கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி மாலை 5 மணியளவில் திறக்கப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் கோயில் நடை திறக்கப்பட்டு நெய் தீபம் ஏற்றப்பட்டது. கோயில் நடை திறக்கப்பட்டு முக்கிய நிகழ்வாக கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சுமார் 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் சபரிமலையில் தரிசன நேரம் நாளை (11.12.2023) முதல் 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மாலை 4 மணிக்கு பதில் மதியம் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட உள்ளனர்.
வழக்கமாக சபரிமலையில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பின்னர் மதியம் 1 மணிக்கு நடை சாத்தப்படும். பிறகு மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு மணி நேரம் கூடுதலாக நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சபரிமலை நடை திறப்பு காரணமாகத் தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.