சுஸ்வாணி மாதாஜி மந்திர் என்னும் ஆலயம் ராஜஸ்தான் மாநிலத்தில், பிக்கானிர் மாவட்டத்திலுள்ள மோர்கானா என்னுமிடத்தில் அமைந்திருக்கிறது. 11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயமிது. இந்துக்கள் மட்டுமின்றி, சமணர்களும் இந்த ஆலயத்தை மிகவும் பக்திப் பெருக்குடன் வழிபடுகிறார்கள். இந்தக் கோவிலில் குடிகொண்டிருக்கும் அன்னை சுஸ்வாணி, துர்க்கையின் அவதாரமாகக் கருதப்படுகிறாள். இந்த ஆலயத்தில் ஒரு மரம் இருக்கிறது. அதற்கு அருகில் சிங்கத்தின்மீது அன்னை வீற்றிருக்கிறாள்.
1573-ஆம் வருடத்தில் ஹேம் ராஜ் என்ற மன்னர் இந்த ஆலயத்தைப் புதுப்பித்திருக்கிறார். அதனால் அவரது வம்சத்தைச் சேர்ந்தவர்கள் இந்த அன்னையை குலதெய்வமாகவே வழிபடுகின்றனர். இதுதவிர, டுகார், சங்க்லா ஆகிய சமணப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் இந்த தேவியைத் தங்களின் குலதெய்வமாக வழிபடுகிறார்கள். ஜெய்ஸால்மரிலிருந்து கொண்டுவரப்பட்ட கற்களால் இந்தக் கோவில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த ஆலயத்தின் வெளிச்சுவரிலுள்ள சிற்பங்களும் அந்தக் கற்களாலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன.
பிரதான வாயில் மாற்றியமைக்கப் பட்டிருக்கிறது. பூமிக்குக் கீழேயும் அறைகள் இருக்கின்றன. ஆலயத்தின் மேற்கூரை 16 தூண்களின்மீது அமைக்கப்பட்டிருக்கிறது. சில தூண்களில் கல்வெட்டுகள் உள்ளன. இந்த ஆலயத்திற்குள் ஒரு சிவன் கோவிலும் இருக்கிறது. இங்கிருக்கும் சிவலிங்கம் 5,000 வருடங்கள் பழமையானது. சிவனது ஆலயமும் புதுப்பித்துக் கட்டப்பட்டிருக்கிறது.
சேட் சக்திதாஸ் - சுகன் கன்வார் என்னும் தம்பதிக்கு 1219-ஆம் வருடத்தில் மகளாகப் பிறந்தவள் சுஸ்வாணி. பத்து வயதுகொண்ட அவளுக்கும், துகார் வம்சத்தைச் சேர்ந்த ஒருவனுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. திருமணம் நடைபெறுவதற்குமுன்பு அவளைப் பார்த்த நாகூர் நவாஸ் என்ற மன்னன் அவளது அழகில் மயங்கி, தான் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக சிறுமியின் தந்தையிடம் கூறினான்.
"அவள் துர்க்கையின் அவதாரம். அவளது சரீரத்தை வேறொரு சரீரம் தொடக்கூடாது. இந்து மதத்தைச் சேர்ந்த அவளை முஸ்லிமான நீ அடைய நினைக்கலாமா? அதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்'' என்று கோபத்துடன் கூறினார் சிறுமியின் தந்தை. அதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்து சிறையிலடைத்தான் மன்னன்.
தன் தந்தைக்கு நேர்ந்த கதியை நினைத்தவாறு கவலையுடன் படுத்திருந்த சுஸ்வாணி, தன் துயரத்தைக் கடவுளிடம் முறையிட்டாள். அப்போது கனவில் ஒரு உருவம் தோன்றியது. "கவலைப்படாதே. நவாப்பைப் பார்த்து நீ சவால் விடு. அவனைப் போட்டிக்கு அழைத்து அதில் வெற்றிபெறும்படி கூறு. போட்டி என்னவென்றால்... நீ ஓரிடத்தில் இருக்கவேண்டும். நவாப் அருகில் வந்து உன்னைத் தொடவேண்டும்'' என்று அந்த உருவம் கூறிவிட்டு மறைந்தது. காலையில் எழுந்தபோது, சிறுமியின் நெற்றியில் ஒரு திலகம் இருந்தது. அந்த செந்தூரத்தைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். நவாப்புக்கு தகவல் சென்றது.
