புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வில்லுனி ஆற்றங்கரையில் உள்ள பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோயில் அப்பகுதி மக்களால் பெரிய கோயில் என்று அழைக்கப்படுகிறது. கோயில் முன்பு அமைக்கப்பட்டுள்ள 35 அடி உயரமுள்ள பிரமாண்டமான குதிரை சிலை அய்யனாரின் வாகனமாக இன்றளவும் பக்தர்களால் பார்க்கப்படுகிறது. இந்த குதிரை சிலை ஆசியாவிலே உயரமான குதிரை சிலை என்றும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத் திருவிழா மகாமகத்திற்கு இணையாக பக்தர்கள் கூடும் திருவிழாவாக நடத்தப்படுகிறது. மாசி பௌர்ணமி நாளில் நடத்தப்படும் மாசிமகத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பிரமாண்ட குதிரை சிலைக்கு நேர்த்திக்கடன் உள்ள பக்தர்கள் காகிதப் பூ மாலைகள் அணிவிப்பதே சிறப்பு.
35 அடி உயரம் கொண்ட மாலைகளை கார், வேன், லாரி போன்ற வாகனங்களில் ஏற்றி வந்து குதிரை சிலைக்கு அணிவித்து அய்யனாரை தரிசனம் செய்வதால் மன அமைதி கிடைப்பதாக கூறுகின்றனர் பக்தர்கள். தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு மாலைகளுடன் வருவர். கொரோனா முழு ஊரடங்கு காலத்தில் கூட தடையின்றி திருவிழா நடத்தப்பட்ட ஒரே கோயில் பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோயில் தான் என்ற பெருமையும் உண்டு.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 ஆயிரம் மாலைகள் வரை குதிரை சிலைக்கு அணிவிக்கப்படும் கடந்த ஆண்டு 2200 மாலைகள் வரை அணிவிக்கப்பட்டது. கடந்த சில வருடங்களாக மாலைகள் அதிகம் வரும் என்பதால் முதல் நாளே கிராமத்தின் முதல் மாலை அணிவிக்கப்படுவது போல இந்த ஆண்டும் தொடங்கியது. அமைச்சர் மெய்யநாதனும் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்து மாலை அணிவித்தார். ஆனால் இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் திங்கள் கிழமை இரவு 10 மணி வரை 2750 மாலைகள் அணிவிக்கப்பட்ட நிலையில் சுமார் 200 மாலைகள் ஏற்றப்பட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தது. "பெரிய கோயில் வரலாற்றிலேயே முதன் முறையாக 2700 மாலைகளை கடந்துள்ளது" என்று பெருமையாக கூறுகின்றனர்.
மாசிமகத் திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்கு கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், பனங்குளம் உள்பட பல கிராமங்களிலும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானமும், 100க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் பந்தல்களும் அமைக்கப்பட்டிருந்தது. கீரமங்கலம் மேற்கு பேட்டை ஜமாத்தார்கள் பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோயில் பக்தர்களுக்காக தண்ணீர் பந்தல் அமைத்து குடிநீர் பாட்டில்கள் வழங்கி சிறப்பித்திருந்தனர். இன்று செவ்வாய்க்கிழமை இரவு தெப்பத்திருவிழாவும் நடக்கிறது.