங்கன் என்ற மிகப்பெரிய செல்வந்தர் இருந்தார். கல்வியறிவோடு இறைப்பற்றுக் கொண்ட மிகச்சிறந்த ஞானி. இவருக்கு இரண்டு பெண்கள் பிறந்து திருமண வயதையடைந்தனர். இருவருமே பெருமாள்மீது தீவிர பக்தி செலுத்தி தினசரி வழிபட்டு வந்தனர். நாளடைவில் பக்தி காதலாக மாறி, பெருமாளையே கணவராக அடைவதென்று கடுந்தவம் மேற்கொண்டனர்.
அவர்களின் தவவலிமை கண்டு உவகைகொண்ட பெருமாள் அவர்கள்முன்பு காட்சியளித்து, ""பெண்களே, உங்கள் தவவலிமை கண்டு மகிழ்ச்சி கொண்டேன். நீங்கள் மானுடப் பெண் வயிற்றில் பிறந்துள்ளதால் உங்களை மணக்கமுடியாது. நீங்கள் தவம் செய்யுங்கள். அதன் பயனாக நதிகளாகப் பிறப்பெடுப்பீர்கள். அப்போது உங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன்'' என்று வரமளித்து மறைந்தார்.
அதன்படி அந்த இருபெண்களும் மேற்கிலுள்ள மலைக்குச்சென்று தவமிருந்தனர்.
அவர்கள் அருகேயே கௌசிக முனிவரும் தவமிருந்தார்.
அப்போது இரு பெண்களும் "மகாவிஷ்ணுவின் வரம் பலிக்கவேண்டுமானால் முனிவரின் கமண்டலத்துக்குள் புகவேண்டும்' என்று முடிவு செய்தனர். அதன்படி அப்பெண்கள் தங்கள் தவவலிமை யால் சிறிய உருவமாக மாறி கௌசிக முனிவர் அருகே வைத்திருந்த கமண்டல நீருக்குள் புகுந்தனர். அதன் காரணமாக பாரம் தாங்காமல் கமண்டலம் சாய்ந்தது. அந்த நீரில் இரு பெண்களும் கரைந்து இரு நதிகளாகப் பிரிந்து ஓடினர். அப்படி ஓடிய நதிகள்தான் வெள்ளாறு எனவும், மணிமுத்தாறு எனவும் பெயர் பெற்று, தரிசு நிலங்களை வளம் செழிக்கும் நன்செய் நிலங்களாக்கி, மக்களை வாழவைத்துவருகிறது.
அப்பெண்கள் நதிகளாக மாறியதும் பெருமாள் அவர்கள்முன் தோன்றி, ""உங்கள் இருவரையும் வரமளித்தபடி ஏற்றுக்கொள்கிறோம். நீவா நதி எனும் பெயரோடு கடலில் சென்று கலப்பாய். உன் கரைகளில் ஏழு துறைகள் அமைந்திடும். உனது நதியில் மூழ்குவோர்க்கு முக்தி கிடைத்திடும். உனது சகோதரி வில்வநதி, மணிமுத்தாறு என்னும் பெயரோடு விளங்கி, மக்கள், முனிவர்கள், தேவர்களின் பாவங்களைப் போக்கி கடலோடு கலக்கட்டும்'' என்று வரமளித்து மறைந்தார்.
அப்படிப்பட்ட நதிகளில் முதல் நதியான நீவா நதி என அழைக்கப்படும் வெள்ளாற்றின் கரையில் ஏழு சிவாலயங்கள் அமைந்துள்ளன. அதில் முதன்மையானது ஆதிசக்திதுறை எனும் காளியாற்றுத்துறை. அது இப்போது காரியாந்துறை என அழைக்கப்படுகிறது. இந்த ஆதிசக்திதுறையில் எம்பெருமான் ஆதிசக்தி ஈஸ்வரராகவும், அம்பாள் பெரியநாயகி என்னும் பெயருடனும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்கள்.
