Skip to main content

"களிக்கு பின்னால் இப்படி ஒரு வரலாறா?"- நாஞ்சில் சம்பத் விளக்கம்

Published on 03/11/2022 | Edited on 03/11/2022

 

"Is there such a history behind Kali?"- Nanjil Sampath explanation!

 

'ஓம் சரவண பவ' யூ-டியூப் சேனலுக்கு பேச்சாளரும் இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "களி என்றால் மகிழ்ச்சி. களிப்பு என்றால் கொண்டாட்டம். ஒரு சாதாரண பக்தர் பச்சரிசி மாவு, கோலம்போடுவதற்கு வைத்திருந்த மாவை எடுத்து, வெல்லம் கலந்து சிவனுக்கு களி செய்து படைத்தான். அதை சிவன் விரும்பி ஏற்றுக் கொண்டான். சிவன் அதை வாங்கிச் சென்றான். சிவனுடைய சன்னதியில் அந்த களி சிந்திக் கிடந்தது, சிதறிக் கிடந்தது என்று படிக்கிற பொழுது, சேந்தனாருடைய பக்தி மட்டுமல்ல, நம்முடைய பண்பாடும் ஒன்று புரிகிறது. 

 

அன்பு மீதூற, ஆர்வம் பொங்க, எதை செய்தாலும், அதைப் பக்திப் பூர்வமாக செய்கிறோம் என்பதையும், தாண்டி ஒரு மனிதன் பயன்பட வேண்டும்; ஒரு மனிதன் களிப்புற வேண்டும் என்ற நோக்கத்திற்காக செய்வது, அதனால் தான், அந்த களிக்கு அவ்வளவு மரியாதை. திருவாதிரை திருநாளில் தமிழ்நாட்டில் திருக்கோவில்களில் எல்லாம் சிவனுக்கு களி, நெய் வைத்தியம் செய்து, பக்தர்கள் வழிபடுகிறார்கள் என்றால், இந்த களிக்கு பின்னால் ஒரு நடனம் இருக்கிறது. 

 

இந்த களிக்கு பின்னால் ஒரு களிப்பு இருக்கிறது. இந்த களிப்புக்கு பின்னால், ஒரு மானுட நேயம் இருக்கிறது. இந்த களிப்புக்கு பின்னால், ஒரு முற்றும் கனிந்த பக்தி இருக்கிறது. அந்த பக்தி உள்ளவனாக சேந்தனார் வாழ்ந்தார். இத்தனைக்கும் அரசனாக வீற்றிருந்தவர். சிவபெருமான் திருவிளையாடலால், அரசனாக வீற்றிருந்தவர், ஆண்டியானார். வறுமை வாசலில் வந்த பொழுதும் ஒரு சிவனடியாருக்கு, அமுதம் செய்துவிட்டு உண்ண வைத்து, அழகு பார்க்க வேண்டும் என்று சொல்லக் கூடிய, அவனது தவத்தை அவர் ஒருநாள் கூடக் களைத்துக் கொள்ளவில்லை. 

 

களைத்துக் கொள்ளாமல் இருந்ததால், சிவனுடைய அருள் அவருக்கு பரிபூரணமாகக் கிட்டியதாக நம்முடைய சைவ, சமய இலக்கியங்கள் திரும்ப, திரும்பப் பறைச் சாற்றுகின்றனர். ஓடாத தேரை ஓட்டி வைத்தார் பல்லாண்டு பாடி. அந்த சேந்தனாருடைய பல்லாண்டும், சேந்தனார் செய்து அமுதூட்டிய களியும், தமிழ் பண்பாட்டு சமய, வரலாற்றில் இன்றைக்கும் பேசப்படுகின்றன. திருவாதிரை திருநாளில் தமிழ் திரு நாடெங்கும், எழுந்திருக்கக் கூடிய திருக்கோயில்களில் களி செய்து, அங்கே படைக்கிறார்கள் என்றால், இந்த களிக்கு பின்னால் இப்படி ஒரு வரலாறு இருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும். 

 

ஆகவே, சேந்தனார் செய்த களிதான், திருவாதிரை களி, திருவாதிரை திருநாளில் சேந்தனார் செய்த களியை அனைவரும் நெய் வைத்தியம் செய்து, நீங்களும், நானும் உய்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.   ,