உலகின் ஒரே வெப்பமண்டல பனிக்கரடியான சிங்கப்பூரைச் சேர்ந்த இனுக்கா இன்று கருணைக்கொலை மூலம் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பனிக்கரடிகள் துருவ மண்டலங்களில் மட்டுமே உயிர்வாழும் தன்மை கொண்டவை. ஆனால், கனடாவைச் சேர்ந்த நனூக் என்ற ஆண் கரடிக்கும், ஷெபா எனும் ஜெர்மனியைச் சேர்ந்த பெண் கரடிக்கும் சிங்கப்பூரில் பிறந்த ஆண் கரடி இனுக்கா வெப்பமண்டலத்தில் வளர்ந்த ஒரே பனிக்கரடி. என்னதான் துருவக்கரடியாக இருந்தாலும், இனுக்காவை செல்லப்பிள்ளை போல பார்த்துக்கொண்ட உயிரியல் பூங்கா நிர்வாகம், பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி அங்கேயே வளர்ப்பதற்கான வழிகளை உருவாக்கியது. பூங்காவின் உள்ளேயே துருவ மண்டலத்திற்கான இயற்கைச் சூழல் செயற்கையாக உருவாக்கப்பட்டு அதில் இனுக்கா பாதுகாக்கப்பட்டது. இனுக்காவும் இயல்பாகவே அந்த இடத்தைத் தகவமைத்து வாழ்ந்துவந்தது.

இருந்தாலும், பருவ நிலைச் சூழல், உடல்நலக்கோளாறு, வயது முதிர்ச்சி போன்ற பிரச்சனைகள் இனுக்காவின் கடைசி ஐந்து ஆண்டுகளை சுக்குநூறாக சிதைத்துவிட்டன. கீல்வாதம், பல் மற்றும் காதுகளில் ஏற்பட்ட தொற்று, அழகிய ரோமங்கள் உதிர்வு மற்றும் உடலின் மேற்பரப்பில் பச்சை நிற பூஞ்சை படர்தல் என இனுக்காவை எல்லாமும் சேர்ந்து பாடாய்ப் படுத்திவிட்டன. இனுக்காவின் இந்த நிலை பலரையும் வருத்தத்தில் ஆழ்த்த, கடந்த ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி இனிக்காவின் 27ஆவது பிறந்ததினத்தை பிரமாண்டமாக கொண்டாடியது உயிரியல் பூங்கா. நாட்கள் நகர, நகர இனுக்காவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், கருணைக்கொலை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இன்று காலை இனுக்காவை கருணைக்கொலை செய்ததாக சிங்கப்பூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

இனுக்கா என்ற பெயர் 390 பரிந்துரைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று. அது அந்த நாட்டின் அடையாளமாகவே வாழ்ந்துவிட்டு மறைந்திருக்கிறது. உலகின் ஒரே வெப்ப மண்டல பனிக்கரடியான இனுக்கா இன்று உயிரோடு இல்லை. சிங்கப்பூரின் கடைசி பனிக்கரடி தான்தான் என்ற செய்தியையும், பலநூறு நினைவுகளையும் விட்டுச் சென்றிருக்கிறது இனுக்கா.