இளவலின் மேனியில் குருநாதர் கைப்பட்டு, அவரது நல்லாசியுடன் புவனையின் அட்சரங்கள் பதித்த மார்புக் கவசம் பூட்டப்பட்டவுடன், வலம்புரிச் சங்குகளின் நாதங்கள் முழங்க, அதனோடு இயைந்து பெருஞ்சேகண்டிகள் வாசிக்கப்படும்.
பெண் அலங்காரகை
அப்போது கோவில் திருப்பணிகள் செய்வதற்கே உரிய தூய நெஞ்சமும், தகுதியுமுடைய பெண் அலங்காரகைகள் வருவார்கள். ஆதிகாலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், மீனாட்சியம்மன் திருமேனி தொட்டு நன்னீராட்டி பட்டாடை உடுத்தி, உயர்வகைப் பொன்னாபரணங்கள் சூட்டி, மலர்மாலைகளால் அலங்காரம் செய்து பூஜைகள் செய்துவந்தவர்கள் இவர்களே!
இவர்கள் துறவுபூண்டு கோவிலிலேயே தங்கிக் கொள்வார்கள். ஆடவர்கள் யாரும் மீனாட்சியம்மனைத் தொடவோ அலங்கரிக்கவோ கூடாது என்ற உயரிய கற்பு மாண்புடைய பழக்கங்கள், அப்போது மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர்கள் பாண்டிய நாட்டில், மருதநிலத்தில் பிறந்த தமிழ்க்குடிகளாக இருக்க வேண்டுமென்பதும் மரபாகப் பின்பற்றப்பட்டது. இவர்கள், தாங்களே விரும்பி துறவுபூண்டு, குருகுலத்தில் பயிற்சி பெற்றவர்களாக இருந்து வந்துள்ளனர்.
அவர்கள் ஒரு தங்கத் தாம்பாளத்தில் பட்டுப் பீதாம்பரம் விரித்து, அதன்மீது 16 வகைப் பூக்களைப் பரப்பி, அதன் நடுவே "அகி' என்றழைக்கப்படும் காலில் மருதநாயகன் அணியவிருக்கும் ராஜ சிலம்பு அல்லது ராஜ நூபுரம் என்றழைக்கப்படும் வீர அணிகலன்களை அதன் மீது வைத்து எடுத்து வருவார்கள். இந்த ராஜ அகியானது, பொன்னால் செய்யப்பட்டு, உட்புறம் ஒலி எழுப்ப முத்துகளும், வெளிப்புறம் அதனைச் சுற்றிலும் விலைமதிப்பற்ற ரத்தின மணிகளாலும் அலங்கரிக்கப்பட்டுக் காணப்படும்.
இதனை எடுத்துவரும் அலங்காரகைகள், அங்காளம்மன் சந்நிதியின்முன் நின்று அதைத் தொட்டெடுத்துக் கண்ணொற்றி வணங்கி, அங்காளம்மன் திருமடியில் வைப்பார்கள். பின்பு, அவர்கள் அங்காளம்மன் சந்நிதியின் முன்பு வரிசையாக வடக்கு நோக்கி நின்று "அங்கமாலை' என்ற பாடலைப் பாடுவார்கள். அங்கமாலை என்பது மருதநாயகன் இந்த ராஜ அகியை அணிந்தபின், அவன் வாழ்நாளில் எடுத்துவைக்கப்போகும் ஒவ்வொரு அடியிலும் எந்த ஒரு பாதிப்பும் அவனுக்கு ஏற்படாவண்ணம் "ஆதித்தாயான அங்காளம்மனே! நீ சீரோடு அவனது அங்கங்களைப் பாதுகாத்தருள வேண்டுமென, அங்காளம்மனை வேண்டிப் பாடும் காப்புப் பாடலாகும். இதை வெண்பா விருத்தத்தால் அந்தாதித் தொடை அமையப் பாடுவார்கள். பாடும்போது உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொரு அங்கத்திலும் அடித்து அங்க தாளத்தோடு விரல்களால் எண்ணியும், கைத்தட்டியும் பாடுவார்கள். எழுவகை அகவன் மகளிர் இந்த அங்கமாலை வழிபாடு முடிந்தவுடன், ஏழு அகவன் மகளிர் வருவார்கள். இவர்கள், பழங்குடி சமுதாய வழக்கத்தின்படி பெரிய திருக்கோவில்களில் பூஜைகள் நடைபெறும்போது, அக்கோவிலிலுள்ள பெண் தெய்வங்களின் அருள் வேண்டி செய்யும் பூஜைமுறைகளில் பங்கு கொள்பவர்கள்.
