சிவபெருமானும் பார்வதி தேவியும் உலகை வலம் வந்தனர். அப்போது காசி, காளத்தி, காஞ்சி உள்ளிட்ட 66 கோடி தலங்களையும் பற்றி விளக்கியபடியே வந்தார் ஈசன். திருவாஞ்சியம் தலத்துக்கு வந்தபோது, அதன் பெருமைகளைக் கேட்ட அன்னை அங்கேயே தங்க ஈசனிடம் வேண்டினாள். ஈசனும் இசைந்தார்.
இங்குள்ள இறைவன் வாஞ்சிநாதர் எனப்படுகிறார். பார்வதி, தானே விரும்பி இங்கு வாழவந்ததால் வாழவந்தநாயகி என்றும், மருவார்குழலிலி என்றும் அழைக்கப்படுகிறாள். மக்களுக்கு சகல பாக்கியங்களையும் தருவதால் பாக்கியப்த நாயகி, மங்களாம்பிகை, பிரதாப கல்யாணி எனப் பல பெயர்களில் அம்பிகை அழைக்கப்படுகிறாள். இறைவன், சந்தனமரங்கள் அடர்ந்த இவ்வனத்தில் உலக நன்மைக்காக ஏழு பாதாள உலகத்திலிலிருந்து தானே வெளிப்பட்டார் என்பர். இங்குள்ள மூலவர் சிவலிங்க வடிவம் பிரளய காலத்தில் தேயு வடிவமாகவும், கிருத யுகத்தில் பொன்மயமாகவும், துவாபர யுகத்தில் வெள்ளி நிறமாகவும், கலியுகத்தில் கல்மயமாகவும் காட்சிதருவதாக சம்போ புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாலய இறைவனை வழிபட்டு பாவவிமோசனம் பெற்றவர்கள் ஏராளம். திரேதா யுகத்தின் போது மகாவிஷ்ணுவிடம் கோபித்துக்கொண்டு மகாலட்சுமி அவரை விட்டு மறைந்து விட்டாள். லட்சுமி இல்லாமல் மனம் வாடிய பெருமாள் இங்கு வந்து வாஞ்சிநாதரை பூஜை செய்தார். தேவர்களும் ஈசனை வணங்கி பூஜை செய்ய, சிவபெருமான் லட்சுமியின் கோபத்தைத் தணித்து மகாவிஷ்ணுவுடன் சேர்த்து வைத்தார். மகாவிஷ்ணுவும் லட்சுமியும் நீராடிய இங்குள்ள திருக்குளம் புண்ணிய புஷ்கரணி என்று பெயர் பெற்றது.
கௌதம முனிவரின் மனைவி அகலிலிகை மீது ஆசை கொண்ட இந்திரன், முனிவர் வடிவில் அகலிலிகையைச் சேர்ந்தான். அப்போது கௌதமர் அங்கு வர, இந்திரன் பூனை வடிவில் வெளியேறினான். இதையறிந்த முனிவர் அகலிகையைக் கல்லாக சபித்தார். இந்திரனுக்கும் சாபம் தந்தார். இந்திரன் தன் தவறை உணர்ந்து திருவாஞ்சியம் வந்து, ஆயிரம் வருடம் வாஞ்சிநாதரை வேண்டித் தவம் செய்ய, இறைவன் உத்தரவுப்படி இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி மீண்டும் புதுப்பொலிவு பெற்று சாபம் நீங்கப் பெற்றான்.
வீரநக்தஞ்சன் என்ற அரக்கன், முனிவர்களைக் கொன்று உண்பவன். அவன், வனமாக இருந்த திருவாஞ்சியத்திற்கு வந்தான். அப்போது இங்கு அகத்திய முனிவர் இறைவனைப் பூஜை செய்ய வந்திருந்தார். அரக்கன் அவரை உண்ணும் பொருட்டு, அவரை நெருங்கிக் கையை நீட்டினான். அகத்தியர் வேடிக்கையாக தனது இடது காலால் அரக்கனை உதைக்க, அரக்கன் பறந்துபோய் புஷ்கரணி தீர்த்தக் குளத்தில் விழுந்தான். அகத்தியமுனிவரின் பாதம் பட்டதாலும், தீர்த்த மகிமையினாலும் அரக்கன் முக்தியடைந்தான். அவன் பெயரில் வீராக்கன் என்று ஒரு ஊரும் இவ்வாலயம் அருகிலுள்ளது.
