Skip to main content

பெரிய குறைகளை அகற்றும் சிறிய பிரமிடுகள்

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

 Small pyramids that eliminate large defects 

 

பிரமிடுகள் பற்றிய பல செய்திகளை நாம் படித்திருக்கிறோம். அவை வாஸ்து குறைகளை எப்படி அகற்றுகின்றன என்பதை சுருக்கமாக இங்கு காண்போம்.

 

பிரமிடுகள் உலோகம், கண்ணாடி, மரம், பிளாஸ்டிக் போன்றவற்றால் பல அளவுகளிலும் வடிவங்களிலும் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன என்றாலும் புண்ணிய தேச மணல், மண், கல், புல்லுருவி இலைச் சாறு, மூலிகைச்சாறு, கடல் சிப்பியில் எடுக்கப்பட்ட சுண்ணாம்புப் பொடி ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட பிரமிடுகள் மிகச்சிறந்தனவாகும்; மிக வேகமான நற்பலன் தருவனவாகும்.

 

உலோகம் என்றால் மின்சாரத்தை உட்கொள்ளும் சக்தியுடையது. அதைவிட மின் அதிர்வுகளை உள்வாங்காத பிரமிடுகளே அதிக பலன் தரும் எனலாம். எட்டுத்திக்கிலும் அதிக நன்மைகளை உருவாக்கித் தரும் அஷ்டமோஹனப் பிரமிடுகளை - எட்டுத் திக்குகளில் அவை இருக்கவேண்டிய இடங்களில் வைத்துக்கொண்டால் அதிக நன்மைகளைப் பெறலாம்.

 

வடதுருவ - தென்துருவ காந்த ஈர்ப்பு சக்தியிலிருந்து இருப்பிடத்தையும் கட்டடங்களையும் வாஸ்து ரீதியாக காப்பாற்றவே பிரமிடுகள் உபயோகிக்கப்படுகின்றன. எல்லா வாஸ்து தீமைகளுக்கும் கட்டடங்களை இடித்து மாற்றுவது இயலாது. குறிப்பாக, அடுக்குமாடி கட்டடங்களில் அது இயலாத காரியம். எனவே, சிறிய பிரமிடுகளைக் கொண்டு அதை நிவர்த்தி செய்யலாம்.

 

நல்ல நிறங்கள் கொண்ட பிரமிடுகள் மிகச்சிறந்தவை. அவற்றை இருக்க வேண்டிய இடத்தில் வைத்துக்கொண்டால் தேவையற்ற கவலைகள் படிப்படியாக மறையும். இவை இன்ஸ்டன்ட் காப்பி போன்றதல்ல, உடனேயே பருகுவதற்கு. பிரமிடுகள் மெல்ல மெல்ல நன்மைகளுக்குத் துணை வருவதை உணரலாம்.

 

நான்கு பக்கங்கள் கொண்ட பிரமிட் எல்லாவற்றுக்கும் பொதுவானது. ஐந்து பக்கமும் உச்சி முனையும் கொண்டவற்றை வீட்டின் பிரம்ம பாகத்தில் (மையத்தில்) இருக்கச் செய்தால், பஞ்சபூத கெடுதிகள் நம்மை அண்டவிடாமல் பாதுகாத்து, தீமைகளை அவை உள்வாங்கிக் கொள்ளும். ஆறு பக்கங்களும் கூர்முனையும் கொண்ட பிரமிட், இருக்கும் இடத்தைச் சுற்றியுள்ள திசைகளைச் சீர்செய்து, நோய் நொடி வராமல் தடுக்கும். வீட்டில் அடிக்கடி சண்டை, சச்சரவு, உத்தியோகச் சிக்கல் போன்ற இன்னல்களை அகற்றி பாதுகாப்பு தரும்.

 

ஏழு பக்கங்களும் கூர்முனையும் கொண்ட பிரமிட், தடைப்பட்ட திருமணங்களை விரைவில் நடைபெறச் செய்யும். அன்பு சார்ந்த; காதல் சார்ந்த வேதனைகளை இந்த பிரமிட் போக்கும். எட்டு பக்கங்களும் கூர்முனையும் கொண்ட பிரமிட், அட்ட திக்குகளில் இருந்து ஏற்படும் எல்லா தீய சக்திகளையும் உள்வாங்கி, அது இருக்குமிடத்தில் எந்தக் கெடுதல்களும் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கும் வல்லமை படைத்தது. வீட்டின் மாடியிலோ அல்லது கட்டடத்தின் உயரமான பாகத்திலோ இருக்கச் செய்தால் எல்லா இடர்களில் இருந்தும் நம்மைக் காப்பாற்றிவிடும். வெண்மை நிறம்தான் இதற்குச் சிறந்தது.