1. முதுவாய்ப் பெண்டிர்
ஒரு திருக்கோவிலிலுள்ள பெண் தெய்வங்களின் வரலாறுகளையும் அவர்களின் சிறப்பியல்களையும் பாடுவாள்.
2. கட்டுவச்சி
மேற்சொன்ன தெய்வங்கள் தற்போதுள்ளவர்களின் வாழ்வியல் துறைகளில் எவ்வாறெல்லாம் வரம் தந்து காப்பார்கள் என்பதைப் பாடுவாள்.
3. கொடிச்சி
ஒவ்வொரு தெய்வமும் எந்தக் காரணத்தினால் தெய்வநிலையை அடைந்தனர் என கொடிவழிப் பாரம்பரியத்தையும், அவர்களுக்குப் பிடித்த உணவு வகை, உடை வகைகளைப் படைத்தால் என்னென்ன வரங்களையெல்லாம் நமக்குத் தருவாள் என்பதையும் பாடுவாள்.
4. தேவராட்டி
தேவராட்டி என்பவள், அக்கோவிலில் இருக்கும் தங்கள் குல மூதாட்டிகளான தெய்வ ஆன்மாக்களின் வரவைத் தங்கள் உடலுக்குள் இறக்கி, அவர்கள் பேசுவது போல், பக்தர்களுக்கு அவர்கள் கூறும் பிரச்சினைகளுக்கான கேள்விகளுக்கு சரியான தீர்வுகளைக் கூறுவாள். இதற்கு, "அகவி கூறுதல்' என்று பெயர்.
5. பாண்மகள்
இவள், ஒவ்வொரு தேவராட்டியின்மீதும் அவரவருக்குரிய தெய்வங்களைப் பாட்டினால் வருவிக்கும் அருள்தரும் பாடல்களை உருக்கமாக, உடுக்கை இசையோடு பாடி, தெய்வங்களைத் தேவராட்டிகள் மீது இறங்கச்செய்வாள்.
6. புலைமகள்
தேவராட்டிகளுக்கு அருள் இறங்கியவுடன், அவரவருக்குரிய குறியீட்டுப் பொருள்களைத் தயார் நிலையில் வைத்திருந்து அவர்கள் கைகளில் கொடுப்பாள். உதாரணமாக வேப்பிலைக்கொத்து, அக்னிச்சட்டி, தென்னம்பாளை, மாவிளக்கு, கிலுகிலுப்பை, பிரம்மத்தண்டு, கிண்கிணி, மஞ்சள்நீர்க் குடம், கற்குடம், பானக்கரம் போன்றவற்றைப் பெற்றுக்கொண்டு மருளாடுவர். இவ்வாறு மருளாடி ஒவ்வொருவரும் இளவலுக்குமுன் வந்து, அவனது எதிர் காலத்தில் நடக்கவிருக்கும் அரிய நிகழ்வுகளைக் கூறி, "அதற்காக நான் உறுதுணையாக இருப்பேன்' என ஆசிர்வாதத்தோடு சேர்ந்த உறுதிமொழி பகர்வார்கள்.
7. பெண் பூசாரி
மேற்கூறிய வழிபாடுகள் நிறைவடைந்தவுடன், பெண்பூசாரி பாரம்பரிய முறைப்படி அங்காளம்மனுக்கு நன்னீராட்டி பரிவட்ட சேலை உடுத்தி, முகத்தில் அஞ்சனம், காதோலை, கருகுமணி, ஒட்டியாணம் போன்ற தெய்வ அலங்காரம் முடித்துப் பூமாலை சூட்டி பொங்கலிட்டுப் பூசிப்பாள். இதற்கு "சிறப்பு செய்தல்' என்று பெயர். இது முடிந்தவுடன் அங்காளம்மனின் கைகளில் இராஜ அகியை வைத்து வணங்கி, அதை எடுத்து சாலினிப் பெண்டிரிடம் கொடுப்பாள்.
