மாதவனைக் காண்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் இந்த மானுடம். அப்படிப் பட்ட மாதவன் தனது இரு தேவியரோடு இணையில்லா அழகுடன் திகழும் திருத்தலம்தான் துத்திப்பட்டு. தேவேந்திரன் தனக்கேற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விமோசனம் பெற்றிட, இவ்வுலகில் ஐந்து மாதவப் பெருமாள்களை ஐந்து திவ்யத் திருத்தலங்களில் ஸ்தாபித்தான். முதலில் அலகாபாத் நகரின் பிரயாகையில் வேணிமாதவரையும், இரண்டாவதாக ஆந்திர மாநிலம் பிட்டாபுரத்தில் குந்திமாதவரையும், மூன்றாவதாக ஆம்பூருக்கு அருகே துத்திப்பட்டில் பிந்துமாதவரையும், நான்காவதாக திருவனந்தபுரத்தில் சுந்தரமாதவரையும், ஐந்தாவதாக இராமேஸ்வரத்தில் சேதுமாதவரையும் ஸ்தாபித்து வழிபட்டு, பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தியடைந்தான்.
ஆதியில் பிரம்மா தனது சிருஷ்டிக்கு உதவும்பொருட்டு நியமித்த பிரஜாபதிகளுள் ஒருவர் த்வஷ்டா. தேவர்களுள் ஒருவரான த்வஷ்டாவுக்கு ஒரு சிறந்த மகன் பிறந்தான். சாந்த குணமும், தர்ம சிந்தனையும் நிறைந்த அவனுக்கு விஸ்வரூபன் என்று பெயர். அவன் மூன்று தலைகளை உடையவன். ஒருசமயம் விஸ்வரூபன் தந்தையின் ஆசிபெற்று கடுந்தவம் இயற்றினான். அந்தத் தவத்தின் தாக்கமானது இந்திரனையும், இந்திர பதவியையும் ஆட்டம் காணச் செய்தது.
விடுவானா இந்திரன்? விஸ்வரூபனின் தவத்தைக் கலைத்திட பல முயற்சிகளை மேற்கொண்டான். ஆனால் அனைத்து முயற்சிகளும் வீணாகின. கோபம்கொண்ட இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் விஸ்வரூபனை வெட்டி வீழ்த்தினான். விஷயமறிந்த த்வஷ்டா கோபத்தால் ஓர் ஆபிசார வேள்வியை நடத்தினார். அதிலிருந்து கிளம்பிய விராட்சூரன் என்னும் அசுரனை, இந்திரனை அழிக்குமாறு ஏவினார். இந்திரனோ தந்திரமாய் அவனுடன் நட்பு பாராட்டி அவனையும் கொன்று விட்டான்.
இதனால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து உலுக்கியது. இந்திரன் பிரம்மாவை சரணடைந்தான். அவரது ஆலோசனைப்படி பூவுலகில் ஐந்து இடங்களில் ஐந்து மாதவப் பெருமாள் ஆலயங்களை தேவதச்சனைக்கொண்டு நிர்மாணித்து, நியமத்துடன் பூஜித்து, திருமாலின் திருவருளால் பிரம்மஹத்தியிலிருந்து விமோசனம் பெற்றான். இந்திரன் உருவாக்கிய நகரமே இன்று தேவநாதபுரம் என்று அழைக்கப்படுகின்றது.
இந்த பஞ்ச மாதவப்பெருமாள் ஆலயங்களுக்கு யாரொருவர் தலயாத்திரை செல்கிறார்களோ, அவர்களின் எல்லாவித பாவ - சாப தோஷங்களும் நீங்கவேண்டும் என தேவாதிராஜரிடம் வேண்டினான் இந்திரன். அதன்படியே அருளினார் ஸ்ரீஹரி. பின்னொரு சமயம் இந்த துத்திப்பட்டுக்கு சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள நிமிஷாசல மலையில் பிற முனிவர்களோடு தவம்புரிந்து வந்தார் ரோம மகரிஷி. அப்போது பிரதூர்த்தன் என்னும் கந்தர்வன் முனிவர்களின் தவத்திற்குப் பல இடையூறுகளைக் கொடுத்து வந்தான். ரோம மகரிஷியையும் இம்சித்தான். கோபம்கொண்ட மகரிஷி புலியாக மாறும்படி சபிக்க, அவன் புலியாக மாறினான். ஆனால் அவன் புலியுருவில் முன்பை விடவும் அக்காட்டில் வாழும் பிற உயிரினங்களுக்கும், முனிபுங்கவர்களுக்கும் அதிக துன்பங்களைக் கொடுத்தான்.
