கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை பிரிட்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் செய்தி நிறுவனமான பிபிசி வெளியிட்டுள்ளது. அதில், குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ரகசிய விசாரணை மேற்கொண்டதாகவும், அதில் அப்போதைய முதல்வர் மோடி தலைமையிலான குஜராத் அரசு திட்டமிட்டே இந்த கலவரத்தை நடத்தியதாகக் கண்டுபிடிக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும், குஜராத் கலவரத்திற்கு மோடியே நேரடி பொறுப்பு என்றும், இது குறித்து அவரிடம் விசாரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 'இந்தியா: மோடிக்கான கேள்வி' (India: The Modi Question) என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜகவை விமர்சனம் செய்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த ஆவணப்படத்திற்கு கடும் கண்டங்கள் தெரிவித்ததோடு, யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆவணப்படத்தை வெளியிடத் தடை விதித்துள்ளது. இது பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் செயல் என பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர், உலகம் முழுவதும் பத்திரிகை சுதந்திரம் முக்கியம் என்பதற்கு நாங்கள் ஆதரவு தெரிவித்து வருகிறோம். கருத்து சுதந்திரம், மதம் அல்லது அதுசார்ந்த நம்பிக்கையில் சுதந்திரம் போன்ற ஜனநாயக் கொள்கையை முன்னிலைப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே 'இந்தியா: மோடிக்கான கேள்வி' ஆவணப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசு ஆவணப்படத்திற்கு தடை விதித்திருந்தாலும், சில இணையதளங்களில் கசிந்ததால், பரபரப்பை கிளப்பியுள்ளது. மேலும் இரண்டு ஆவணப்படங்களையும் பார்த்தவர்கள் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்தும், சிலர் இது பொய்யான தகவல் என்றும் கூறி வருகின்றனர்.