ரஷ்யப் படைகள் உக்ரைனைத் தாக்கி வருவதால், விமான வழித்தட வரைபடம் பெரும் மாற்றம் கண்டுள்ளது.
ரஷ்யாவின் தாக்குதல் நீடிக்கும் நிலையில், உக்ரைன் நாட்டின் ஒட்டுமொத்த விமான போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. அதன் அண்டை நாடான மால்டோவா விமானங்கள் பறக்கத் தடை விதித்துள்ளது. ரஷ்யாவின் ஆதரவு நாடான பெலாரஸில் சிவில் விமான போக்குவரத்துக்கு தனது வான்வெளியைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது.
ரஷ்யாவின் மேற்கு பகுதியில் உக்ரைன்- பெலாரஸ் வான்வெளியில் விமான பயணத்திற்கு ஆபத்தானவை என ஐரோப்பிய யூனியன் விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. போர் விமானமா, சரக்கு மற்றும் பயணிகள் விமானமா என அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மற்றும் அதன் எல்லையோர நாடுகளுக்கு பயணிகள் விமான சேவையை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. இதனால் ரஷ்யா, உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே விமான போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. மற்ற நாடுகளின் விமானங்களும், உக்ரைன் வான்வெளியைப் பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விமான போக்குவரத்துக்கான வரைபடமே ஐரோப்பிய கண்டத்தில் தற்போது மாறியுள்ளது.
பல நாடுகளின் விமானங்கள் பல நூறு மைல்களுக்கு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உக்ரைன்- ரஷ்யா போரால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்து, ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விமான சேவையிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் விமான நிறுவனங்கள் செய்வதறியாது தவித்து வருகின்றன.