Skip to main content

கொலையுண்ட மகனை உயிர்ப்பித்த சிவன்; ‘குஷ்மேஷ்வர் ஜோதி லிங்கம்’ சிவாலயத்தின் கதை

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

ghushmeshwar jyotirlinga  temple story

 

குஸ்மேஷ்வர் நாத் மந்திர் என்பதொரு சிவாலயம். இந்த ஆலயம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பஹேலா என்னுமிடத்தில் பிரதாப்காட் மாவட்டத்தில் இருக்கிறது. ‌வேத காலத்தில் கூறப்படும் "ஸை' என்னும் நதியின் கரையில் ஆலயம் உள்ளது. குட்ஸார்நாத் மந்திர் என்ற பெயரிலும் இந்த ஆலயம் அழைக்கப்படுகிறது. சிவபுராணத்தில் இந்த கோவிலைப் பற்றிய கதை உள்ளது.

 

பரத்வாஜ வம்சத்தைச் சேர்ந்தவர் சுதர்மா. ஆற்றின் கரையில் இவரது வீடு இருந்தது. இவர் சிவபக்தர். எப்போதும் சிவனை வழிபட்டுக் கொண்டேயிருப்பார். இவருடைய மனைவியின் பெயர் சுதேஹா. வீட்டு வேலைகள் அனைத்தையும் பார்க்கும் அவள் தன் கணவருக்கு சேவை செய்வதிலும் மிகுந்த அக்கறையுடன் இருந்தாள்.

 

சுதர்மா அனைவரையும் மதிப்பார். தன் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை நன்கு உபசரிப்பார். தினமும் "அக்னிஹோத்ரம்' என்னும் சடங்கைச் செய்வார். மூன்று நேரங்களிலும் பூஜையில் ஈடுபடுவார். சூரியனைப் போல் அனைவரையும் அவர் ஈர்ப்பார். வேதத்தில் கூறப்பட்டிருக்கும் விஷயங்களைப் பின்பற்றி நடப்பார். அவர் தன் சீடர்களுக்கு வேதத்தைக் கற்றுத்தந்தார். வசதி படைத்தவராகவும் தர்மப்பிரபுவாகவும் இருந்த அவர் நல்ல மனம் கொண்டவராகவும் இருந்தார்.

 

எனினும் அவருக்கு வாரிசில்லை.அதற்காக அவர் கவலைப்படவில்லை. ஆனால் அவரது மனைவி கவலைப்பட்டாள். தனியாக அமர்ந்து கண்ணீர்விட்டு அழுதாள். குழந்தையில்லாத அவர்களை கேலியும் கிண்டலுமாக பலரும் பார்த்தார்கள். அதைத் தொடர்ந்து தன் தங்கையை இரண்டாவது மனைவியாக கணவருக்கு திருமணம் செய்துவைக்க அவள் தீர்மானித்தாள். ஆனால், அதற்கு ஒப்புக்கொள்ள சுதர்மா மறுத்தார். அவள் இந்த விஷயத்தில் மிகவும் பிடிவாதமாக இருக்க, இறுதியில் அவர் சம்மதித்தார். அக்காவின் விருப்பத்திற்கு தங்கையும் ஒப்புக்கொண்டாள்.

 

அவளது தங்கைக்கும் கணவருக்கும் திருமணம் நடந்தது. அவர்கள் மூவரும் தினமும் 100 சிவலிங்கங்களை களிமண்ணில் செய்து, அவற்றை அருகிலிருக்கும் குளத்தில் கொண்டுபோய் போடுவார்கள். இதையொரு சடங்காகவே அவர்கள் செய்து வந்தார்கள். தங்கை குஸ்மாவுக்கு சிவபெருமானின் அருளால் ஆண் குழந்தை பிறந்தது. ஆரம்பத்தில் அதற்காக சந்தோஷப்பட்ட அக்கா சுதேஹா காலப்போக்கில் தன் தங்கையின் மீது பொறாமை கொண்டாள்.