8.சாலினிப் பெண்டிர்
’சாலினிப் பெண்டிர்’ என்பவர்கள் 21 வகை மங்கள இலச்சினைகளைத் தம் உடலில் அணிந்து, மங்கள வாழ்த்துப் பாடி மங்கள நிகழ்வுகளைச் செய்பவர்கள்.
இவர்கள் வைத்திருக்கும் நெல்மணிகள் நிறைந்த நிறைகுடமானது, பொன்னால் செய்யப்பட்ட மரக்காலில் வெற்றிலைக் கொடி சுற்றப்பட்டு, அதன் நடுவே, முளைத்த மஞ்சள், நட்டுவைத்திருக்கும் தானியப் பொதியம், உப்பு நிறைந்த பொற்தாம்பாளம், சிறு முரசு, தீபமேற்றிய குத்துவிளக்கு, கவரி, கண்ணாடி, தோட்டி இணைக்கயல் கொடி போன்ற மங்கள உறுப்புகளைக் கொண்டதாகும். இவற்றையெல்லாம் இளவலுக்கு ஆரத்தி நலுங்கு செய்வதற்காக பெண் பூசாரி அங்காளம்மன் பாதத்திலிருந்து ஆசி வழங்கி எடுத்துக் கொடுப்பாள். இவையனைத்தையும் பெற்றுக்கொண்ட சாலினிகள் முதலில் அட்சதை அரிசியும் மலர்களும் கலந்து வைக்கப்பட்ட தட்டுகளை அங்கிருக்கும் அனைத்துப் பெரியோர்களுக்கும் கொடுப்பார்கள். பின், இளவலிருக்கும் இடத்திற்குப் பெரியோர்கள் சூழ்ந்த கூட்டத்தைச் சுற்றி வலமாக வந்துசேர்வார்கள்.
இவர்கள், மருதநாயகத்தை வந்து சேர்வதற்குள், மருத மரத்தால் கலை வேலைப்பாட்டுடன் செய்யப்பட்ட மருதாசனமும், காலாசனமும் மருதநாயகன் அமர்ந்து கால் வைப்பதற்கு அவ்விடத்திற்கு வந்து சேர்ந்துவிடும். வீரக்கழல் பூட்டுவதற்கு மருதாசனத்தில் இளவலை அமரவைத்து, அவனது பாதங்களை பாதாசனத்தில் வைத்து, அதனை மங்களநீரால் நீராட்டி, வெண்பட்டால் ஒத்தியெடுத்து, அகில், சந்தனங்களிட்டு, குங்குமமிட்டு, மலர்தூவி, வீரக்கழலணியாகிய ராஜ அகியை சாலினிப் பெண்கள் பூட்டுவார்கள்.
ஏற்கெனவே ராஜகுருவால் குறிப்பிடப்பட்டிருந்த சுப ஓரையில் இந்நிகழ்வு நடக்கும். சாலினிப் பெண்கள் இளவலின் அருகே சென்றவுடன் முரசு, நிசாளம், துடுமை, திமலை எனும் நால்வகை வீரமுழவுகளும் முழங்கத் தொடங்கும். இந்த முரசொலிகள், இளவலுடன் அங்கிருக்கும் அனைவரது உடல் சிலிர்க்க, உயிர் சிலிர்க்க, உள்ளமும் வீர எழுச்சியுறும் வகையில் வானதிர முழங்கி, ஒருவகைப் பேரருளை உருவாக்குகின்ற தருணத்தில், குலகுரு வீரமகனுக்கு வீரத்திலகமிட்டு, தான் வளர்த்தெடுத்த குழந்தைக்கு உச்சி முகர்ந்து, உள்ளம் நெகிழ்ந்து, நல்லாசி வழங்கி, அட்சதை தூவியவுடன், அங்கு சூழ்ந்திருக்கும் பெருங்கூட்டத்தினரிடமிருந்து மலர்த் தூவல்களும் வீரமுழக்கங்களும் வானுயர எழும்பும்.
அப்போது தாங்கள் கொண்டு வந்திருக்கும் மங்கள உறுப்புப் பொருட்களைக் கொண்டு இளவலுக்கு ஆரத்திகளை சாலினிப் பெண்கள் செய்யும்போது மங்கள ஆரத்திப் பாடல்களைப் பெருங்கூட்டத்தினர் அனைவரும் ஒன்றாகப் பாடுவார்கள்.
-அடிகளார் மு.அருளானந்தம்
தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்