மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'சமயமும் தமிழும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
சமகால தமிழகத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சிக்கு இன்றைக்கு உள்ள அரசு முகம் கொடுத்திருக்கிறது. தமிழில் அர்ச்சனை செய்வதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு அது நடைமுறைக்கும் வந்துள்ளது. மயிலாப்பூரில் சிவநேச செட்டியார் என்று ஒருவர் இருந்தார். அவர் மகளின் பெயர் பூம்பாவை. அவரை வளர்க்கும்போதே திருஞானசம்மந்தருக்கு மணமுடித்து வைக்க வேண்டும் என்று சிவநேச செட்டியார் நினைத்து வைத்திருந்தார். பூம்பாவை ஒருநாள் திடீரென உயிரிழந்துவிட்டார். மகளை இழந்த சோகத்தில் அழுதுகொண்டும் ஆண்டவனைத் தொழுதுகொண்டும் காலத்தை கழித்தார் சிவநேச செட்டியார். ஒருநாள் திருஞானசம்மந்தர் மயிலாப்பூருக்கு வருகிறார் என்று தெரிந்ததும் அவரிடம் சென்று என் மகளை உங்களின் பொருட்டே ஆசைஆசையாய் வளர்த்தேன். அவளை காலன் கவர்ந்து சென்றுவிட்டான் என்று கூறுகிறார். அந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் 'மட்டிட்ட புன்னை...' என்று தொடங்கும் பதிகத்தை பாடினார் திருஞானசம்மந்தர்.
தமிழில் அர்ச்சனை என்று சொன்னால் இது தகாது என்று சிலர் சொல்கிறார்கள். மட்டிட்ட புன்னை என்ற பதிகத்தைப் படிக்கிறபோது பூம்பாவை உயிர் பெற்றுவந்தார் என்று நாம் படிக்கிறோம். கொங்கு மண்டலத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலங்களுள் ஒன்று அவிநாசி. அந்த திருத்தலத்திற்கு ஒருநாள் ஆலால சுந்தரர் வருகை தருகிறார். அவிநாசி குளத்தில் ஒரு தாயும் குழந்தையும் குளிக்கச் செல்கின்றனர். அந்தக் குழந்தையின் காலை முதலை கவ்வியதும் மக்கள் அலற ஆரம்பிக்கின்றனர். அந்த இடத்தில் ஊரே கூடிவிட்டது. அங்கு கதறி அழுதுகொண்டிருந்த தாய், இறைவனே என்னுடைய குழந்தையை காப்பற்றித் தரமாட்டாயா என்கிறாள். அங்கு வந்த ஆலால சுந்தரரிடமும் குழந்தையை காப்பற்றித்தாருங்கள் என்று கோரிக்கை வைக்கிறார். உடனே அவிநாசியப்பனை பார்த்து ஒரு பதிகம் பாடுகிறார் ஆலால சுந்தரர்.
அவர் அந்தப் பதிகத்தை பாடி முடித்ததும் முதலை குழந்தையின் காலை விட்டுவிட்டது. இப்படி முதலையின் வாயில் சிக்கிய குழந்தையை மீட்பதற்கும், உயிர் பிரிந்த பூம்பாவையை பிழைக்க வைப்பதற்கும் என்னுடைய தமிழ் உதவியது. திருமறைக்காடு எனும் வேதாரண்யத்தில் கதவை மூடுவதற்கும் திறப்பதற்கும் தமிழ்ப்பாசுரம் உதவியது. ஆகவே சமயக்குறவர்கள் இறைவன் மீது தமிழில் பாடினார்கள்.
நாலாயிர திவ்ய பிரபந்தம் என்றும், பன்னிரு திருமுறைகள் என்றும் எழுதிக் குவித்திருக்கிற நூல்களைப் படிக்கிறபோது உள்ளம் உருகுகிறது. அந்தத் தமிழில் இறைவனை அர்ச்சித்தால் ஏற்க முடியாது என்று கூறி வாய்க்கு வசப்படாத யாருக்கும் புரியாத சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்துவந்த நடைமுறையை மாற்றுவதற்கான தொடக்கம் தற்போது தமிழ்நாட்டில் ஆரம்பமாகியுள்ளது. ஞானசம்மந்தருடைய பாடல் கேட்டால் உங்களுக்கு சிவலோககதி கிடைக்கும். அப்படி பாடிய பனுவல்கள் பைந்தமிழில் நிறைய இருக்கின்றன. இந்தப் பைந்தமிழ் பாசுரங்களை திருக்கோவில்களில் பாடி தமிழில் அர்ச்சனை செய்வதற்கான நல்ல காலம் தற்போது திரும்பி வந்துள்ளது. இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட தமிழ் மொழிதான் அர்ச்சனைக்கு ஏற்ற மொழி.
மாணிக்கவாசகரின் திருவாசகத்தை படித்துவிட்டு சிவபெருமானே தமிழில் கையெழுத்துப்போட்டார். அந்தக் கையெழுத்து இன்றும் தில்லையில் இருக்கிறது. தென்குமரியிலிருந்து திருவேங்கடம்வரை உள்ள இந்தத் தீந்தமிழ் நாட்டில் தமிழிலேயே அர்ச்சனை செய்வோம். தமிழில் அர்ச்சனை செய்வதும் தமிழில் பாடுவதும் தமிழ்நாட்டில் பழக்கமாகிவிடுமானால் ஆட்சி மொழி என்ற தகுதியையும் தாண்டி உலக மொழி என்ற உச்சத்தையும் தமிழ் தொடும்.