சிவனை மதிக்காமல் தட்சன் நடத்திய வேள்வியில் தேவர்களும் முனிவர்களும் கலந்துகொண்டனர். கோபம் கொண்ட இறைவன் வீரபத்திரரை ஏவி, யாகத்தை அழித்து, தேவர்களையும் முனிவர்களையும் தண்டித்தார். அதில் சூரியனுக்கு பல் உடைந்து ஒளி மங்கிப்போனார். சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்க, அவர் உரைத்த படியே இங்குவந்து தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு பாவம் நீங்கப் பெற்றார். அப்போதுமுதல் சூரியனின் ஒளி மேலும் பிரகாசமானது.
மேலும் கங்கைக்கு நிகரானது இங்குள்ள தீர்த்தக் குளம். எப்படியெனில், கலியுகம் பிறந்தவுடன் கங்கை நதியானவள் ஈசனை வணங்கி, "இறைவா, அவரவர் பாவங்கள் நீங்க கங்கையான என்னிடம் வந்து நீராடுகிறார்கள். மகாபாவங்கள் எல்லாம் என்னிடம் சேர்கின்றன. அந்த சுமையை என்னால் சுமக்க முடியவில்லை. மக்களின் பாவங்களைப் போக்க வேறொரு இடத்தில் புண்ணிய தீர்த்தத்தை உருவாக்க வேண்டும்'' என்று வேண்டினாள்.
அதை ஏற்ற சிவபெருமான் திருவாஞ்சியத்தின் பெருமைகளைக் கூறி, அங்கே தன் சூலத்தால் குளத்தை உருவாக்கி, அதில் ஆயிரம் கோடி தீர்த்தங்களை ஒன்றுசேர்த்ததோடு, கங்கையையும் கலந்து வசிக்குமாறு பணித்தார். எனவே இத்திருக்குளம் குப்த கங்கை என்று பெயர் பெற்றது. "காசியிலும் ஆயிரம் மடங்கு மேலாக விளங்கட்டும்' என்று ஈசன் அருள்பாலித்த தோடு, "இக்குளத்தில் நீராடுபவர்கள் அனைத்து பாவங்களும் நீங்கப்பெறுவார்கள்' என வரமளித்தார்.
எமபயம் எப்படியிருக்கும் என்பதை அறிந்தவர்களும் உண்டு; அறியாதவர்களும் உண்டு. அப்படிப்பட்ட எமதர்மராஜா உயிர்களை வருத்திய பாவத்திற்காக மிகவும் வருந்தி, இவ்வாலயம் வந்து எமகுண்டம் எனும் தீர்த்தத்தை உருவாக்கி, அதில் நீராடி வாஞ்சி நாதரை தினசரி வழிபட்டு, இங்கேயே சித்திரகுப்தரோடு தனிக்கோவில் கொண்டுள்ளார்.
துவாபர யுகத்தில் சர்வர் என்ற முனிவர் தம் மனைவியோடு சரஸ்வதி நதிக்கரையில் வசித்து வந்தார். அப்போது கலி பிறந்து அனைவரையும் பிடித்தது. இவரையும் பிடிக்கத் துரத்தியது. முனிவர் தாம் எங்கு சென்றால் கலியிடமிருந்து தப்பிக்கலாம் என்று தம் ஞானதிருஷ்டியின் மூலம் தேடி, திருவாஞ்சியம் மகிமைகளை உணர்ந்து வாஞ்சியத்தைத் தேடி ஓடி வந்தார். கலியும் அவரைப் பின்தொடர்ந்தது. திருவாஞ்சியத்தை நெருங்கியதும் முனிவர், "வாஞ்சி நாதா, என்னைக் காப்பாற்று!'' என ஓலமிட்டார்.
