பெண்கள் தாங்கள் வாழச் செல்லும் வீடு நல்ல வசதி வாய்ப்புகளுடன் அமைய வேண்டுமென விரும்புவார்கள். சிலருக்கு வசதி வாய்ப்பில்லாத வாழ்க்கைத்துணை அமைந்தாலும் கணவன் வீட்டிற்குச் சென்றவுடன் அந்த வீட்டில் எதிர்பாராத முன்னேற்றங்களும் பொருளாதார உயர்வுகளும் உண்டாகும். கஷ்டப்பட்டு ஜீவனம் நடத்தும் ஒருவருக்கு மனைவி என்ற உறவு வந்தவுடன் அதிர்ஷ்டங்கள் தேடிவந்தால், "இந்தப் பெண் வந்த நேரம் நல்ல நேரம்; இவள் மகாலட்சுமி' என அக்குடும்பத்திலுள்ள அனைவரும் போற்றுவார்கள். மனைவி என்ற உறவு வந்தபின்தான் வாழ்க்கையில் பல மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி, சுபிட்சம், பொன், பொருள், வீடு, வாகனச் சேர்க்கை, தொழில், உத்தியோகத்தில் உயர்வு, சுக வாழ்வு யாவும் அமையும்.
ஜென்ம லக்னத்திற்கு 7-ஆம் வீடானது களத்திர ஸ்தானமாகும். நவகிரகங்களில் சுக்கிரன் களத்திர காரகனாவார். ஒருவரின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7-ஆம் வீடும், களத்திரகாரகனும், சுக்கிரனும் ஆட்சி, உச்சம் பெற்றாலும், வலுவாக அமைந்திருந்தாலும் திருமணத்திற்குப்பிறகு அமையும் வாழ்க்கைத்துணைமூலம் பொருளாதார மேன்மைகளும் உயர்வுகளும் உண்டாகும்.ஜென்ம லக்னத்திற்கு 7-ஆம் வீட்டு அதிபதியும், சுக்கிரனும் பலவீனமடைந்திருந்தாலும், வக்ரம் பெற்றாலும் வாழ்க்கைத்துணைமூலம் நற்பலனையடைய இடையூறுகள் ஏற்படும்.
ஜென்ம லக்னத்திற்கு 2-ஆம் இடம் தனஸ்தானம் ஆகும். 11-ஆம் இடம் லாபஸ்தானம் ஆகும். ஒருவரின் ஜாதகத்தில் 2, 11-க்கு அதிபதிகள் 7-ஆம் வீட்டு அதிபதியுடனோ, சுக்கிரனுடனோ இணைந்து பலம்பெற்றிருந்தாலும், 7-ஆம் அதிபதியுடன் பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் திருமணத்திற்குப்பின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து எல்லாவகையிலும் மேன்மைகள் உண்டாகும்.ஜென்ம லக்னத்திற்கு 7-ஆம் வீட்டு அதிபதியும், சுக்கிரனும் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் சுபகிரக சாரம் பெற்று பலமாக இருந்தால், திருமணத்தின்மூலம் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும்.
ஜென்ம லக்னத்திற்கு 4-ஆம் வீடு அசையும்- அசையா சொத்து மற்றும் சுக வாழ்வைக் குறிப்பது. ஜாதகத்தில் 4-ஆம் அதிபதியும், 7-ஆம் அதிபதியும், சுக்கிரனும் பலம் பெற்றிருந்தாலும், 4, 7-க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும், 4, 7-க்கு அதிபதிகள் சுக்கிரனுடன் இணைந்து ஆட்சி, உச்சம் பெற்று பலமாக இருந்தாலும் திருமணத்திற்குப்பின் சொந்த பூமி, மனை, வீடு, வண்டி வாங்கி அனுபவிக்கும் யோகம் சிறப்பாக அமையும். தொழில் செய்து நிறைய சம்பாதிக்கும் வாய்ப்புண்டாகி நல்ல லாபம் கிடைக்கும்.
ஜென்ம லக்னத்திற்கு தொழில் ஸ்தானமான 10-ஆம் வீட்டின் அதிபதியுடன் 7-ஆம் அதிபதி இணைந்திருந்தாலும், பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும் திருமணத்திற்குப்பின் வாழ்க்கைத்துணையுடன் இணைந்து தொழில் செய்து உயரக்கூடிய யோகம் உண்டாகும். 7, 10-க்கு அதிபதிகளுடன் சுக்கிரன் சம்பந்தமும் ஏற்பட்டிருந்தால் கணவன், மனைவி இருவரும் இணைந்து தொழில் செய்து, அதன்மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பினைப் பெற்று உயர்வுகளை அடைய முடியும்.
ஜென்ம லக்னத்திற்கு தொழில் ஸ்தானமான 10-ஆம் வீட்டின் அதிபதி பலம் பெற்றிருந்தால்தான் சொந்தத் தொழில் செய்து சம்பாதிக்க முடியும். அப்படி 10-ஆம் அதிபதி பலம் பெறாமலிருந்து 7-ஆம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்று பலமாக இருந்தால், ஜாதகர் வாழ்க்கைத்துணையின் பெயரில் தொழில் தொடங்கி நற்பலன்களை அடைய முடியும்.
ஒருவர் ஜாதகத்தில் 7-ஆம் வீடு கூட்டுத்தொழில் ஸ்தானமாகும். உபய லக்னமான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகியவற்றில் பிறந்தவர்களுக்கு 7-ஆம் இடம் பாதக ஸ்தானம் ஆகும். உபய லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7-ஆம் அதிபதி பலம் பெற்றிருந்தால், 7-ஆம் இடம் பாதக ஸ்தானம் என்பதால் எக்காரணத்தைக் கொண்டும் வெளியாட்களைக் கூட்டாளிகளாகச் சேர்க்காமல், மனைவியை மட்டுமே கூட்டாளியாக வைத்து தொழில் செய்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் முன்னேற்றத்தை அடையமுடியும்.