அந்த சவாலை ஏற்றுக்கொண்ட அவன், சிறுமியின் தந்தையை விடுதலை செய்தான். தன் சிப்பாய்களுடன் நவாப், சிறுமியின் வீட்டிற்குச் சென்றான். அந்தச் சிறுமி நடக்க ஆரம்பித்தாள். அதற்குமுன்பு தன் கைகளால் அவள் சுவற்றில் செந்தூரத்தைப் பதித்தாள். பின்னர் அவள் ஓட ஆரம்பிக்க, அவளை குதிரையில் அமர்ந்து விரட்டினான் மன்னன். ஆனால் அவளோ மிகவும் வேகமாக ஓடினாள். மன்னனால் அவளைப் பிடிக்கவே முடியவில்லை. சிறுமி கடவுளை வேண்ட, அங்கொரு சிங்கம் தோன்றியது. அதன்மீது அமர்ந்த சிறுமி, அங்கிருந்து மோர்கானாவுக்குப் பயணித்தாள். அங்கிருந்த சிவலிங்கத்தை வழிபட்டாள்.
அவளுக்குமுன் தோன்றிய சிவபெருமான் ஒரு இடுக்கியைத் தூக்கிப் போட, பூமி இரண்டாகப் பிளந்தது. சுஸ்வாணி சிங்கத்துடன் பூமிக்குள் செல்ல, பிளந்த பூமி மூடிக்கொண்டது. அவள் அணிந்திருந்த புடவையின் ஒரு சிறியபகுதி பூமிக்குமேலே இருந்தது. அதைப் பிடிக்கமுயன்ற நவாப்பும் அவனுடைய ஆட்களும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு மடிந்தனர்.
மோர்கானாவில் அப்போதிருந்த மரம் இப்போதும் இருக்கிறது. 1232-ஆம் ஆண்டில் சக்திதாஸ், அவரது தம்பி மால்காதாஸ் ஆகியோரின் கனவுகளில் தோன்றிய சுஸ்வாணி, அந்த இடத்தில் ஒரு ஆலயத்தைக் கட்டும்படி கூறினாள். கோசாலையிலிருக்கும் புதையலை எடுத்து அதற்காக செலவிடும்படி சொன்னாள். அதைத் தொடர்ந்து அங்கு ஆலயம் கட்டப்பட்டது. கிணறு தோண்டப்பட்டது. கோசாலை பெரிதாகக் கட்டப்பட்டது.
பாரதத்தில் இந்த சுஸ்வாணி அன்னைக்கு பல இடங்களில் ஆலயங்கள் இருக்கின்றன. ராஜஸ்தானில் நாகூர், ஜோத்பூர், கன்வாலியாஸ், மேற்கு வங்காளத்தில் ராஜாரட், தமிழகத்தில் விழுப்புரம், கர்நாடகாவில் அட்டிபெலே, மகாராஷ்டிரத்தில் அன்டர் சூல் ஆகிய இடங்களில் அன்னை சுஸ்வாணிக்கு கோவில்கள் இருக்கின்றன.
சென்னையிலிருந்து இந்த ஆலயத்திற்குச் செல்ல விரும்புபவர்கள் பிக்கானிருக்குப் பயணிக்க வேண்டும். வாரத்தில் ஒருநாள் வியாழக்கிழமை அனுவ்ராட் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையிலிருந்து சென்னை வழியாகச் செல்கிறது. பிக்கானிரிலிருந்து மோர்கானா 43 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.