ரோம மகரிஷி மகாவிஷ்ணுவைப் பிரார்த்தனை செய்தார். ஸ்ரீஹரியோ, தன்னை ஸ்தாபித்த இந்திரனை அனுப்பி வைத்தார். இந்திரன் நிமிஷாசல மலையை அடைந்து ரோமரிஷியை வணங்கி, புலியுருவிலிருந்த பிரதூர்த்தனிடம் போரிட்டு, இறுதியில் அவனை வதம் செய்தான். உயிர்பிரியும் தருணத்தில் பிரதூர்த்தன் மன்னிப்பு வேண்டிட, திருமால் காட்சிதந்து அவனுக்கு நற்கதியளித்தார். மேலும், ரோம மகரிஷிக்கும் பிந்து மாதவர் மோட்சமளித்து தன்னோடு சேர்த்துக் கொண்டார்.
இந்த தலம் தனது பெயரால் விளங்க வேண்டும் என்னும் பிரதூர்த்தனது வேண்டுகோளின்படி, திருமாலின் அருளால் இந்தத் தலம் பிரதூர்த்தப்பட்டு என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் துத்திப்பட்டு என்றானது. இந்த தலத்தின் மகிமையை பிரம்மாண்ட புராணம் சனத்குமார சம்ஹிதையில் உள்ள பாஸ்கர க்ஷேத்திர மகாத்மியம் விரிவாக விவரிக்கிறது.
பேருந்து சாலையை ஒட்டி ஆலய நுழை வாயில் அமைந்துள்ளது. அதனுள்ளே நுழைந்து தெருவின் இறுதிக்குச் செல்ல, அழகிய ஐந்துநிலை ராஜகோபுரம் ஓங்கிய மதில்கள் சூழ அற்புதமாக அமைந்துள்ளது. சில படிகள் கீழே இறங்கி உள்ளே செல்ல, நேராக பலிபீடம், தீபஸ்தம்பம் மற்றும் கொடிமரத்தை வணங்கி, உடன் கருடாழ்வாரையும் வணங்குகிறோம். 36 தூண்களைக்கொண்ட முகமண்டபம் அற்புதமாகக் காட்சியளிக்கிறது. அதைக் கடந்துசென்றால் மகா மண்டபம். மகாமண்டபத்தில் விஷ்வக்சேனர் மற்றும் ஸ்ரீமத் இராமானுஜர், தொடர்ந்து பன்னிரு ஆழ்வார்களும், ரோம மகரிஷியும் அருள்பாலிக்கின்றனர். அடுத்ததாகவுள்ள அர்த்த மண்டபத்தில் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
கருவறையை நோக்கிட, கருணைக்கடலாய் ஸ்ரீ பிந்துமாதவப் பெருமாள் சங்கு, சக்கரம் ஏந்தி, கதாயுதத்துடன் அபயவரதம் காட்டி, ஸ்ரீ தேவி, பூதேவி ஆகிய தனது இரு தேவியருடன், சுமார் ஆறரை அடி உயரத்தில் கம்பீரமாய் பேரருள் பொழிகிறார். அதியற்புதமான திருக்கோலம். கண்ணிமைக்காமல் நாளெல்லம் பார்க்கும் வண்ணம் அத்தனை அழகையும் தன்னுள் கொண்டு பேரருள் பொழிகிறார். உற்சவத் திருமேனிகளாக சாளக்கிராமங்கள், தாயார்களுடன் கூடிய ஸ்ரீ வரதராஜப் பெருமாளுடன் அனுமனும் வீற்றிருக்கிறார். பிந்துமாதவர் - வரதராஜர் என்றும் அழைக்கப்படுகிறார்.
ரோம மகரிஷிக்கு அருளியதால் தனது அபய கரத்தை ஈசான திசை நோக்கி அருள்கிறார். பின்பு ஆலய வலம்வருகையில், முதலில் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் சந்நிதி கொண்டுள்ளார். இச்சந்நிதிக்குப் பின்னே பத்மாஸனித் தாயார் தனிச்சந்நிதி கொண்டு திருவருள் புரிகிறாள். அழகே உருவாய், அட்சய பாத்திரமாய், குலகுணவதியாய்த் திகழும் தாயார் இங்கு குமுதவல் - நாச்சியர் என்றும் அழைக்கப்படுகிறார்.