இந்தத் துறையின் கரையில் அத்திரி முனிவரும் அவரது துணைவியார் அனுசுயாவும் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தனர். காட்டிலுள்ள காய்கனிகள், பூக்களைப் பறித்துவந்து இறைவனுக்குப் பூஜை செய்து, அதையே உணவாக சாப்பிட்டு வந்தனர். அனுசுயா தேவி மிகமிக ருசியாக சமைக்கக்கூடியவர். இறைபக்தியும் நிறைந்தவர். இந்த காலகட்டத்தில் அவரது கணவரான அத்திரி முனிவர் எம்பெருமானை தரிசிக்க இமயமலைக்குச் சென்றிருந்தார்.
அப்போது ஒரு நாள் வான்வழியே சென்றுகொண்டிருந்த நாரதர், அனுசுயா தேவி இறைவழிபாடு செய்துகொண்டிருந்ததைப் பார்த்து கீழே இறங்கி வந்தார். நாரதரை, முனிவரின் துணைவியார் வணங்கி வரவேற்றார்.
நாரதருக்கு சுண்டல் கொடுத்து உபசரித்தார் அனுசுயா தேவி. அந்த சுண்டலின் ருசியும் மணமும் மிக அருமையாக இருந்தது. இதுபோன்ற ருசியான சுண்டலை சாப்பிட்டதே இல்லை என்று அனுசுயாவைப் புகழ்ந்த நாரதர் விடைபெற்றுச் சென்றார். அப்படிச்சென்ற நாரதர் முப்பெரும் தேவியரிடம் அனுசுயாவின் அழகையும், அவரது பதிவிரத மகிமையையும், அவர் கொடுத்த ருசியான சுண்டலைப் பற்றியும் சொல்லிப் பெருமைப்பட்டார்.
அதைக்கேட்டு, "எங்களைவிட பதிவிரதையா அனுசுயா?' என்று சினங்கொண்டவர்கள், அவரது பதிவிரதத் தன்மையை சோதிக்க தங்களது கணவர்களை அனுப்பினர்.
தங்கள் மனைவிகளுக்கு அறிவு புகட்டும் பொருட்டு, மும்மூர்த்திகளும் முனிவர் வேடத்தில் அனுசுயாவின் ஆசிரமத்திற்கு வந்து யாசகம் கேட்டனர். அவர்களைப் பணிவுடன் உபசரித்த அனுசுயாதேவி, உணவு பரிமாற இலையிட்டார். அப்போது அவர்கள், ""ஆடையின்றிப் பரிமாறினால்தான் நாங்கள் உண்போம்'' என்றனர்.
அதைக்கேட்டு திடுக்கிட்டார் அனுசுயா. அன்னம் பரிமாறாவிட்டால் அதிதிகளை அவமதித்தது போலாகும். அதேசமயம் தன் பதிவிரதாத் தன்மையையும் காப்பாற்ற வேண்டும். என்ன செய்வதென்று யோசித்த அவர் சட்டென ஒரு முடிவுக்கு வந்தார். தன் கணவரை மனதில் பிரார்த்தித்துக்கொண்டு, தன் கற்பின் வலிமையால் மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக்கினார். பிறகென்ன... அவர்கள் விருப்பப்படி அந்த மூன்று குழந்தைகளையும் பசியாறச் செய்தார்.
மும்மூர்த்திகளும் குழந்தைகளாக்கப்பட்ட செய்தி நாரதர்மூலம் முப்பெரும்தேவியருக்கும் தெரியவந்தது. உடனே மூவரும் முனிவரின் குடிலுக்குமுன் தோன்றினர்.