இதைக்கேட்ட வாஞ்சிநாதர் தம் ஆலயத்தில் குடி கொண்டிருந்த எமதர்மனுக்கு ஷேத்திரபாலகர் மூலம் கட்டளையிட, எமன் கோவிலுக்கு வெளியேவந்து பார்த்தார். இரண்டு மைல் தூரத்தில் கலி ஆங்காரத் தோடு சர்வரைத் துரத்திக்கொண்டு வந்தது. உடனே எமதர்மர் தனது ஓங்காரக்குரலில் ஆக்ரோஷமாக சப்தமிட்டார். இதைக்கண்டு கலி ஸ்தம்பித்துப் போனது. அப்போது கலி எமனைப் பார்த்து, "இனி இங்கு நான் மங்களகரமானவற்றையே செய்வேன். திருவாஞ்சியத்திலிருந்து ஐந்து மைல் தூரம்வரை கலி பீடையே இருக்காது. இங்கிருந்து மேற்கே இராசமந்தி என்ற இடத்தில் தங்கி, ஆண்டுக்கு ஒருமுறை இங்கு வந்து நீராடி இறைவனை வழிபடுகிறேன். அதனால் இந்த தீர்த்தத்தில் கலி பீடை கிடையாது'' என வாக்களித்தது.
எமபயம் உள்ளவர்கள், ஜாதகத்தில் தோஷம், கண்டம் உள்ளவர்கள் இவ்வாலயம் வந்து குளத்தில் நீராடி, கரையிலுள்ள கங்கைக்கரை விநாயகரை வழிபடவேண்டும். பிறகு அக்னி மூலையிலுள்ள எமதர்மராஜா, சித்திரகுப்தரை வணங்கி அர்ச்சனை செய்யவேண்டும். இங்கு அர்ச்சனைக்குக் கொடுக்கும் பொருட்களைத் திரும்பக் கொடுக்கமாட்டார்கள். அது எமதர்மருக்கு ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு வாஞ்சிநாதரையும் மற்ற தெய்வங்களையும் வணங்கிய பின்பு மங்கள நாயகியை வழிபட்டு அமரவேண்டும்.
இங்கு மகிஷாசுரனை வதம்செய்த கோலத்தில் அஷ்டபுஜங்களுடன் துர்க்கை காட்சியளிக்கிறாள். இந்த அன்னைக்கு 108 தாமரை மலர்களால் அர்ச்சனை செய்தால் வேண்டுவது நிறைவேறும். 21 செவ்வாய்க்கிழமைகளில் பூக்கள் கொண்டு அர்ச்சனை செய்தால் எண்ணியது நிறைவேறும். மகாவிஷ்ணுவின் மோகினி அவதாரத்தின் போது வெட்டப் பட்ட ராகு - கேது ஆகிய இரு அசுரர்கள் அமிர்தம் பருகியதால் தேவ அந்தஸ்தைப் பெற்றனர். இவ்விரண்டு கிரகங்களும் தனித்தனி மூர்த்திகளாக இங்குள்ளனர். ராகு - கேதுவுக்கான பரிகாரங்களை பக்தர்கள் இங்கு வந்து செய்து பலனடைகிறார்கள்.
பொதுவாக பைரவர் நிர்வாண கோலத்தில் மூன்று கண்கள், காதில் குண்டலம், தலையில் மாலை, கட்கம், சூலம், உடுக்கை, கபாலம், கோரப் பல் வடிவத்தில் நாய் வாகனத்துடன் இருப்பார். ஆனால் இங்கு முற்றிலும் மாறுபட்டு யோக பைரவராகக் காட்சியளிக்கிறார்.