பின்னர் ஆலயத்தைச் சுற்றுகையில் கோஷ்ட மாடங்களில் லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்ரீவர் ஆகிய சிற்பங்களைக் காண்கிறோம். உடன் விஷ்ணு துர்க்கையையும் காண்கிறோம். வாம பாகத்தில் கோதை நாச்சியார் என்னும் ஆண்டாள் தனிச் சந்நிதியில் திருவருள் பொழிகிறாள். ஆண்டாள் சந்நிதிக்கு முன்னே நாக கன்னிகைகளுக்குத் தனியாக மேடை அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் சிறிய திருவடியென்னும் ஆஞ்சநேய சுவாமி தென்முகம் கொண்டு அருள்கிறார். குபேர திசையான வடதிசையில் வசந்த மண்டபம் அற்புதமாகக் கட்டப்பட்டுள்ளது. ஈசான திசையில் ரோம மகரிஷியின் சந்நிதி முற்றிலும் அழிந்ததால், அவரது சிலாரூபம் ஆலய மகா மண்டபத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
நரசிம்மவர்ம பல்லவனால் எழுப்பப்பட்ட இவ்வாலயம் பின்பு கிருஷ்ணதேவராயரால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அமைதியைத் தரும் ஆலயம். பெருமாளின் கருவறை விமானம் மூன்று கலசங்களுடன் உள்ளது. தேஜோ விமானமென்று அழைக்கப்படுகிறது. தல விருட்சமாக அத்தி மரம் திகழ்கிறது. தல தீர்த்தமாக க்ஷீரநதி எனப்படும் பாலாறு சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
வருடா வருடம் காணும் பொங்கலன்று நடைபெறும் பார்வேட்டை உற்சவத்தில், பெருமாள் நிமிஷாசல மலைக்கு எழுந்தருளி, ரோம மகரிஷிக்கு காட்சியளிக்கும் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. அதுபோன்று வைகாசி மாதம் 10 நாட்கள் பிரம்மோற்சவமும் சிறப்புடன் நடைபெறுகிறது. ஆடி 5-ல் தாயாருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. ஆடி மாத ஐந்து வெள்ளிகள் தாயாருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும். போகியன்று ரங்க நாச்சியார் திருக்கல்யாணமும், வைகுண்ட ஏகாதசியும் மிகவும் பிரசித்தம். பங்குனி உத்திரத்தன்று திருச்சானூரிலிருந்து அர்ச்சகர்கள் இங்குவந்து "திருமலையில் ஒரு நாள்' (திருப்பதியில் நடப்பது போன்று) உற்சவங்களை நடத்தித் தருகின்றனர். புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழி உற்சவம் மற்றும் நவராத்திரி ஆகியன சிறப்புற நடத்தப்படுகின்றன.
பாஞ்சராத்திர ஆகம விதிப்படி மூன்றுவேளை ஆராதனைகள் நடந்திடும் இவ்வாலயம் தினமும் காலை 6.30 மணிமுதல் 11.00 மணிவரையிலும்; மாலை 5.30 மணிமுதல் இரவு 8.00 மணிவரையிலும் திறந்திருக்கும்.
ஒருவரது ஜாதகத்தில் புதன் நீசம் பெற்றிருந்தாலும், வலிமை இழந்திருந்தாலும் இங்கு பிந்துமாதவப் பெருமாளுக்கு ஐந்து புதன்கிழமைகளில் வந்து வழிபட்டு, ஆறாவது வாரம் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாற்றி, துளசி அர்ச்சனை செய்ய கல்வி வளமும், சிறந்த ஞானமும் பெருகும். மாங்கல்ய தோஷமுள்ளவர்கள் இங்குள்ள நாகக் கன்னிகைகளுக்கு ஐந்து வெள்ளிக்கிழமைகள் தங்கள் கரங்களிலேயே அபிஷேகம் செய்து, ஐந்தாவது வெள்ளியன்று மாங்கல்யம் சாற்றி வழிபட திருமணம் விரைவில் கைகூடும். நாகதோஷம் உள்ளவர்கள் தொடர்ந்து 21 நாட்கள் நாகக் கன்னிகைகளுக்கு நெய்தீபமேற்றி, ஏழுமுறை வலம் வந்து பிந்துமாதவரையும் வேண்டிக்கொள்ள, தோஷநிவர்த்தி பெறலாம்.
2008-ஆம் ஆண்டு கடைசியாக இங்கு சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றுள்ளது. தற்போது திருப்பணி தொடங்கியுள்ளதால் பக்தர்கள் தங்கள் கைங்கரியங்களைச் செய்து, எல்லாம் வல்ல பிந்துமாதவப் பெருமாளின் திருவருளைப் பெற்றுய்ய வேண்டுகிறோம். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டத்திலுள்ள இவ்வூர், ஆம்பூர்- குடியாத்தம் பேருந்து சாலையில், ஆம்பூரிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
- பழங்காமூர் மோ.கணேஷ்