மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'சமயமும் தமிழும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், ஆண்டாள் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
மாதங்களில் நான் மார்கழி என்றான் கண்ணன். மார்கழி தொடங்கிவிட்டால் மகோற்சவங்கள் எல்லா இடங்களிலும் நடைபெறுகின்றன. இந்த மார்கழி திங்களில்தான் ஆண்டாள் நாச்சியார் அதிகாலை துயிலெழுந்து, உறங்கிக்கொண்டிருந்த தன் தோழிகளை எழுப்பி கண்ணனை சேவிப்பதற்கு அழைக்கின்ற காட்சிகளை தமிழ் இலக்கியத்தில் பார்க்க முடிகிறது. அதை ஆண்டாள் பதிவு செய்கிற முறையும் விதமும் ஆண்டாளின் தனித்துவத்தைக் காட்டுகிறது. ஆண்டாள் மீது கொண்ட காதலால் கண்ணனே நாச்சியார் திருக்கோலத்தில் ஒருநாள் இருந்தான் என்பதுதான் வரலாறு.
அதிகாலை எழச் சொல்லி, உறக்கத்தை கலைக்கச் சொல்லி, மனதில் நம்பிக்கையை நட்டு வைக்கிறாள் ஆண்டாள். பஞ்ச பூதங்களுக்கு இல்லாத ஆற்றல் ஒரு பாடலுக்கு இருக்கும் என்பதை தன்னுடைய வீச்சு மிகுந்த பாட்டின் மூலம் பதிவு செய்திருக்கிறாள்.
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்,
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்,
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்,
நாரா யணனே நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.
ஆண்டாளின் இந்தப் பாடலை படிக்கும்போதே குற்றால குதூகலம் நம்மிடத்தில் குடிகொண்டுவிடுகிறது. தமிழ்நாட்டின் பண்பாட்டு வரலாற்றில் அதிகாலை எழுந்து, நீராடி, வாசலில் கோலமிட்டு வழிபடும் பழக்கம் இன்றைக்கும் தொடர்கிறது. அதை நடைமுறைப்படுத்தியதில் ஆண்டாள் வெற்றிபெற்றிருக்கிறார்.
மார்கழி மாதத்தில் அதிகாலை பாட்டு பாடிக்கொண்டு கூட்டமாக செல்கிறார்கள். பாட்டும் இசையும் தமிழ்ப்பண்பாட்டின் இரண்டு கண்கள். ஆண்டாள் பாடியிருக்கும் பாடல் 12 ஆழ்வார்கள் பாடிய பாடல்களிலும் உச்சத்தை தொட்டது. கண்ணனே நாச்சியார் திருக்கோலத்தில் அமர்ந்து அவனை சேவிப்பதற்கு வழிகாட்டினான் என்றால் அதிலிருந்தே ஆண்டாள் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம். மார்கழி மாதத்தில் மேற்கொள்ளும் இந்தத் தவம் கல்யாணமாகாத கன்னிப் பெண்களின் வாழ்வில் திருப்பமும் விருப்பமும் நிறைவேறுவதற்கு பலனளிக்கும் என்ற நம்பிக்கை இந்த மண்ணில் இருந்துவருகிறது. அதனால்தான் மார்கழி மாதத்தை தமிழ்ப்பண்பாட்டோடு பொருத்தினார்கள்.
ஒரு மனிதன் என்னை கல்யாணம் செய்துகொள்வான் என்றால் அதை நான் ஏற்கமாட்டேன். எனக்கு கல்யாணம் என்ற ஒன்று உண்டு என்றால் அது கண்ணனோடுதான். அவன்தான் என் மணாளன் என்று சொல்லி கண்ணனை காதலித்தாள் ஆண்டாள். அதற்காகவே நோன்பிருந்து அவள் சூடிக்கொடுத்த சுடர்கொடியை கண்ணன் ஏற்றுக்கொண்டான். தமிழிலக்கியத்தில் ஆண்டாள் ஏற்படுத்திய இத்தகைய தாக்கத்தால்தான் ஆண்டாள் தமிழை ஆண்டாள் என்று அர்த்தமுள்ள இந்து மதத்தில் கண்ணதாசன் எழுதினார்.