"இவ்வாலய தீர்த்தம், கங்காதேவி 999 அம்சங்களுடன் ரகசியமாக உறையும் பெருமை கொண்டது. இத்தீர்த்தத்தில் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடி இறைவனை வழிபட்டால், பல்வேறு பாவங்கள் நீங்கும். எமபயம், பைரவர் பயம் போகும். திருஷ்டி, பில்லிலி, சூனியம், வைப்பு ஆகியவற்றால் ஏற்படும் பாதகம் விலகும். குழந்தையில்லாத தம்பதிகள் அரளிப் பூவால் அர்ச்சனை செய்தால் மகப்பேறு உடனே கிட்டும். 108 தாமரை மலர்களால் அர்ச்சனை செய்தால் திருமணத்தடை நீங்கும். அமாவாசை தினத்தில் நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டால், இழந்த சொத்துகள் திரும்பக் கிடைக்கும்'' என்கிறார் ஆலய அர்ச்சகர் ராஜராஜ குருக்கள்.
இவ்வாலயக் கல்வெட்டு சான்றுகள் மூலம் ராஜராஜ சோழன், முதலாம் குலோத்துங்கன், சடையவர்ம சுந்தரபாண்டியன், மூன்றாம் ராஜசிம்மன் மகன் வீரபாண்டியன், மூன்றாம் குலோத்துங்கன், தஞ்சை நாயக்கராக இருந்த அச்சுதப்ப நாயக்கர் என பல மன்னர்கள் இக்கோவிலை அவ்வப்போது புனரமைப்பு செய்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது. 110 அடி உயர ராஜகோபுரத்துடன் கூடிய இவ்வாலய இறைவனின் பெருமைகளை அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் என நால்வரும் பாடியுள்ளனர்.
"இவ்வாலய இறைவனிடம் வந்து, எவர் உறைகின்றனரோ அவர்கள் கணங்களுக்கு அதிபதியாகிறார்கள். இவ்வாலயத்தில் விழா நடத்துபவர்களுக்கு சிவன் சந்நிதியில் வசிக்கும் பேறு கிடைக்கிறது. தயிர், பால், தேன், வாழைப்பழம், தேங்காய் கொண்டு பூஜைசெய்தால் சிவனோடு வசிக்கும் பாக்கியம் கிட்டும். எவர் வீட்டில் இப்புராணம் படிக்கப்படுகிறதோ அவர்கள் வீட்டில் மகாலட்சுமி அருளால் செல்வம் சேரும். நோயற்ற வாழ்வு கிட்டும். வாஞ்சிநாதர் அருமை பெருமைகளைப் படிப்பவர்கள், அதைக் காதால் கேட்பவர்கள் மூவகை இன்பங்களையும் அடைவார்கள்' என்கிறது கந்த புராணம் மற்றும் சனத்குமார சரிதை.
"வாஞ்சிநாதர், மங்களநாயகி, எமதர்மராஜன், பைரவர், துர்க்கை ஆகிய தெய்வங்களின் மகிமைகள் பற்றி பலர் மூலம் கேள்விப்பட்டு, அவர்களை வழிபடுவதற்காக வந்துள்ளோம்' என்கிறார்கள் கடலூர் மாவட்டம், செங்கமேடு பாலகிருஷ்ணன் குடும்பத்தினர்.
சித்திரகுப்தருடன் எமதர்மராஜா தனிக்கோவில் கொண்டுள்ள கோவில்கள் அரிதிலும் அரிது. அவற்றுள் ஸ்ரீவாஞ்சியம் எனும் திருவாஞ்சியம் மிகமிகச் சிறப்புப்பெற்றது. இதைப் படித்தவுடன் திருவாஞ்சியம் நோக்கிப் புறப்பட மனம் உவகை கொள்ளும். அப்படிப்பட்ட இவ்வாலயம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து 31 கிலோமீட்டர்; நன்னிலத்திலிலிருந்து எட்டு கிலோமீட்டர்; திருவாரூரிலிருந்து 18 கிலோ மீட்டரில் உள்ளது. ஆலயம் திறப்பு: காலை 5.30 முதல் 12.00 மணிவரை; மாலை 3.00 மணிமுதல் இரவு 8.30 மணிவரை. தொடர்புக்கு: தொலைபேசி: 04366 - 292305, அலைபேசி: 94424 03926.