 

ஒன்பது பக்கங்களும் கூர்முனையும் கொண்ட பிரமிடை கல்விக் கூடங்கள், பயிற்சி தரும் இடங்கள், தியானம், யோகா போன்ற ஆத்மசாதனை புரியும் இடங்களில் வைத்துக்கொண்டால், தங்கு தடையின்றி எல்லா காரியங்களையும் முயற்சிகளையும் வெற்றி பெறச்செய்யும். மஞ்சள் வண்ணம் ஏற்றது.

 

கிழக்கு பாகத்திற்கு மரத்தினால் உருவாக்கப்பட்ட பிரமிட் சிறந்தது. ரோஸ்வுட், கருந்தேக்கு, கடம்பு, ஒய்ட் சிடால் மரங்கள் ஏற்புடையவை. தென்கிழக்கில் செம்பிலான சிறிய பிரமிட் அல்லது சுத்த வெண்மைநிற பிரமிடை சற்று உயரமான இடத்தில் வைத்துக்கொண்டால், மனவேறுபாடுடைய தம்பதிகள் கூட வெறுப்புணர்ச்சி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் வாழ்வார்கள். அந்த இடத்தில் சமையல் கூடம் இருந்தால் உணவுக்குரிய தானியங்கள் எப்போதும் வேண்டிய அளவு இருந்து கொண்டேயிருக்கும். தெற்கு பாகத்தில் சிவப்புநிற மர பிரமிட் ஒன்பது இஞ்ச் அளவில் இருப்பது சிறப்பானது. 18 இஞ்ச் அளவில் பெரிய பிரமிட் இருப்பது மிக நல்லது. அது கருஞ்சிவப்பாக இருந்தால் மிகவும் நல்லது. உயரிய பலனைப் பெற்றுத்தரும்.

 

தென்மேற்கில் பிளாஸ்டிக் பிரமிட் இருந்தாலும் பாதகமில்லை. இதன் முனையை வடக்கு- தெற்காக வைத்துக்கொண்டால் அதிவேகமான செயல்திறனைப் பெற்றுத்தரும். மேற்கு பகுதியில் மூன்று இஞ்ச்சில் செம்பினாலான பிரமிட் அல்லது பிரவுன் கலர் பிரமிட் இருப்பது நன்மைகளைத் தரும். அதைவிட மேற்கை ஆளும் சனி பகவானுக்குரிய நீலநிற பிரமிட் சாலச்சிறந்தது.

 

வடக்கு பாகத்தில் தங்கநிற ஆறு இஞ்ச் பிரமிட் வைத்துக்கொள்வதால் நன்மைகளைப் பெறலாம். வடக்கு சுவரின் பக்கத்தில்தான் வைக்க வேண்டும். வடமேற்கில் 12 இஞ்ச் அளவில் வெள்ளி பிரமிட் அல்லது வெள்ளிநிற பிரமிட் வைப்பது மிகச்சிறப்பானது. இதனை கப்போர்ட் போன்ற இருட்டான இடத்தில் வைப்பது கூடாது. வடகிழக்கு பகுதியில் கெடுதலுக்குரிய பிரமிட் அமைந்துவிட்டால் அதிகமான குறைகளைத்தான் சந்திக்க நேரிடும். எனவே, இங்கு ஒரு சிறு புது மண்குடுவையில் நீரை நிரப்பி வைத்துக்கொண்டாலே போதும். இங்கு வைக்க புண்ணிய தேச மணலில் உருவாக்கிய பிரமிட்தான் சிறப்பானது.

 

பிரமிடுகள் ஏன் வேண்டும்?
பிரமிடுகள் கி.மு. 332 முதல் 3,100 வரை மண்ணுலகில் முக்கியமான வழிகாட்டியாகத் திகழ்ந்துள்ளதாம். உலகில் பெரிய பிரமிட் மெக்சிகோவில் கிட்டதட்ட 45 ஏக்கரில் 117 அடி உயரத்தில் நிர்மாணிக்கப்பட்டதாம். எகிப்தில் 480 அடி உயர பிரமிட் 13 ஏக்கரில் உருவாக்கப்பட்டதாம். நம் பாரதத்தில் கோபுரக் கலசம் வைப்பதன் அடிப்படை, கோபுரங்களை இயற்கை சீற்றத்திலிருந்து காப்பாற்றத்தான். அந்த அடிப்படையிலேயே பிரமிடுகள் செயல்படுகின்றன. எனவே, சிறிய பிரமிடுகளால் அதிக நன்மைகளை நாம் பெற இயலும்.

 

--பண்டிட் எம்.ஏ.பி. பிள்ளை