Skip to main content

”சில நேரங்களில் பரிகாரங்கள் ஏன் பலிப்பதில்லை?” - ஜோதிடர் எம்.வி.நரநாராயணன் விளக்கம்

Published on 11/06/2022 | Edited on 13/06/2022

 

mv naranarayanan

 

பஞ்சாங்க கணிதக் கலாமணி எம்.வி.நரநாராயணன், நக்கீரனின் ஆன்மீக யூடியூப் தளமான 'ஓம் சரவண பவ'வில் ஜோதிடம் குறித்த பல்வேறு விஷயங்களைப் பேசிவருகிறார். அந்த வகையில், விரும்பியது நடக்க வேண்டும் என்பதற்காக செய்யும் பரிகாரங்கள் சில நேரங்களில் ஏன் பலிப்பதில்லை என்பது குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

நினைத்தது நடக்க வேண்டும் என்பதற்காக அனைவரும் பரிகாரம் செய்கிறார்கள். ஆனால், அதில் பல பரிகாரங்கள் பலிப்பதில்லை. அதற்கு காரணம் என்ன?

 

நாம் நினைத்த நாட்களிலும் நமக்கு வசதியான நாட்களிலும் பரிகாரம் செய்வது மிகப்பெரிய தவறு. நம்முடைய நட்சத்திரத்திற்கு எந்தத் தினத்தில் தாராபலன் இருக்கிறதோ அன்றைய தினத்தில்தான் பரிகாரம் செய்ய வேண்டும். அதேபோல எந்தத் தேவதைக்கு பரிகாரம் செய்கிறோமோ அந்த நாள் அந்தத் தேவதைக்கு உரிய நாளாக இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். எல்லா நாளும் இறைவனுக்கான நாள்தான் என்று நினைத்து நமக்கு வசதியான தினத்தில் பரிகாரம் செய்தால் நிச்சயம் அந்தப் பரிகாரம் பலிக்காது.

 

பிரார்த்தனையின் மூலம் செய்யும் பரிகாரங்கள்தான் வெற்றியைத் தரும். வெறும் சடங்காக செய்யும் பரிகாரம் வெற்றியைத் கொடுக்காது. நமக்கு தாராபலன் இல்லாத நாட்களில் செய்யும் பரிகாரம் சில நேரங்களில் நமக்கு எதிராகவே அமைந்துவிடும். நம்முடைய நட்சத்திரத்திற்கு மூன்றாவது நட்சத்திரம் விபத்து தாரை. அந்த நாளில் பரிகாரம் செய்தால் நமக்கு பலன் கிடைக்காமல் போவது மட்டுமின்றி சில துன்பங்களையும் அனுபவிக்க நேரிடும். அதேபோல நம்முடைய ஜென்ம நட்சத்திரத்திற்கு ஐந்தாவது நட்சத்திரம் பிரத்யக்கு தாரை. பிரத்யக்கு என்றால் காரிய நாசம் என்று பொருள். அந்தத் தினத்தில் செய்யும் பரிகாரம் காரிய நாசத்தைத்தான் ஏற்படுத்தும். ஏழாவது நட்சத்திரமான வதை தாரையில் பரிகாரம் செய்தால் வாழ்நாள் முழுக்க துன்பத்தை அனுபவிக்க நேரிடும். எனவே மூன்றாவது,ஐந்தாவது, எழாவது நட்சத்திரத்தில் பரிகாரம் செய்யாதீர்கள். 

 

நதிக்கரையில் பரிகாரம் செய்கிறீர்கள் என்றால் சில மாதங்கள்தான் அதற்கு உகந்த மாதங்கள். சித்திரை மாதம் அமாவசைக்கு அடுத்த நாளிலிருந்து அடுத்த முப்பது நாட்களில் நதிக்கரையில் பரிகாரம் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். அதேநேரத்தில் அந்த நட்சத்திரம் உங்களுக்கு நல்ல நட்சத்திரமாக இருக்கிறதா என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்வது நல்லது. ஐப்பசி மாதம் அமாவசைக்கு அடுத்துவரும் பிரதமை முதல் கார்த்திகை மாத அமாவாசை வரையிலான ஒரு மாத காலத்தில் செய்யும் பரிகாரம் உறுதியாக வெற்றியைத் தரும். அதேபோல தை மாத அமாவசைக்கு பிறகான அடுத்த ஒரு மாதமும் பரிகாரத்திற்கு உகந்தது. 

 

பரிகாரத்திற்கு உகந்த நாட்கள் அல்லாத நாட்களில் செய்யும் பரிகாரம் எந்த நன்மையையும் உங்களுக்கு வழங்காது. ஒருவேளை உங்களுக்கு நல்லது நடந்தால் அது உங்களது ஜாதக பலன்களால் கிடைத்திருக்கும். எனவே இனி பரிகாரம் செய்யும் முன் உங்களது நட்சத்திரத்திற்கு ஏற்ற நாளை தேர்ந்தெடுத்து, அன்றைய தினத்தில் பரிகாரம் செய்து எதிர்பார்த்த பலனை அடையுங்கள்.