அனுசுயாவிடம், ""உங்கள் பத்தினித் தன்மையையும் இறைபக்தியையும் சோதிக்கவே இப்படி செய்தார்கள்'' என்பதை எடுத்துக் கூறினர். அப்போது பார்வதியான ஆதிசக்தி காளியாக மாறி அனுசுயாதேவியிடம் வேண்டிக்கொண்டார். முப்பெரும் தேவியரும் அனுசுயாவிடமிருந்து தங்கள் கணவர்களை மடிப்பிச்சையாகக் கேட்டனர். முனிவர் பத்தினியும் மனமிரங்கி, மீண்டும் மும்மூர்த்திகளின் குழந்தைப் பருவத்தை மாற்றிக்கொடுத்தார். அப்போது இமயமலை சென்றிருந்த அத்திரி முனிவரும் அங்குவந்து சேர்ந்தார். மும்மூர்த்திகளும் தங்கள் தேவியர்களுடன் காட்சி தந்து அவர்களுக்கு ஆசிவழங்கிச் சென்றார்கள்.
""அப்படிப்பட்ட ஆதிசக்தியான காளி தோன்றிய இடம்தான் காரியானூர் என்னும் பெயரில் விளங்கி வருகிறது. இங்குள்ள ஈசன் ஆதிசக்தீஸ்வரராகவும், அம்பாள் பெரியநாயகி என்னும் பெயருடனும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்கள். மும்மூர்த்திகளே ஒரு பெண்ணின் பத்தினித்தன்மையை பெருமையடையச் செய்த இடம். தெய்வங்களே ஆனாலும் பத்தினிப் பெண்களின் சக்தியினால் அவர்களை மாற்ற முடியும் என்று நிரூபித்த இடம் இது'' என்கிறார்கள் இப்பகுதியில் வாழும் பக்தர்கள்.
""இக்கோவிலை புனரமைப்பு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளோம். பக்தர்கள் இதன் பெருமையை, புகழை, இறைத்தன்மையைக் காக்க உதவிட வேண்டும்'' என்கிறார்கள் ஊர் மக்கள் மற்றும் அர்ச்சகரான மதனகோபால அய்யங்கார் ஆகியோர்.
இதுபோன்ற புராண வரலாறுகொண்ட கோவில் கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தில் உள்ளது. இங்கு மும்மூர்த்திகளும் தாணுமாலயன் என்னும் பெயரில் கோவில் கொண்டுள்ளனர். இங்குள்ள தாணு (சிவன்) மால் (திருமால்), அயன் (பிரம்மா) ஆகிய மூவருக்கும் சிறப்புண்டு.
""இங்கு வந்து வேண்டினால் மகிழ்ச்சியும் மனநிம்மதியும் எப்போதும் நிலைக்கும்'' என்கிறார்கள் இப்பகுதியைச் சேர்ந்த ஆலம்பாடி கிராம அலுவலர் வினோத்குட்டி, கண்ணன், விநாயகநந்தல் ராசு ஆகியோர். சப்த துறையில் உள்ள ஏழு கோவில்களுள் இது முதற்கோவில் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாலயத்தில் காசி விஸ்வநாதர், விநாயகர், தட்சிணாமூர்த்தி உட்பட சிவாலயங்களில் உள்ள அனைத்து தெய்வங்களும் அமையப்பெற்றுள்ளனர். இவ்வாலய இறைவனை வணங்குவோர்க்கு மகப்பேறு கிடைக்கும். திருமணத்தடை அகலும். நாள்பட்ட நோய் உள்ளவர்களின் துணைவியார் இங்குவந்து மடிப்பிச்சை கேட்டு பூஜை செய்தால் நீண்டகாலம் சுமங்கலி வரம் கிட்டும்.
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தொழுதூருக்கு மேற்கில் சுமார் 15 கிலோமீட்டரிலும்; சேலம்- உளுந்தூர்பேட்டை தேசிய சாலையில், தலைவாசல் கூட்டுரோட்டிலிருந்து தென்கிழக்கில் 15 கிலோமீட்டரிலும்; பெரம்பலூரிலிருந்து வடக்கே 20 கிலோமீட்டரிலும் வெள்ளாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது இவ்வாலயம்.