![Srirangam Renganathar Temple Vaikunda Ekadasi 5th day festival ..!](http://image.nakkheeran.in/cdn/farfuture/KEfASWX0fuhhSRoQntPHXnTQIKbPblwlpqC8Pd_cAuQ/1608357358/sites/default/files/inline-images/th-1_107.jpg)
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி 5ஆம் நாள் விழா, நம்பெருமாள் கவரிமான் தொப்பாரக்கொண்டை, விமானப் பதக்கம் மற்றும் திருவாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிதார்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் நடைபெற்றுவரும் வைகுண்ட ஏகாதசி எனப்படும் சொர்க்கவாசல் திறப்புவிழா மிகவும் சிறப்புவாய்ந்ததாகும்.
கடந்த 15ஆம் தேதியன்று திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கி பகல்பத்து நாட்கள் இராப்பத்து என 21 நாட்கள் நடைபெறும் நிகழ்வில், பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி உலாவரும் நம்பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்வர். வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல்பத்து விழாவின், 5ஆம் திருநாளான இன்று, சுக்கிரனுக்கு அதிபதியான நம்பெருமாள் (உற்சவர்) மூலஸ்தானத்திலிருந்து கவரிமான் தொப்பாரக் கொண்டையணிந்து, மார்பில் விமானப்பதக்கம், மற்றும் வைர அபயஹஸ்தம், முத்துமாலை, பவளமாலை சாற்றிக்கொண்டு எழுந்தருளினார்.
பின்னர் ராமானுஜர், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் தொடர்ந்துவர வழியெங்கும் அரையர்கள் சேவையின்போது திருமொழி பாசுரங்களை கேட்டருளி, பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அர்ச்சுன மண்டபத்தில் பெருந்திரளான பக்தர்கள் வரிசையில் நின்று பூலோகவைகுண்ட பெருமாளை ரெங்கா, ரெங்கா என பக்திகோஷமிட்டவாறு வணங்கிச்சென்றனர்.