மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'சமயமும் தமிழும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், பாம்பன் சுவாமிகள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு,
அருளாளர்கள் அமைதி கொண்டுள்ள இடங்களுக்குச் சென்றால் நெஞ்சத்தில் நிம்மதி கூடுகட்டிவிடுகிறது; நிழலில் உட்காருவது மாதிரியான சுகம் கிடைக்கிறது. அருளாளர்கள் அடக்கமாகி இருக்கும் அடக்கத்தளத்தில் சென்று நின்றால் மனம் அமைதிக்காடாகி விடுகிறது. எவ்வளவு சாதித்தாலும், சம்பாதித்தாலும் ஒருவனுக்கு தேவைப்படுவது அமைதிதான். அந்த அமைதி எங்கு கிடைக்கும்?
திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் நினைவிடத்தில் வந்து பல பெரிய பிரமுகர்கள் அமைதியாக உட்கார்ந்திருக்கிறார்கள். சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எதிரே இருக்கும் ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவமனையான எம்.எம்.சி. மருத்துவமனையில் பாம்பன் சுவாமிகள் படம் உள்ளது. அந்த மருத்துவமனையில் எதற்கு பாம்பன் சுவாமிகள் படம் இருக்கிறது என்று யோசித்திருக்கிறேன்.
சண்முகக்கவசம் பாடிய அருளாளர், கந்தசஷ்டி கவசத்தை தினமும் ஓதுகிறவர், திருப்புகழை தினமும் பாடி, இதைப்போன்ற படைப்புகளை நானும் உமக்கு தரவேண்டும் முருகா என்று முருகனிடம் யாசகம் கேட்டுக்கொண்டு அதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லாமல் வாழ்ந்தவர் பாம்பன் சுவாமிகள். 73 வயதான பாம்பன் சுவாமிகள் சராசரி மனிதரைப்போல தலைநகர் சென்னையில் தம்புசெட்டி தெருவில் நடந்து சென்றுகொண்டிருக்கிறார். ஒரு குதிரை வண்டி அவர் காலில் ஏறி கால் முடமாகிவிடுகிறது. அவரை நேசிக்கும் நபர்கள் அவரைத் தூக்கிகொண்டுவந்து சென்னை பொதுமருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள். அப்போது அங்கு வெள்ளைக்காரர்கள் மருத்துவர்களாக இருந்தனர். பாம்பன் சுவாமிகள் காலைப் பார்த்த வெள்ளைக்கார மருத்துவர்கள், இவர் முடத்தை நீக்குவது கடினம், வயதும் அதிகரித்துவிட்டதால் இவரைக் காப்பற்ற முடியும் என எங்களுக்கு நம்பிக்கையில்லை எனச் சொல்லிவிட்டார்கள். ஆனால், பாம்பன் சுவாமியின் அடியார்கள் அவரைச் சுற்றி நின்றுகொண்டு அவர் படைத்த சண்முகக்கவசத்தை திரும்பத்திரும்ப படித்தார்கள்.
நாட்கள் சென்று கொண்டிருந்தது. ஒருநாள், பாம்பன் சுவாமிகளின் கண்களுக்கு மயில் வாகனத்தில் முருகன் பறந்துவருவது தெரிகிறது. கண் மூடி திறப்பதற்குள் மயிலையும் காணவில்லை; முருகனையும் காணவில்லை. அதிசயம் என்னவென்றால் முடமான அவர் காலில் இருந்த வலியையும் காணவில்லை.
இவரைக் காப்பாற்ற முடியும் என எங்களுக்கு நம்பிக்கையில்லை என டாக்டர்களால் கைவிடப்பட்ட பாம்பன் சுவாமிகள், சண்முகக்கவசம் பாடி காப்பாற்றப்படுகிறார். இலையில் இருக்கும் பனித்துளி சூரிய ஒளிபட்டால் விலகுவதுபோல மயில் வாகனத்தில் முருகன் வருவது கண்ணிற்கு தெரிந்ததும் அவர் காலில் இருந்த முடம் விலகியது. சராசரி மனிதரைப்போல எழுந்து நடக்க ஆரம்பித்த பாம்பன் சுவாமிகளைப் பார்த்த மருத்துவர்கள் என்ன அதிசயம் நடந்தது என வியந்தார்கள்.
சண்முகக்கவசம் பாடினால் எல்லா வலிகளும் பறந்துபோகும் என்பதற்கு சான்றாக இன்றைக்கும் பாம்பன் சுவாமிகள் நினைவிடத்திற்கு சென்று பக்தர்கள் அமைதியைத் தேடுகிறார்கள். முருகனை கொண்டாடுவதைப் போல அவரது அடியார்களையும் கொண்டாடும் தமிழ்நாட்டில் பக்தி செழித்திருப்பதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.