Skip to main content

திசைகளும் பலன்களும் - வீட்டு பூஜை குறிப்புகள்: 03

Published on 11/02/2023 | Edited on 11/02/2023

 

Directions and Benefits - Home Pooja Tips: 3

 

*வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்துசேரும். ஏனெனில் வலம்புரிச் சங்கில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு.

 

*நிர்மால்யம் என்பது பூஜையின் முதல்நாள் போட்டு வாடிய புஷ்பங்களைக் குறிக்கும். நிர்மால்யங்களை காலில் படாமல் கண்களில் ஒற்றிக்கொண்டு தாம்பாளம், கூடையில் போட்டு வைத்திருந்து ஓடும் தண்ணீரில் விடவேண்டும்.

 

*செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வெண்ணெய் உருக்கக்கூடாது. காரணம், மேற்படி கிழமைகள் லட்சுமிக்கு உகந்தவை ஆதலாலும், வெண்ணெய்யில் மகாலட்சுமி இருப்பதாலுமே வெண்ணெய் உருக்கக்கூடாது என்பார்கள்.

 

*உறவினர்களை வெளியூர் செல்ல வழியனுப்பியபிறகு பூஜை முதலியவற்றை செய்யக்கூடாது.

 

*பெரியவர்களும், சிறுவர்களும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றை வாய்விட்டு தினமும் படிக்கவேண்டும். வாய்விட்டுப் படிப்பதால் குரல் உறுப்புகள் பலம் கொள்ளும். அதனால் மார்பு ஆரோக்கியம் பெறும். சுவாசப் பைகளுக்கும் நல்லது.

 

*பூஜை செய்யும் நேரத்திலாவது பெண்கள் ஸ்டிக்கர் பொட்டு அணியாது, குங்குமம் இட்டுக்கொள்ள வேண்டும்.

 

*பெண்கள் நெற்றி வகிடு ஆரம்பத்தில் குங்குமப் பொட்டு கட்டாயம் வைக்கவேண்டும். மகாலட்சுமியும், அம்பாளும் வகிட்டில் தான் நிரந்தர வாசம் செய்வதால், சுமங்கலிகளுக்கு சகல சௌபாக்கியங்களையும் மங்களத்தையும் அளிப்பார்கள்.

 

*வெள்ளியன்று குத்துவிளக்கிற்கு குங்குமம், சந்தனப் பொட்டிட்டு, பூ சாற்றி, குங்குமம், புஷ்பம், மஞ்சள், அட்சதையால் குத்துவிளக்குப் பூஜைசெய்வது குடும்ப நலத்திற்கு நல்லது.

 

*வீட்டில் துளசியை வளர்ப்பது மிகச்சிறப்பு. காலையில் எழுந்ததும் துளசியை தரிசிப்பதால் தீவினைகள் மறையும். தானம் கொடுக்கும்போது சிறிது துளசியுடன் தானம் கொடுக்கவேண்டும். துளசியோடு தரப்படாத தானம் வீண்.

 

*பூஜையறையில் தெய்வங்களுக்குப் படைப்பதற்கு வெற்றிலை, பாக்கு வைக்கவேண்டும். சீவல் பொட்டலத்தை வைக்கக்கூடாது. வெற்றிலையை இரட்டைப் படை எண்ணிக்கையில்தான் வைக்கவேண்டும். இரண்டு வெற்றிலைக்கு ஒரு பாக்கு என்ற கணக்கில், எவ்வளவு வெற்றிலை வைக்கிறோமோ அந்த அளவு பாக்கு வைக்கவேண்டும்.

 

*வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பைக் கிள்ளிவிட்டு வெற்றிலையைக் கழுவியபின் பூஜைக்கு வைக்கவேண்டும்.

 

*வெற்றிலையின் நுனிப்பாகமானது சுவாமிக்கு இடப்புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப்பகுதி சுவாமிக்கு வலப்புறம் இருக்கும்.

 

*சுவாமிக்குப் படைக்கும்போது வாழையிலை போட்டுப் படைக்கிறோம். அப்படி இலை போடும்போது வாழை மரத்திலிருந்து நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலப்பக்கம் வரவேண்டும்.

 

*மாலையில் வீட்டில் விளக்கேற்றுவதற்கு முன் தான தர்மம் செய்வதென்றால் செய்துவிடுங்கள். விளக்கேற்றிய பின் தான தர்மம் செய்யாதீர்கள்.

 

*குழந்தைகளுக்கு ஆன்மிக வழிகாட்டும் சுலோகங்களையும், நமது நீதி நூல்களிலுள்ள நல்ல பழக்க வழக்கங்களையும் கற்றுத்தர வேண்டும்.

 

*பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து முடிச்சுப் போட்டுக்கொள்ள வேண்டும். தலையை விரித்துப் போட்டிருந்தால் லட்சுமிதேவி தங்கமாட்டாள்.

 

*பூஜை செய்யும்போது கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப் பூக்களால் மறைத்துவிடக் கூடாது. முகமும் பாதங்களும் திறந்து நிலையில் இருக்க வேண்டும்.

 

* செல்வத்திற்குரிய தெய்வங்களான வேங்கடாசலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்திருக்குமாறு மாட்டக்கூடாது.

 

*பூஜையறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்கவேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்கு திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக்கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால், தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்துப் படங்களை வைக்கவும்.

 

*பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்த வண்ணம் அமர்ந்து பூஜை செய்யக்கூடாது.

 

*பூஜையறையில் அதிக படங்களையும், தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம் என்பதற்காக, அவற்றை நெருக்கமாக வைக்கக்கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும் இடையில் போதிய இடம்விட்டு வைக்கவேண்டும்.

 

*நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சுவாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

 

*அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து, அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.

 

*திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்குத் திரியைக் கையால் தொடக்கூடாது.

 

*தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்குச் செல்லக்கூடாது.

 

*எரியும் விளக்கிலுள்ள எண்ணெய் அல்லது நெய்யைக் கையால் தொடுவதும், அதன்பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.

 

*சுவாமி படங்களில் உலர்ந்த பூக்களை அப்படியே விட்டுவைக்கக் கூடாது.

 

*விஷ்ணுவை வணங்கி வீடு திரும்பும்போது, லட்சுமிதேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்பும் முன் அங்கே உட்காரக் கூடாது.

 

*ஸ்வஸ்திக், ஸ்ரீசக்கரம், ஓம் மற்றும் திரிசூல சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டிவைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது சட்டைப் பையிலும் வைத்துக்கொள்ளலாம்.

 

*வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி, தனலாபம் அளிக்க வல்லது.