 

சிறுவன் வளர்ந்து வாலிபப்பருவம் எய்தினான். அவனுக்கு திருமணம் நடந்தது. மணப்பெண் வீட்டிற்கு வந்ததும் அவளைப் பார்த்து சுதேஹா எரிச்சலடைந்தாள். ஒருநாள் யாருமில்லாத நேரத்தில் தன் தங்கையின் மகனை சுதேஹா பல துண்டுகளாக வெட்டி, ஆற்றில் கொண்டுபோய் போட்டாள்.  இப்படிப்பட்ட கொடூரச் செயலைச் செய்து விட்டு எதுவுமே தெரியாததைப் போல அவள் இருந்தாள்.

 

புதிதாக வந்த மணப்பெண் மறுநாள் கண்விழிக்கும்போது தன் கணவன் இல்லாததைப் பார்த்து கண்ணீர்விட்டுக் கதறினாள். வீட்டில் சில இடங்களில் குருதிக்கறை இருப்பதை அவள் பார்த்தாள். எனினும் அதற்குப் பின்னணியில் நடந்திருக்கும் சதியை அவளால் தெரிந்துகொள்ள முடியவில்லை. இவ்வளவு நடந்த பிறகும் எதுவுமே நடக்காததைப் போல தினமும் சிவனுக்கு பூஜை செய்துகொண்டே இருந்தார் சுதர்மா. பூஜையில் கணவருக்கு உதவியாக இருந்தாள் குஸ்மா.

 

தன் மகன் படுத்திருந்த கட்டிலையே கவலையுடன் சுதர்மா பார்த்தார். தனக்கு குழந்தையை அளித்த சிவபெருமான் நிச்சயம் தனக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். தான் எப்போதும் செய்யக்கூடிய 100 மண் சிவலிங்கங்களை நீரில் போடுவதற்காக அவர் சென்றார்.

 

அப்போது அங்கு கரையில் தன் மகன் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். அதைப் பார்த்து அவர் சந்தோஷப்படவும் இல்லை; கவலைப்படவும் இல்லை. அனைத்துமே சிவனின் திருவிளையாடல்கள் என்று எண்ணிக்கொண்டார். அவருடன் குஸ்மாவும் அப்போதிருந்தாள். அவர்களுக்கு முன்னால் சிவபெருமான் ஜோதி வடிவத்தில் தோன்றி, "கொடூரச் செயலைச் செய்த சுதேஹாவை நான் வதம் செய்யட்டுமா?'' எனக் கேட்க, "வேண்டாம்'' எனக் கூறினாள் குஸ்மா.

 

ghushmeshwar jyotirlinga  temple story

 

மேலும், ஜோதி வடிவத்தில் சிவன் தோன்றிய இடத்திலேயே நிரந்தரமாக இருந்து மக்களுக்கு ஆசீர்வாதம் அளிக்க வேண்டுமென அவள் சிவனைக் கேட்டுக்கொண்டாள். அதற்கு சிவன் சம்மதித்தார். அந்த இடத்தில் தான் இப்போதைய ஆலயம் இருக்கிறது.

 

குஸ்மா கேட்ட வரத்தின்படி அமைந்த கோவில் என்பதால் அவளின் பெயரும் ஆலயத்தின் பெயருடன் சேர்ந்துகொண்டது. இதுதான் "குஸ்மேஷ்வர்நாத் மந்திர்' என்ற சிவாலயத்தின் கதை. இந்த ஆலயத்திற்கு வந்து நீராடிவிட்டு சிவனை வழிபடுபவர்களுக்கு அனைத்து பிரச்சினைகளும் தீருமென்பது நம்பிக்கை. இந்த ஆலயத்தைத் தேடி உலகமெங்குமுள்ள சிவபக்தர்கள் ஏராளமாக வருகிறார்கள். அலஹாபாத் நகரத்திலிருந்து 64 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த ஆலயம்.