Skip to main content

தொழிலில் லாபத்தை அனுபவிக்கும் ஜாதக அமைப்புகள்

Published on 11/05/2019 | Edited on 11/05/2019

ஒருவருக்கு எவ்வளவு திறமைகள், கல்வித் தகுதி, மற்றவர்களின் உதவி இருந்தாலும், சம்பாதிக்கக்கூடிய யோகம் ஜாதகரீதியாக அமைந்திருக்க வேண்டும். எல்லாருக்கும் எல்லா காலங்களிலும் சம்பாதிக்கும் வாய்ப்பு அமையாது. மற்றவர்கள் கொடுத்தும் ஒருவரின் வாழ்க்கைத் தரமானது உயர்ந்துவிடாது. வாழ்நாள் முழுவதும் சம்பாதித்து லாபத்தை அடைந்தவர்களும் இல்லை. அதுபோல நஷ்டத்தை அடைந்தவர்களும் இல்லை.

ஒருவரின் ஜாதகத்தில் ஒரே ஒரு தசையானது சிறப்பாக வேலை செய்தால் மட்டும் போதும். அவரின் வாழ்நாள் முழுவதும் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் அளவுக்கு செல்வம் சேர்ந்துவிடுவது மட்டுமின்றி, அவரின் சந்ததியினருக்கும் போதிய அளவு சேர்த்து வைத்துவிடமுடியும். சமுதாயத்திலும் ஓர் உயர்வான அந்தஸ்தினை அடையக்கூடிய அளவுக்கு சக்தியையும் கொடுக்கும். ஒருவருக்கு சொந்தத் தொழிலானது சிறப்பாக அமைய வேண்டுமானால் 10-ஆம் வீட்டின் அதிபதியும், 10-ஆம் வீடும் பலமாக இருப்பது மட்டுமின்றி, அவருக்கு நடக்கும் தசாபுக்தி பலமாக இருத்தல் அவசியம்.
 

god



நவகிரகங்களின் சுழற்சிமுறையில் நம்மை ஆட்சிசெய்வது தசா புக்திதான். ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறக்கின்றாரோ அந்த நட்சத்திரத்தின் அதிபதியின் தசை முதலில் நடக்கும். அடுத்தடுத்து மற்ற கிரகங்களின் தசைகள் சுழற்சிமுறையில் நடைபெறும். நவகிரகங்களின் மொத்த தசா காலங்கள் 120 வருடங்களாகும். தசையின் உட்பிரிவாக ஒன்பது கிரகங்களின் புக்திகள் நடைபெறும். தசா புக்திகளின் காலம் 120 வருடங்கள் என்பதனால், எல்லா தசைகளும் ஒருவரை ஆதிக்கம் செய்யமுடியாது. அவர் வாழும் கால அளவை வைத்தே கிரகங்களின் ஆதிக்கமும் இருக்கும். ஒருவர் வாழ்வில் முன்னேற்றமான பலனைப் பெறவேண்டுமானால் அவரின் ஜாதகத்தில் அதற்கேற்ற யோகங்கள் அமைந்திருக்க வேண்டும். யோகங்கள் அமைவது மட்டுமின்றி அந்த யோகத்தைத் தரக்கூடிய கிரகங்களின் தசாபுக்தியும் அவரின் வாழ்நாளில் வரவேண்டும். அதிலும் தொழிலில் லாபத்தையடைய தொழில் செய்யும் காலத்தில் வரவேண்டும். நடக்கக்கூடிய தசையானது பலம்பெற்ற கிரகத்தின் தசையாகவும் இருக்குமேயானால் எதிர்பார்க்கும் லாபத்தையும் முன்னேற்றத்தையும் அடையமுடியும்.

ஜென்ம லக்னத்திற்கு கேந்திர ஸ்தானங்களாகிய 1, 4, 7, 10-ஆம் வீட்டிலும், திரிகோண ஸ்தானங்களாகிய 1, 5, 9-ஆம் வீட்டிலும், தன, லாப ஸ்தானங்களாகிய 2, 11-ஆம் வீட்டிலும் நவகிரகங்கள் அமையப்பெற்று, அதன் தசாபுக்திகள் நடைபெறும் காலங்களில் நற்பலன்கள் உண்டாகும். என்றாலும், சுபகிரகங்களான குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், சுபர் சேர்க்கைப் பெற்ற புதன் ஆகியவை 1, 4, 5, 7, 9, 10-ல் அமைவதும், பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு, தேய்பிறைச் சந்திரன், பாவிகள் சேர்க்கை பெற்ற புதன் ஆகியவை திரிகோண ஸ்தானங்களைவிட உபஜய ஸ்தானங்களான 3, 6, 10, 11-ல் அமைவதும் நல்லது. 

நவகிரகங்கள் வலுப்பெற்று சாதகமாக அமையப்பெற்றால் தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிடைக்கும். அதுவே நடக்கக்கூடிய தசையானது மறைவு ஸ்தானங்களின் அதிபதிகளுடைய தசையாகவோ, மறைவு ஸ்தானங்களில் அமையப்பெற்ற கிரகங்களின் தசையாகவோ இருந்தாலும் (சுபர் 3, 6, 8, 12, பாவிகள் 8, 12) ஜென்ம லக்னத்திற்கு பாதகாதிபதியின் தசை, பாதகாதிபதி சாரம் பெற்ற கிரகங்களின் தசை, பாதக ஸ்தானத்தில் அமையப் பெற்ற கிரகங்களின் தசைகளாக இருந்தாலும், கிரகங்கள் வக்ரம் பெற்றிருந்தாலும் தொழிலில் லாபங்கள், முன்னேற்றங்கள் ஏற்பட இடையூறுகள் உண்டாகும்.

என்னதான் தொழில் செய்தாலும் சிலருக்கு வரக்கூடிய லாபமானது வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும். சேமிக்கமுடியாமல் போகும். ஆனால் ஒருசிலருக்கோ தொழில்மூலம் அபரிமிதமான லாபம் கிடைக்கப்பெற்று அதன்மூலம் வீடு, மனை, வண்டி, வாகன சேர்க்கைகள், சுகமாக வாழும் யோகம் போன்ற யாவும் சிறப்பாக அமையும். இப்படி யோகமாக வாழும் வாய்ப்பு யாருக்கு அமைகிறது என்று ஆராய்ந்தால், சுக்கிரன், புதன், சனி, ராகு போன்ற கிரகங்களின் தசைகள் நடைபெறும்போது நன்றாக சம்பாதிக்கக்கூடிய யோகம் தொழில்ரீதியாக உண்டாகிறது. சூரியன், சந்திரன், குரு, செவ்வாய், கேது நடப்பில் இருப்பவர்கள் தொழிலில்பெரிய அளவில் லாபத்தை அடைவதில்லை. எனவே தொழில்ரீதியாக ஒருவர் முன்னேற்றமடைய வேண்டுமானால், யோகமான ஜாதகத்தில் பிறந்திருந்தாலும் நடக்கக்கூடிய தசாபுக்தியானது பலமாக இருந்தால் மட்டுமே சிறந்த லாபத்தைப் பெற்று வாழ்வில் முன்னேற்றமடைய முடியும்.